“எனக்கு வயசு நாலு!”

க்ரீம்ஸ் ரோடு அழகிரி நகரில் இருக்கும் அண்ணாமலைதான் அந்த ஏரியாவுக்கு அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டார். ‘பித்தளை மாத்தி’ என்ற புத்தம் புதிய படத்தின் ஹீரோ. ‘அண்ணாமலை ரசிகர் மன்றம்’ வேறு இப்பவே பதிவு பண்ணிவிட்டாராம். பிஸியான அண்ணா சாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் ‘இளநீர் கடை’ போட்டிருக்கும் அண்ணாமலையைச் சந்தித்தேன்.

‘‘யார் பாஸ் நீங்க?’’

‘‘நான் பூர்வீகமா சென்னைவாசிங்க. இதோ இந்த ஆயிரம் விளக்கு ஏரியா பூரா நான் ஓடி விளையாடிய இடம். அப்பா, அம்மா பழ வியாபாரம் பண்ணவங்க. எனக்கு சேர்க்கை சரியில்லை சார். ரொம்ப சின்ன வயசுலேயே ட்ரிங்கிங் பழக்கம் ஒட்டிக்கிச்சு. இங்கேதான் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்சேன். பல வருஷமா குடிப்பழக்கத்துக்கு அடிமையா இருந்தேன். அனகாபுத்தூர் வரைக்கும் ஸ்கூல் படிக்கிறப்போ சரக்கு அடிக்கப் போயிருவேன். அப்போவெல்லாம் குடிச்சிட்டு ஸ்கூலுக்குப் போய் டின்னு கட்டி விட்ருவாங்க வாத்தியாருங்க. நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். ‘அண்ணாமலை’ படம் பார்த்தப்போ செம ஃபீல் சார். நம்ம பேர்ல படம் பண்ணி இருக்காரே தலைவர்னு. இப்போ ‘பித்தளை மாத்தி’ ரிலீஸ் ஆச்சுனா நிச்சயம் சாரே யார்னு பார்ப்பார் பாருங்க’’ என்றவர் இளநீர் வெட்டிக்கொண்டே, தான் ஹீரோவான கதைக்கு வந்தார்.

‘‘18 வருஷமா குடிகாரனா இருந்த நான் இங்கே சர்ச்கிட்ட உள்ள ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ நிலையத்துக்குப் போனேன். அங்கே எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. அங்கே என்கூட குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மீண்ட டைரக்டர் சரவண பெருமாள்ங்கிறவரைப் பார்த்தேன். அந்த சென்டர்ல நான் டிராமாவுக்கு ஆக்ட் கொடுத்தப்போ சார் பார்த்திருக்கார். என் குரல் அப்படியே எம்.ஆர்.ராதா போல இருக்கும். சூப்பர் ஸ்டார் மாதிரி அடிக்கடி முடியைக் கோதி விட்டுக்கிட்டே இருப்பேன். சரவணப்பெருமாள் சாரே நடிக்கலாம்னு இருந்த ‘பித்தளை மாத்தி’ படத்தில், ‘நீயே நடிப்பா. உனக்கு நல்ல ஆக்டிங் வருதுப்பா’னு சான்ஸைத் தூக்கிக் கடவுள் மாதிரி கொடுத்துட்டார். அப்புறம் என்ன, படம் சென்னை பூரா ரெட் ஒன் கேமராவில்  ஷூட்டிங் போச்சு. கோடம்பாக்கத்துல இப்போ ட்ரெண்ட் சீட்டிங் பண்ற ஹீரோ கதைதானே. அதுதான் நானும் படம் பூரா சீட்டிங் பண்ற ஆளா வரேன்” என்றவரிடம் ‘‘இப்பவும் குடிப்பழக்கம் இருக்கா?’’ என்றேன்.

‘‘சீச்சி... இந்தக் கருமத்தையா குடிச்சோம்னு இருக்கு இப்போ. குடியைவிட்டு நாலு வருஷங்களாச்சு. மனசும் உடம்பும் சுத்தமாச்சு. அதனால என் வயசு இப்போ 44 இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் நாலுதான். ஒய்ஃப்கூட முன்னாடி பக்கத்துல வந்தா, தூரமா ஒதுங்கினா சார். எல்லோரும் திட்டுவாங்க. இப்போ பாசமா பார்த்துக்கிறாங்கோ. எனக்காக ஜெபம் பண்றாங்க. சாப்பாடு செஞ்சு வேலை செய்ற இடத்துக்கே ஒய்ஃப் கொண்டு வர்றாங்க. எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. ‘பித்தளை மாத்தி’க்கு வர்றேன்... எல்லாத்துக்கும் படத்துல டபுள் ஸ்ட்ராங்கா மெஸேஜ்லாம் வெச்சிருக்கோம். ஆக்‌ஷன், காமெடி, சண்டைனு செமையா வந்துருக்கு படம். முக்கால்வாசி முடிச்சாச்சு. சீக்கிரமே முழுப்படமும் முடிஞ்சிடும். ‘பித்தளை மாத்தி’ வந்தா என் வாழ்க்கையே முழுசா மாறிடும் சார். எனக்குள்ள இருந்த நடிகனைக் கண்டுபிடிச்ச சரவணப்பெருமாள் சாருக்கும் எனக்குள்ள கலைதாகத்தை சுரக்க வெச்ச சூப்பர் ஸ்டாருக்கும் நன்றிகள்னு கடைசியா போட்டுக்கங்க சார்’’ என்று சொல்லும் அண்ணாமலை நாம் கிளம்பும்போது நமக்காக அங்கு நின்ற பாட்டியுடன் ‘பித்தளை மாத்தி பித்தளை மாத்தி’ என ‘டங்காமாரி ஊதாரி’ ஸ்டைலில் செம குத்தாட்டம் போட்டுத் தெறிக்க விட்டார்.

டெய்ல் பீஸ்: படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சரவணப்பெருமாளைத் தொடர்புகொண்டேன். ‘‘சார்... எங்க படம் நின்னு பேசும். லட்சக்கணக்குல செலவு பண்ணி எடுக்கிறோம் சார். ஹீரோகிட்ட டீட்டெய்லா பேசிக்கோங்க. எடிட்டிங்ல பிசியா இருக்கேன். நானே கூப்பிடுறேன் சார்!’’ என்றார்.

-ஆர்.சரண், படங்கள்: ப.சரவணக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick