“ஐ லவ் யூ சொன்னா ஸ்மைலி!”

‘லூசியா’ இயக்குநர் பவன்குமாரின் ‘யூ-டர்ன்’ பட ஹீரோயின் ஷ்ரதா ஸ்ரீநாத். அட்டகாசமான நடிப்பால் பரவலான பாராட்டுகளைப் பெற்ற இவர், தமிழில் நிவின்பாலி ஜோடியாக அறிமுகமாகிறார். ‘‘தமிழ் தெரியாது. கொஞ்சம் ஸ்லோவா பேசுனீங்கனா ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிறேன்... ஏன்னா, இப்பத்தான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன்’’ என்று ஸ்லோமோஷன் இங்கிலீஷில் ஆரம்பிக்கிறார் ஷ்ரதா.

‘‘பத்து வயசுல இருந்தே நிறைய பாலிவுட் படங்களைப் பார்ப்பேன். அப்பவே நடிகை ஆகணும்னு ஆசை. நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சுருக்கேன். காலேஜ்ல நான் படிச்சது சட்டம். வக்கீலா ரெண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்போதான், ‘யூ-டர்ன்’ படத்துக்கு ஆடிஷன் நடந்தது. பவன்குமார் சாரோட வெப்சைட்ல ஆடிஷனுக்கு அப்ளை பண்ணேன். நான் நடிச்ச நாடகங்கள், என்னோட போட்டோகிராஃபி எல்லாம் காட்டினேன். மூணு ரவுண்ட் முடிஞ்சு ‘நீங்கதான் என் படத்துக்கு ஹீரோயின்’னு சொன்னாங்க. அந்த வார்த்தையைக் கேட்கும்போது அவ்ளோ சந்தோஷம்!’’ என்று பயோகிராஃபி சொன்னவரிடம் கொஞ்சம் ஜாலி டாக்.

‘‘ ‘யூ-டர்ன்’ படத்துல உங்க நடிப்புக்குக் கிடைச்ச ரியாக்‌ஷன்?”

‘‘வீட்டுல எல்லோருக்கும் சந்தோஷம். அக்கா பொண்ணுக்கு ரெண்டு வயசாகுது. அவ மட்டும்தான், ‘ஐ டோன்ட் லைக் யூ’னு மூஞ்சியைத் திருப்பிக்கிட்டா. அப்புறம், ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் பெருமையா இருக்காம். என்னை ஸ்கிரீன்ல பார்த்துட்டு பக்கத்து சீட்ல உட்கார்ந்திருந்தவங்களைச் சுரண்டி, ‘இந்தப் பொண்ணு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்’னு சொல்லி சந்தோஷப்பட்டிருக்காங்க. முக்கியமா, ஆடியன்ஸோட கமென்ட்ஸ். என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல மெசேஜைக் கொட்டிக் குவிச்சிட்டாங்க. ‘ஐ லவ் யூ ஷ்ரதா’னு சொல்ற ரசிகர்களுக்கு ஸ்மைலி போட்டு அனுப்பிட்டேன். என்னோட பலநாள் கனவுக்கு ‘யூ-டர்ன்’ படம் மட்டுமல்ல, டைட்டிலே செம பொருத்தம். தாங்க்ஸ், பவன்குமார்!’’

‘‘தமிழ் சான்ஸ் எப்படி?”

‘‘மிஷ்கின் சாரோட உதவியாளர் கெளதம் எனக்கு போன் பண்ணும்போது, சும்மா யாராச்சும் கலாய்க்கிறாங்கனு நினைச்சுட்டேன். ஆனா, அவ்ளோ அழகா கதை சொன்னார். அப்புறம் அவரோட டைரக்‌ஷன் டீமை சந்திச்சேன். எல்லோருமே செம ஃப்ரெண்ட்லி. ‘எனக்குத் தமிழே தெரியாது. எப்படிச் சமாளிக்கிறது?’னு ஒரு தயக்கம் இருந்துச்சு. அவங்கதான், ‘அதெல்லாம் பார்த்துக்கலாம்’னு தைரியம் கொடுத்தாங்க. தமிழ் தெரியாம, தமிழ்ல நடிக்கிறோம். இதை ஏன் சேலஞ்சா எடுத்துக்க கூடாதுனு என்னை நானே தேத்திக்கிட்டு, இப்போ தினமும் தமிழ்ப் படங்களா பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னோட முதல் தமிழ்ப்படத்துக்கு நிவின்பாலி ஹீரோ. ‘யூ-டர்ன்’ அடிக்குது என் வாழ்க்கை!’’

‘‘தமிழில் பிடிச்ச நடிகர், நடிகைகள்?”

‘‘நடிகையில் அனுஷ்கா மேடம். ஒரே மாதிரி படங்களை கமிட் பண்ணிக்காம, வெரைட்டியா நடிப்பாங்க. நடிகர்ல, விஜய் சேதுபதி. அவர் தேர்ந்தெடுக்கிற கதைகளும் இயல்பா இருக்கும், அவரும் நேச்சுரலா நடிப்பார். அதுக்காக அஜித், விஜய் எல்லாம் பிடிக்காதானு கேட்டுடாதீங்க. அவங்கெல்லாம் மாஸ் லெவல்ல இருக்கிறவங்க. எப்பவும், எல்லோருக்கும் பிடிக்கும்!’’

‘‘சினிமா தவிர?”

‘‘ஊர் சுத்துறது, மியூஸிக், பெயின்டிங், படம் பார்க்கிறது... இதெல்லாம் பிடிக்கும். டூர் போறது எப்பவுமே பிடிக்கும். எகிப்துக்குப் போய், அங்கே இருக்கிற பிரமிடுகளோட பிரமாண்டத்தை அணு அணுவா ரசிச்சுட்டு வரணும்ங்கிறது என்னோட வாழ்நாள் கனவு!’’

‘‘சென்னையில் பிடிச்சது?”

‘‘எலியட் பீச். சென்னையில் நிறைய நண்பர்கள் இருக்காங்க. இங்கே வரும்போது அடிக்கடி  பீச்சுக்குப் போயிடுவேன். அண்ணா நகர் ஏரியா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஒருதடவை ஆடிஷனுக்கு வந்தப்போ அந்த ஏரியாவில்தான் தங்கியிருந்தேன்!’’

‘‘லவ் லெட்டர்ஸ் எழுதின அனுபவம்?”

‘‘இப்போ இல்லை, விபரம் தெரியாத வயசுல எழுதியிருக்கேன். யாருக்கு எழுதினேன்னுதான் மறந்து போச்சு. ஆனா, எனக்கு நிறைய லவ் லெட்டர்ஸ் வந்திருக்கு. (எண்ணிக்கொண்டே)எத்தனைனு எண்ணக்கூட முடியலை பார்த்தீங்களா?’’

‘‘ஷ்ரதாவை எப்படி இம்ப்ரஸ் பண்றது?”

‘‘எனக்கு இந்த டாக்டர், இன்ஜினீயர், ஆடிட்டர், பிசினஸ் மேன்... இப்படியெல்லாம் இருந்தா பிடிக்காது. கலரா இல்லைனாலும் சரி, லுக் சரியில்லைனாலும் சரி... நல்லா சமைக்கத் தெரிஞ்சிருக்கணும். படம் பார்க்கிறது, நாடகத்தை ரசிக்கிறது, ஓவியம் வரையறது, மியூஸிக்ல கரையிறதுனு எல்லா ஆர்ட்ஸையும் ரசிக்கிற ரசனைக்காரரா இருக்கணும். தவிர, மூஞ்சியை உர்ருனு வெச்சுக்காம ஜாலியாப் பேசணும்... இன்னும் நிறைய யோசனை பண்ணி வெச்சிருக்கேன்!’’

இன்னுமா?

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick