குற்றவாளிகள் ஜாக்கிரதை!

குற்றங்களைத் தடுக்க இப்போதெல்லாம் அமெரிக்கக் காவல் துறையினரைக் காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளது இந்தியக் காவல் துறை. வெளியே அதிகம் தெரியாத சில தகவல்கள் இங்கே...

சமீபத்திய இறக்குமதியாக The Recon Scout XT robot எனப்படும் வித்தியாசமான கையடக்க ரோபோட்களை வாங்கி இருக்கிறது இந்தியக் காவல் துறை. குழந்தைகள் விளையாடக்கூடிய கார் பொம்மை அளவுக்கு இருக்கும் இந்த வித்தியாச ரோபோட்களில் சென்ஸார்களும் அதி நவீன மைக்ரோ கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. எவ்வளவு வேகமாகவும் எவ்வளவு உயரத்திலிருந்தும் தூக்கி எறிந்தாலும் இந்த ரோபோட்கள் உடைந்து போகாது என்பது சிறப்பு. இதன் மூலம் எவ்வளவு மோசமான நில அமைப்பு கொண்ட இடத்திற்குள்ளும் சர்வசாதாரணமாய் இந்த ரோபோட் வாகனத்தை ரிமோட் மூலம் இருந்த இடத்திலிருந்தே இயக்கிப் படங்களையும் தகவல்களையும் துல்லியமாகப் பெற முடியும். அமெரிக்காவின் ரெக்கான் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த வகைக் கருவிகள் அவ்வளவு சீக்கிரத்தில் உடையாதாம்!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் shot spotters எனப்படும் தொழில்நுட்பத்தைக் காவல் துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது நகரின் முக்கியமான இடங்களில் எலெக்ட்ரானிக் சென்ஸார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். எங்கு துப்பாக்கித் தோட்டா வெடிக்கிறதோ உடனே சாட்டிலைட் கேமராவில் துல்லியமாக அந்தச் சம்பவம் நடந்த இடம், அதை இயக்கிய நபர் இருந்த திசை, தோட்டா பறந்த திசை, அவரின் துல்லியமான சாட்டிலைட் படங்கள் என அடுத்தடுத்து தகவல்களை அது தொகுத்துத் தரும். சென்னையில் இன்னும் வராவிட்டாலும் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப்பிறகு  இப்போது மும்பையில் முக்கியமான இடங்களில் சென்ஸார் பொருத்தப்பட்டு ஷாட் ஸ்பாட்டர்ஸ் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

T-Hawk Micro Air Vehicle (MAV) எனப்படும் கருவியை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண காவல் துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. எவ்வளவு மோசமான வானிலை அல்லது மோசமான கட்டட இடிபாடுகள் மற்றும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மிகத் துல்லியமாக ஆட்களை மீட்கவும், தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அழிக்கவும் ரிமோட் கருவி மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘இது பறப்பது எங்களின் பிரைவசி வாழ்க்கையைப் பாதிக்கிறது’ என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளதால் ஃப்ளோரிடா மாகாண போலீஸ், தேவைகளின்போது மட்டும் பயன்படுத்துகிறது. ஆம். அதேதான். இதே வாகனத்தை இப்போது மும்பை போலீஸ் நிறைய வாங்கி வைத்திருக்கிறது. ஆனால் இதுவரை ஒருமுறைகூட பயன்படுத்தவில்லை.

எல்லாம் சரி பாஸ். அமெரிக்காவில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் இருக்கும் ஒரு திட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவே நம் ஆட்களுக்கு முடியவில்லை என்பது தெரியுமா? சமீபத்தில் ‘சாலை விபத்துகளை இந்தியாவில் தடுக்க வேகத்தடைக்குப் பதிலாக 3டி படங்களை வரையும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அவரது யோசனைக்குப் பாதி பேர் வாழ்த்தி இருந்தார்கள். மீதிப் பேர் கழுவி ஊற்றி இருந்தார்கள். ‘இந்த ஓவியங்களால் ஒன்று குழப்பம் வரும். நிஜமான தடுப்புக்களைக்கூட ஓவியம் என்று நினைத்து வேகமாகக் கடந்து எகிடுதகிடாய் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு’ என்கிறார்கள் சிலர்.

ம்...அதுதானே பார்த்தோம்!
 

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick