மகளிர் மட்டும்!

லேடீஸ் ஹாஸ்டலுக்குள் எட்டிப்பார்த்தால் ‘மல மல மல மருதமலை!’ என மும்தாஜ் ஸ்டைலில் ஆடுவார்களா? ஆண்களுக்கு சவால் விடும் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்களைத் தெறிக்க விடுவார்களா? அல்லது மிக மிக சுத்தமாக பூஜை, புனஸ்காரம் எனக் கோயிலைப் போல இருக்குமா? -இப்படிப் பல கேள்விகள் மண்டைக்குள் ஆம்புலன்ஸ் சைரன் போல சுழலும். அதற்கான விடையைச் சொல்ல வருகிறது ‘லேடீஸ் ரூம்’ என்ற தலைப்பிலான ஆறு குறும்படங்கள்.

டிங்கோ மற்றும் கன்னா என்ற இரண்டு கல்லூரிப் பெண்கள் ஆறு வெவ்வேறு இடங்களில், சூழலில் செய்யும் அட்ராசிட்டிகள்தான் கதை. செக்ஸ், லவ், சோஷியல் கமிட்மென்ட் என எல்லாவற்றையும் போகிற போக்கில் கிண்டல் அடிக்கிறார்கள். அவர்கள் உலகத்தில் ஆண்களுக்கு இடமில்லை. அதனால் ஆண்கள் தரும் எந்த விதப் பிரச்னைகளுக்கும் சீரியஸான தீர்வுகளை இவர்கள் சொல்லப்போவதில்லை. போகிறபோக்கில் குழந்தைப் பிறப்பு, திருமணம், கற்பு என எல்லாவற்றையும் காலி செய்கிறார்கள். இந்தக் குறும்படங்களை இயக்கி வரும் ஆஷிமா சிப்பர் ஏற்கெனவே ‘மேரே டாட் கி மாருதி’ படத்தின் மூலம் சீரியஸாய் பாலிவுட்டில் கவனிக்கப்பட்டவர்.

‘‘யாகூ சாட் ரூம் சில வருடங்களுக்கு முன் இணையத்தில் செம ஹிட். குரூப் குரூப்பாக ‘எங்க ஏரியா உள்ள வராதே!’ என பெண்கள் ஜபர்தஸ்த் காட்டி சாட்டிங் செய்வார்கள். ‘லேடீஸ் ரூம்’ அப்படித் தனி ஏரியா. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை இயல்பாகக் காட்ட விரும்பி காமெடி ஜானரில் ‘லேடீஸ் ரூம்’ ஷார்ட் ஃபிலிம்மை இயக்கி இருக்கிறேன். மே மாதம் இணையத்திலும் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. ட்ரெய்லரில் காண்டம், செக்ஸ் என ஆண்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது. இம்மாத இறுதிக்குள் விடை கிடைக்கும். இனிப் பெண்கள் தைரியமாகத் தங்களைப் பற்றியும் தங்கள் உடலைப் பற்றியும் தனி அறையில் பேச வேண்டியதில்லை. என் படங்களைப் பார்த்தால் போதும். மாடர்ன் இந்தியப் பெண்களின் பிரதிபலிப்புதான் இந்தப் படங்கள். நிச்சயம் ஆண்கள் ரசிப்பார்கள். பெண்கள் சிரிப்பார்கள்’’ என்கிறார். இவர் இப்படிச் சொன்னாலும் ‘உவ்வேக்... பார்க்கவே அருவருப்பாய் ஒன்றை எடுத்துவிட்டு பெண்ணியம் என்கிறார்கள்’ என ஆணுலகம் கண்டனத்தை குந்தாங்கூறாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்கிறது!

-ஆர்.சரண்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick