மனிதர்களை உருவாக்கியது ஏலியன்களா?

லியன்களைப் பற்றிய ஏராளமான நம்பிக்கைகளில் ஒன்று, ‘மனிதர்களை உருவாக்கியதே ஏலியன்கள்தான்!’ என்பது. என்னனு பார்த்துடுவோமா?

இன்றைய ஈராக். 19-ம் நூற்றாண்டில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நாகரிகத்தின் களிமண் எழுத்துகள் ஏலியன் ஆராய்ச்சிகளில் முக்கியமான ஒன்று. 1976-ல் இந்தக் களிமண் எழுத்துகளை மொழிபெயர்த்தவர், ஜிசரியா சிட்சின் என்ற ஆராய்ச்சியாளர்.

இந்தக் களிமண் எழுத்துகளில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான். அனுனாக்கி என்ற கடவுள் பூமியில் இருந்து தங்கத்தை எடுப்பதற்காக வந்த கடவுள் (அதாவது, வேற்றுக்கிரகவாசி!) என்ற குறிப்பு இருக்கிறது. சரி... அவருக்கு ஏன் தங்கத்தின் மீது ஆசை? தங்கம் மிகச்சிறந்த மின்கடத்தி. இந்தத் தங்கம் அவர்களுடைய கிரகத்திற்கு ஏதோ ஒரு வகையில் பெரும்பயனைத் தரப்போகிறது என்பதால், சில ஏலியன்களின் உதவியோடு பூமிக்கு வந்து இறங்கியிருக்கிறார். தங்கத்தை எடுப்பதற்காக, அப்போதைய குரங்கு மனிதர்களையும், தங்களுடைய மரபணுவையும் இணைத்து தற்கால மனிதர்களை உருவாக்கி இருக்கலாம் என்கிறார் ஜிசரியா.

ஜிசரியா சிட்சினின் கூற்றுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக அவர் வைக்கும் முன் உதாரணம் தங்கச் சுரங்கங்கள்தான். பூமியில் பழமையான தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 90,000 ஆண்டுகள் பழமையான சுரங்கம் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ‘பெரு’ நாட்டில் 50,000 வருடங்கள் பழமையான தங்கச் சுரங்கமும், விமான ஓடுதளமும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆக, தாங்கள் உருவாக்கிய மனிதர்களால் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை எடுத்துச் செல்லத்தான் இந்த ஓடுதளங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஜிசரியா. தவிர, இதே ‘பெரு’ நாட்டில்தான் நாஸ்கா கோடுகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இதே ‘பெரு’வில் உள்ள பிஸ்கோ பள்ளத்தாக்கில் சீரான குழிகள் பல மைல்கள் தூரத்திற்கு இருக்கின்றன. 30 அடி அகலமும், ஏழு அடி ஆழமும் உடைய ஏராளமான குழிகளை வானத்தில் இருந்து பார்த்தால் பிரமிப்பான தோற்றமாகத் தெரியும். இது ஏலியன்களின் செய்திப் பரிமாற்றத்திற்குப் பயன்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

பெரு நாட்டில் டிடிகாகா என்ற இடம், அங்கு வாழும் பழங்குடி மக்களுக்குப் புனிதமான இடம். இது கடவுளின் வாசல் என்று அழைக்கப்படுகிறது. மலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கதவும், அந்தக் கதவுக்குள் ஓர் ஆள் உள் நுழையும் வகையில் இருக்கும் குட்டிக் கதவும்தான் இந்தப் பெயருக்குக் காரணம். இதுவும் 50,000 வருடம் பழமையானது. இதுதவிர, பிரமிடுகளில் கொட்டிக் கிடக்கும் தங்கங்கள், விமானம் கண்டுபிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட ‘விமான வடிவ’ பொம்மைகள்,

‘ஆன்டனா’வைத் தலையில் மாட்டிக்கொண்ட உருவங்களின் ஓவியம், விண்வெளி வீரர்களின் உடை அணிந்த உருவங்கள், மார்பில் கண்ட்ரோல் பேனலுடன் இருக்கும் ஓர் உருவம். முக்கியமாக, இந்த உருவங்களையெல்லாம் வணங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்... என மனிதர்களை ஏலியன்கள் ‘அடக்கி’ ஆண்ட நிகழ்வுகள் நிச்சயம் நடந்திருக்கின்றன என்ற ஜிசரியா சிட்சினின் கூற்றைப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஏன் மனிதர்கள், ஏலியன் களைப் பார்க்க முடிவதில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனால், அனுமானம் இருக்கிறது. 1960-ல் ஜான்.ஏ.பால் என்பவர், ஏலியன்களின் செயல்பாடுகளைப் பற்றி கோட்பாடு உருவாக்கினார். அதற்கு, ‘ஜூ ஹைப்போதீஸிஸ்’ என்று பெயர். அதாவது, ‘‘மிருகக்காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளைப் பொறுத்தவரை, மனிதர்கள் தங்களைப் பார்வையிட வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியாது. தவிர, மிருகக்காட்சி சாலைக்கு வரும் மனிதர்களுடைய நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள முடியுமே தவிர, வெளியே இருக்கும் மனிதர்களைக் கவனிக்க முடியாது. ஏலியன்களைப் பொறுத்தவரை, நாம் விலங்குகள். விலங்குகள் ‘ஜூ’வுக்குள் இருப்பது போன்ற வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பூமிக்கு வெளியே நாம் ஏலியன்களின் செயல்பாடுகளைக் கவனிக்க முடியாது!’’ என்பதுதான் அந்த தியரி. ஆனால், பல ஆராய்ச்சியாளர்களும் சொல்லும் ஒரே விஷயம், ஏலியன்கள் மனிதர்களைவிடப் பல மடங்கு அறிவானவர்கள். அவர்களாக நம்மைத் தொடர்புகொள்ளும் வரை காத்திருக்க வேண்டும்!

ஆத்தி, இதெல்லாம் நம்புறதா வேணாமானு தெரியலையே!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick