கடலுக்கு அடியில் சிக்குபுக்கு!

ரே கல்லில் ரெண்டு மாங்கா. ‘இந்தியாவுக்கு வரப்போகுது புல்லட் ட்ரெயின்’ என்ற காத்துவாக்கு செய்தியைப் பல வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதற்கான வேலைகள் ஆரம்பமாகிறதாம். இது இந்தியாவின் முதல் புல்லட் ட்ரெயின் மட்டுமல்ல, கடலுக்கு அடியிலும் பயணிக்கப்போகும் இந்தியாவின் முதல் புல்லட் ட்ரெயின்!

மும்பை டு அஹமதாபாத் இடையேயான 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவிருக்கிறது இந்த புல்லட் ரயில் திட்டம். இதில், 21 கிலோமீட்டர் தூரப் பயணம் கடலுக்கு அடியில் இருக்கும். அட, இந்தியா அந்த அளவுக்கு வளர்ந்துடுச்சானு ஆச்சரியப்படாதீங்க பாஸ். ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ மாதிரி, இந்தத் திட்டத்திற்கான 81 சதவிகித நிதியை ஜப்பான் நாட்டில் இருந்து கடனாகப் பெற்றுக்கொள்கிறது இந்தியா. இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான மொத்தத் தொகை 97,636 கோடி ரூபாய்!

மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த புல்லட் ரயிலுக்கான ஆரம்ப வேலைகள் 2018-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும் 2023-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களில் பயணித்தால், மும்பை டு அஹமதாபாத் போக ஏழுமணி நேரம் ஆகும். இந்த புல்லட் ரயில் சேவை மூலம் ஒன்றரைமணி நேரத்தில் பறந்துவிடலாம். அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்குப் போக ஒருமணி நேரமும், சில நிமிடங்களும் போதும். ஜப்பான் நாட்டில் இருக்கும் புல்லட் ரயில் சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புல்லட் ரயில் சேவைகளையும் தனியார்வசம் ஒப்படைக்கும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

மக்களின் ரியாக்‌ஷன் என்ன? மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் மகத்தான சாதனை இது என்கிறார்கள் சிலர். இந்தியா வேற லெவலுக்குப் போகப்போகுது என சிலிர்த்துக்கொள்கிறார்கள் சிலர். பலரின் புலம்பலோ, ‘சொந்தக் காசுல நாலு ரயில் எக்ஸ்ட்ராவா விட முடியலை. எதுக்குக் கடன் வாங்கி புல்லட் ரயில்?’ ரகம்தான்!

எது எப்படியோ, புல்லட் ரயில் சேவை இந்தியா முழுக்கப் பரவும்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ‘சென்னைக்கு மிக அருகில்’தான்!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick