அக்கட தேசத்து அழகிகள்!

‘ச்சோ ஸ்வீட்’ சொல்லவைக்கும் அசத்தல் அக்கட தேசத்து அழகிகள் இவர்கள்!

சாண்டல்வுட் - நிகிஷா படேல்

குஜராத்தி பொண்ணு, வளர்ந்தது எல்லாம் லண்டன் மண்ணு. பி.பி.சி-யில் பார்த்த வேலையை விட்டுவிட்டு  தெலுங்கு ‘புலி’யில் பவன் கல்யாணுக்கு ஜோடி சேர்ந்தார். நிகிஷாவின் அப்பாவும் பாலிவுட் சீனியர் நடிகர் தேவ் ஆனந்தும் நண்பர்கள். அவரின் தயாரிப்பில் தயாரான முதல் படம் ‘பியூட்டி குயின்’ ட்ராப் ஆனாலும் 2012-ல் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக கன்னடத்தில் நடித்த ‘நரசிம்மா’ படம் அதிரிபுதிரி ஹிட் ஆனது. அங்கிருந்து ஜிவ்வென கேரியர் எகிறியது. ‘டகோடா பிக்சர்’, ‘வரதநாயகா’, ‘நமஸ்தே மேடம்’, ‘அலோன்’ என கடகடவென படங்கள் கிடைக்க நல்ல மார்க்கெட் இப்போது நிக்கிக்கு. நிக்கி மனசுல நிக்கி!

மல்லுவுட் - பார்வதி நம்பியார்

நம் ஊர் நம்பியாருக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமில்லை. ஆனால் உருண்டைக் கண்ணால் வில்லன் நம்பியாரைப் போலவே மிரட்டி உருட்டுகிறார். மலையாள ஹிட் டைரக்டர் லால் ஜோஸின் ‘ஏழு சுந்தர ராத்திரிகள்’ படத்தில் திலீப்புக்கு ஜோடி இவர்தான். டி.வி-யில் காம்பியரிங், ரியாலிட்டி ஷோவில் அசத்தல் திறமைசாலி எனக் கலக்கியவர், லால் ஜோஸ் கொடுத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துவிட்டார். ‘ராஜம்மா அட் யாகூ’ படத்தை விட சைலன்டாய் வந்து நம்மை உலுக்கிய ‘லீலா’ படத்தின் லீலா கேரக்டர் இப்போது சேட்டன்கள் மனதை நிறைத்துள்ளது. இயக்குனர் மகேஷ் கேசவ்வின் ‘கோஸ்ட் வில்லா’ படம் அவரை இன்னும் பேர் சொல்ல வைக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த லீலா க்ளைமாக்ஸ் மெரசல்!

டோலிவுட் - அங்கனா ராய்

கொல்கத்தா ரசகுல்லா. தமிழில் கருணாஸுக்கு ஜோடியாக ‘ரகளைபுரம்’ படத்தில் கேரியரை ஆரம்பித்த மாடலிங் கேர்ள்! ‘வத்திக்குச்சி’யில் சின்ன ரோல், ‘மகாபலிபுரம்’ படத்தில் பிரதான ரோல் என வளர்ந்தவரை ‘ஸ்ரீமந்துடு’வின் ஃப்ரெண்ட் கேரக்டர் இப்போது ‘யாரு ஈ அம்மாயி?’ எனக் கேட்க வைத்துள்ளது. அப்புறமென்ன அக்கட தேசத்தில் அம்மணிக்கு ‘நா தேவுடு’ படத்தில் ஹீரோயின் ரோல். சூப்பர்லு!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick