கேமரா வைத்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள்!

சத்தமே இல்லாமல் பாலிவுட்டில் கலக்கி வருகிறார் ரிச்சா சட்டா என்ற நடிகை. நடிக்கும் படங்களில் துணிச்சலான கேரக்டர்களில் தெறிக்கவிடும் இவருடன் பேசினால்...

‘‘மிகக் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தீர்களாமே?’’

‘‘ஆமாம். அப்பா பஞ்சாபி. அம்மா பீஹாரி. 1986-ல் காலிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின்போது பிறந்தேன். ஒரு வயது பாப்பாவாக இருக்கும்போது கலவரத்திற்குள் சிக்கி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்னோடு டெல்லி வந்தார்கள் என் பெற்றோர். டெல்லியில் அகதி போல வாழ்ந்தோம்.

ஆனால் அம்மாவும் அப்பாவும் போராட்ட குணம் கொண்டவர்கள். வீடு வாசல் இல்லாமல் டெல்லியில் வாழ்க்கையை ஆரம்பித்தாலும் கல்வி ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் குடும்பத்wதை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார்கள். நான்கு வயதிலேயே எனக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. ஸ்ரீதேவியை இமிட்டேட் செய்து கைத்தட்டல் வாங்குவேன். என் பெற்றோர்கள் என்னைக் கண்டித்ததே இல்லை. ஆனால், வளர வளர படிப்பில் ஆர்வமாகி ஆர்ட்ஸ் முடித்தேன். டி.வி ஜர்னலிஸத்தில் ஆர்வமாக இருந்தேன்.

ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்து இந்தி ஸ்டார் நடிகர் அபய் தியோலை பேட்டி எடுக்கப் போயிருந்தேன். அப்போது, ‘அட்டைப்படத்தில் என் போட்டோ போட்டால் மட்டுமே பேட்டி தருவேன்’ என்றார். என்னால் அப்போது உறுதியாக அதைச் சொல்ல முடியவில்லை என்பதால் பாதியில் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். ஆனால், வருத்தமாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டே அவருடன் ‘ஓயே லக்கி. லக்கி ஓயே’ படத்தில் நடித்தேன்.

‘தேவ் டி’ படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு மயிரிழையில் கல்கியின் ரோலை மிஸ் செய்தேன். ஆனால் அனுராக் காஷ்யப் எனக்கு உறுதிமொழி கொடுத்திருந்தார். நான் அதை மறந்தேவிட்டேன். 2010-ல் ஆகஸ்ட் 15 அன்று மதியம் எனக்கு ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. ‘என் படத்தில் நடிக்கிறியா?’ என்று கேட்டார். இப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன்.”

‘‘ ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தில் நடித்த பிறகு வாழ்க்கையே மாறிவிட்டதா?’’

‘‘ஆமாம். நான் சாதாரணமாக மேக்-அப் இல்லாமல் தெருவில் நடந்தாலும்கூட எங்கேயோ யாரோ கேமரா வைத்து யதார்த்த சினிமா எடுக்கிறார்களோ என்பதுபோல சுற்றிலும் கேமராவைத் தேடுகிறார்கள். அப்பார்ட்மென்ட் வாட்ச்மேன்கூட, ‘ஒரு சேஞ்சுக்கு ‘மிஸ்டர் இண்டியா’ ஸ்ரீதேவி மாதிரி நடிங்களேன்’ என்று கிண்டல் செய்கிறார். வயதான ஆயா வேடத்திலிருந்து பாலியல் தொழிலாளி வரை வெரைட்டியான ரோல்கள் வருகின்றன. ‘மாஸான்’ படத்தில் நடித்த போல்டான காலேஜ் கோயிங் கேர்ள் கேரக்டர் ரொம்ப மனதுக்கு நெருக்கமாக இருந்தது. இப்போது ‘சரப்ஜித்’ படத்தில் பிரியமான மனைவி பாத்திரம் மிகச் சிரமப்பட்டு செய்தேன்”

‘‘நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?”

‘‘புனேயில் ஆக்டிங் கோர்ஸ் படித்தபோது ஒரு டாக்டரைக் காதலித்தேன். எனக்கு சிகிச்சை அளித்த அந்த டாக்டரும் என்னைக் காதலித்தார். ஆனால், இருவரும் காதலைப் பரிமாறிக்கொள்ளவில்லை. சொல்லாமலே அழகாகக் கடந்துபோய்விட்டது அந்தக் காதல். மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அவர் பெயர் என்ன என்றுகூடத் தெரியாது. ஆனால், அற்புதமான மனிதர். சினிமாவில் உள்ளவர்களைக் காதலிப்பேனா எனத் தெரியாது. ஆனால், இப்போது சினிமா கமிட்மென்ட்களால் எனக்குக் காதலிக்க நேரமில்லை!’’

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick