கனடா கடோத்கஜா!

ரைச்சுற்றி வேடிக்கைப் பார்ப்பது பலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும். கனடாவின் டொரன்டோ மாகாணத்தில் வசிக்கும் பீட்டர் செர்வென்சிக்கோ ஊர் ஊராகப் போய் விதவிதமான உணவு வகைகளை வெளுத்துக்கட்டுவதுதான் முழுநேர வேலையே. இன்னும் ஒரு படி மேலே போய் உணவுகளை அசுர வேகத்தில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு தோசைகளை எக்ஸ்ட்ராவாக சாப்பிட்டாலே ‘தீனிப்பண்டாரம்’ எனப் பெயர் வைக்கும் நம் ஊர்க்காரர்கள் இவருக்கு ‘உலக மகா தீனிப்பண்டாரம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.

‘ஃப்யூரியஸ் பீட்’ (Furious Pete) என்னும் யூ டியூப் பக்கத்தை வலம் வந்தால், பீட்டர் பல நாட்டு உணவுகளை வெளுத்துக்கட்டும் வீடியோக்களைப் பார்க்கலாம். 116 கிலோ எடையுள்ள இந்த மனிதர் சாப்பிடுவது கொஞ்சநஞ்சம் அல்ல. டைனிங் டேபிள் சைஸில் இருக்கும் பீட்சாவை தனி ஒருவராக விளாசித்தள்ளுகிறார். ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு 12 பர்கர்களை லபக் லபக்கென உள்ளே தள்ளிவிட்டுத் தண்ணீரைக் குடிக்கிறார்.

நான்கு லிட்டர் கோக்கில் மென்ட்டாஸ் மிட்டாயையும் போட்டு மடக் மடக்கெனக் குடித்துவிட்டு கூலாக சிரிக்கிறார். பார்த்தாலே தொண்டை எரியும் கொடூரக்காரமான சில்லி சாஸ் பாட்டிலைக் குடித்துவிட்டு காரம் தாங்க முடியாமல் துடித்து ஐஸ்கிரீமை அள்ளி அப்பும் நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன.

கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 90-க்கும் அதிகமான சாப்பிடும் போட்டிகளில் கலந்துகொண்டு அவற்றில் ஆறு கின்னஸ் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார். முக்கால் லிட்டர் ஆலிவ் ஆயிலை 60 வினாடிகளில் குடித்ததும், 17 வாழைப்பழங்களை இரண்டு நிமிடத்தில் முழுங்கியதும் இவற்றில் அடங்கும்.

 

எப்போது ஆரம்பித்தது இந்த விபரீத விளையாட்டு? டீன் ஏஜில் ‘அனோரெக்ஸியா’ எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கடும் உடற்பயிற்சியால் மீண்டு வந்திருக்கிறார் பீட்டர். 2014-ம் ஆண்டில் கேன்சரால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையால் குணமடைந்தார். மீண்டும் கடந்த ஆன்டில் கேன்சர் தாக்கி திரும்பவும் மீண்டு வந்திருக்கிறார். சராசரி மனிதர்களைவிட மிக மெதுவான செரிமானத் திறனுடைய பீட்டர் அதை ஈடுகட்ட அதிக அளவிலான உணவை உட்கொண்டு அதிக உடற்பயிற்சிகளையும் செய்துவருகிறார். தனது செரிமானக் குறைபாட்டையே சாதனைகளாக்கினால் என்ன என யோசித்தவருக்கு பளிச்சென உதித்த ஐடியாதான் மேற்காணும் கின்னஸ் ரெக்கார்டு முயற்சிகள்.

‘எந்த நேரமும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறதெல்லாம் வாழ்க்கையா பாஸ்?’ என்கிறீர்களா. ஆமாம், இவரது வாழ்க்கையும் ‘தி ஸ்டோரி ஆஃப் ஃப்யூரியஸ் பீட்’ எனும் பெயரில் டாக்குமென்ட்ரி படமாகியிருக்கிறது. அதிலும் இந்த மனுஷன் நாடு நாடாகப்போய் விதவிதமாய் அள்ளி அமுக்கி நம்மை வெறுப்பேற்றியிருக்கிறார்.

மெதுவா தின்னுய்யா... விக்கிக்கப்போகுது!

பீட்டர் சாப்பிடுவதைப் பார்த்து நீங்களும் கண் கலங்க... https://www.youtube.com/channel/UCspJ-h5Mw9_zeEhJDzMpkkA லிங்க் போங்க!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick