விளம்பரம் பண்ணு, ரொமான்ஸ் பண்ணு!

ண் AXE பாடி ஸ்ப்ரே அடித்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றால், அழகான பெண்கள் மயங்கிப் பின்னால் வருவார்கள் என நம்பி ஸ்ப்ரே பாட்டில் நெளிய நெளியப் பீய்ச்சியடித்துப் பதறவைக்கும் இளைஞர்களும், முரட்டுத்தனமான ரொமான்ஸ் விளம்பரங்களைப் பார்த்து ‘நண்டு மார்க்’ லுங்கிகளைக் கேட்டு வாங்கி அணியும் ஆண்களும் நடமாடும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்போ நாங்க மட்டும் யாராம்? என மிச்சமுள்ளவர்களும் களத்தில் குதித்தால் என்னவாகும்? இதோ உங்களுக்காக உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...

‘எனது காலணி; எனது பெருமை’ என காஜல் அகர்வால் ஒரு நிமிடத்திற்குப் பேசியதற்குப் பதிலாக, வி.கே.சி செப்பல்கள் அணிந்தால் காதலரோ அல்லது கணவரோ உங்கள் கால் தரையில் படாமல் உங்களைத் தூக்கிக்கொண்டே செல்வார்கள் எனக் காட்டியிருந்தால், பெண்கள் போட்டி போட்டு வாங்கியிருப்பார்கள்.

என்.எஸ் பெருங்காயத்தில் அமேசான் காட்டிலிருக்கும் அரிய வகை மூலிகைகளின் லேகியங்கள் கலந்து உடலைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளும் எனச் சொன்னால் ஆண்களே ஆர்டர் செய்து வாங்கி வருவார்களே.

அமிதாப் பச்சனையே கண்கலங்க வைத்து ‘நம்பிக்கை... அதுதானே எல்லாம்’ என ஃபீல் பண்ணியதற்குப் பதிலாக, நகை வாங்கிக் கொடுத்தால் உங்கள் மனைவி அன்போடு இருப்பார் என உண்மையையே எளிமையாகக் காட்டினால் விளம்பரச் செலவையும் கட்டுப்படுத்தலாம். இந்த விஷயங்களெல்லாம் ஊர் உலகத்துக்கு இன்னும் தெரியாமலா இருக்கிறது?

ஆச்சி மசாலாவில் சமைத்தால் உங்கள் கணவர் அதன் வாசத்திலேயே வசியமாகி உங்களைச் சுற்றிச் சுற்றி வருவார் எனக் காட்சிப்படுத்தினால், எல்லா வீட்டு கிச்சனிலும் ஆச்சி மசாலா ஃபேவரிட் ஆகிவிடும். ஆனால், பார்ப்பதற்குதான் மல்லிகைப்பூ சென்ட் விளம்பரம் போலவே இருக்கும்.

அதனாலென்ன..? மசாலா விளம்பரத்திலேயே மசாலா இல்லைனா எப்படிங்க?

சங்கர் சிமென்ட் கொண்டு வீடு கட்டினால், வீட்டுக்குள் வசிப்பவர்கள் எப்போதும் ரொமான்டிக் மூடிலேயே இருப்பதாக விளம்பரம் எடுக்கலாம். பொம்மீஸ் நைட்டிகள் தத்துவமும் இதையேதான் சொல்கிறது. ‘கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?’ என்கிறீர்களா? பூமெக்ஸ் பனியன் போட்டாலே விரட்டி விரட்டிக் காதலிக்கிறதா காட்டுகிற கொடூர உலகம் பாஸ் இது!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick