ஹாய் மஜான்ஸ்!

வேறு மாநிலங்களில் மற்றும் வேறு நாட்டில் இருந்தும் நம் ஊர் கல்லூரிகளுக்குப் படிக்கணும்ங்கிற ஆசையோட பெட்டி படுக்கையைத் தூக்கிட்டு வரும் மாணவர்களின் நிலமை இப்படித்தான் இருக்கும்.

பெரும்பாலும் இந்த மாணவர்கள் வகுப்பைக் கவனிக்கவே மாட்டார்கள். இங்கிலீஷ் பாடத்தையே தமிழில் நடத்தினால் அவங்களுக்கு எப்படி புரியும்கிறேன். வகுப்பின் கடைசி பெஞ்ச்சில் ‘தில்லானா... தில்லானா...’ பாட்டில் வரும் மீனாவைப் போல நெற்றியில் கைவைத்து முன்பக்கம் சாய்ந்துவிடுவார்கள். பாவத்த...

பல வருஷங்களா நம்மோடு தமிழ்நாட்டில் ஒண்ணுமண்ணா பழகியிருந்தாலும் கெட்டவார்த்தையைத் தவிர வேறு எதையும் அவர்களுக்குத் தமிழில் கற்றுக் கொடுத்திருக்க மாட்டோம். பதிலுக்கு ‘உங்க ஊர் பாஷையில ஐ லவ் யூ சொல்றது எப்படி?’ எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவன் ஊர் புள்ளைக்கே நூல் விட்ருப்போம். கெரகத்த...

கிரிக்கெட்டைத் தவிர மற்ற எல்லா விளையாட்டு அணிகளிலும் இருப்பார்கள். அதிலும், சீன முகச்சாயலோடு ஃபுட்பால் விளையாடும் அவர்களைப் பார்க்கையில் ‘மிரட்டல் அடி’ குடும்பம்தான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறதோ என அடிமனதில் அலாரம் அடிக்கும்.

நம் ஊர் பெண்களின் கண்களுக்கு எங்கே அவர்கள் ‘கொரியன்’ நாடகத்தில் வரும் ஹீரோ போலத் தெரிந்துவிடுவார்களோ என்ற பயம் நம் நெஞ்சுக்குள் ‘பக்பக்’னு அடித்துக்கொண்டிருக்கும். அதிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருக்கும் அண்ணன்களை அருகிலேயே நெருங்க விட மாட்டோம். பார்த்த படமெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா இல்லையா? என்னத்த...

 கேன்டீன் சாப்பாடைச் சாப்பிடுவதால் பிரெய்ன் ட்யூமர், ரத்த வாந்தி போன்ற கொடூரமான பக்க விளைவுகள் ஏற்படுமோ என அவர்கள் பயந்துபோய்த் திரிவார்கள். பின்னே, வெண்பொங்கலுக்கும், வெஜிடபிள் பிரியாணிக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி சமைச்சா அவங்க என்ன பண்ணுவாங்க? அதனாலேயே, அவர்கள் ரூமிலுள்ள குப்பைத்தொட்டியில் மேகி கவர்களாகக் கிடக்கும். பாவத்த...

அதிகம் யாரிடமும் பேச மாட்டார்கள். நாம் இங்கிலிபீஸில் வீக்காக இருப்பதுதான் அதற்குக் காரணம் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், சூரியை விட தப்புத் தப்பாக இங்கிலீஷ் பேசும் நம்மில் ஒரே ஒருவனோடு மட்டும் ‘ஹாய் மஜான்’ என நட்பில் திளைப்பார்கள். நம்மகிட்ட இல்லாதது அவன்கிட்ட என்ன இருக்குனு யோசிங்க மக்கா...

எப்போதும் செமையா டிரெஸ் அணிந்திருப்பார்கள். ஜீன்ஸ் பேன்ட்டுகள் காயலாங்கடைக்குள் முக்கி எடுத்ததுபோல் கிழிந்தும், செயின்கள், பட்டன்கள் தொங்கிக்கொண்டும் பார்க்கவே வினோதமாக இருக்கும். நம் ஊர் பசங்க பெரும்பாலான பேருக்கு அவர்கள்தான் சம்பளம் வாங்காத ஃபேஷன் டிசைனராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

‘என்.ஆர்.ஐ’களும், வேறு மாநிலத்தவர்களும் நம்முடன் ஒரே வகுப்பில் படிப்பதை பெருமையாகச் சொல்லிக்கிறோம். ஆனால், அவர்களிடம் பழகி அவர்களது தயக்கத்தைக் களைய மறுக்கிறோம். லைட்டா ‘ஹாய்’னு ஒரு பிட்டைப் போட்டுப் பாருங்க பாஸ், சீக்கிரமே நட்பு நங்கூரம் மாதிரி நச்சுனு அடி மனசுல இறங்கிடும். பழகலாம் பாஸ்...

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick