"சறுக்கிவிட்டேன், ஆனாலும் சாதிப்பேன்!"

‘‘எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆர்வம் இருந்துச்சு. வெறி இருந்துச்சு. ஆனா, சரியான பின்னணி இல்லை. விஜயகாந்துக்கு ராவுத்தர், ரஜினி, கமலுக்கு பாலச்சந்தர்னு ஒரு நடிகருக்கு இயக்குநர் அல்லது தயாரிப்பாளரோட ‘காம்போ’ அமைஞ்சாதான் ஒரு வெலலுக்கு வர முடியும். அது எனக்குக் கிடைக்கலை. ‘இப்படிப் பண்ணு, இப்படிப் பண்ணாதே’னு சொல்லிக்கொடுக்க சினிமா ஃப்ரெண்ட்ஸ் இல்லை. அதனால, நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்கத் தெரியலை. நடிச்ச முதல் படம் ‘சின்னத் தாய்’ 100 நாட்கள் ஓடிச்சு. அடுத்து ஏழெட்டு படங்கள்ல ஒப்பந்தம் ஆனேன். எதைத் தேர்ந்தெடுக்கணும், எதைத் தேர்ந்தெடுக்கக் கூடாதுனு பெரிய கன்ஃப்யூஷன் இருந்துச்சு. ஒரு நடிகரா பெருசா வளர முடியாம போனதுக்கு, இதுவும் காரணம்!’’ என்கிறார் நடிகர் விக்னேஷ். ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ உட்பட வேறு சில தொழில்களில் விக்னேஷின் கொடி பறக்கிறது. ஆனால், நடிகராக ஜெயிக்க முடியாத வருத்தம் அவ்வளவு இருக்கிறது அவருக்குள்!

‘‘இதுதான் காரணம்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ஏன் மாற்றிக்கொள்ள முயலவில்லை?”

‘‘43 படங்கள் நடிச்சிருக்கேன். பெரிய இயக்குநர்களோட தொடர்ந்து நடிக்கும்போதுதான் நம்ம ப்ளஸ், மைனஸை சரியா கண்டுபிடிச்சு, நம்மகிட்ட இருந்து என்ன வருதோ, அதை ரசனையா ரசிகனுக்குச் சொல்வாங்க. ஆனா, நான் இயக்குநர்களோட தொடர்பை சரியா மெயின்டெயின் பண்ணலை. ரொம்ப லேட்டாதான், என்னோட ப்ளஸ், மைனஸை நானே தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அப்படித் தெரிஞ்சுக்கும்போது என்கிட்ட ஒரு படமும் இல்லை. பொருளாதார சூழலைச் சமாளிக்கணுமே, அதுக்காகச் சில படங்கள் பண்ணேன். அதுவும் கை கொடுக்கலை.’’

‘‘டிரெண்ட்ல இருக்குற நடிகர், இயக்குநர்களோட டச்ல இருக்கீங்களா?”

‘‘என்கூட ஒரு தடவை நட்பாகிட்டா, கடைசி வரைக்கும் நட்போடதான் இருப்பாங்க. ஏன்னா, எனக்கு எந்த விதமான ஈகோவும் கிடையாது. ஆனா, சினிமாவில் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா பழகுறதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம். பட்டும் படாமதான் பழகுவாங்க. நல்லாப் பழகினாலும் நாலஞ்சு ஹிட் கொடுத்தா, ‘ஹாய்’, ‘ஹலோ’ வார்த்தைகளோட நிறுத்திக்குவாங்க. அதைத் தப்புனு சொல்லலை. ஆனா, இதுதான் சினிமா.’’ 

‘‘பாலாவுக்கும் உங்களுக்குமான ஃப்ரெண்ட்ஷிப் எப்படிப் போகுது?”

‘‘பாலுமகேந்திரா சார்கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டுப் போனப்போ, அவரோட அசோஸியேட் டைரக்டரா இருந்தார் பாலா சார். அப்போ இருந்து எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம். ‘சேது’ படத்துல எனக்கு சான்ஸ் கொடுத்தார். அந்தப் படத்துல நான் கமிட் ஆகும்போது நான் புதுமுக நடிகர். அதுக்குப் பிறகுதான், ‘கிழக்குச் சீமையிலே’, ‘சின்னத் தாய்’ படங்களெல்லாம் பண்ணேன். சில பிரச்னைகளால் படம் தள்ளிப்போச்சு. என் சான்ஸும் போச்சு. ஆனா, ‘நிச்சயம் உனக்கு ஏதாவது பண்ணுவேன்டா’னு பாலா சார் அடிக்கடி சொல்வார். சமீபத்துல, ‘இப்போ நான் கொஞ்சம் பெரிய செட்டப் நடிகர்களோட போய்க்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் உனக்கொரு நல்ல தகவல் சொல்றேன்’னு சொன்னார்.’’

‘‘எந்த விஷயத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டிருக்கீங்க?”

‘‘அம்மா, அப்பாவுக்காகத்தான். எனக்கு மூணு வயசா இருக்கும்போதே அவங்க கிடையாது. மிகைப்படுத்திச் சொல்றேன்னு நினைக்காதீங்க. இப்பவும் ரோட்டுல அன்னியோன்யமான அப்பா, அம்மா ஜோடியா நடந்துபோனா, என்னை அறியாமலேயே கண்ணீர் விட்டுடுவேன். ஏன்னா, அன்புக்காக ஏங்குற ஆள் நான். இப்பெல்லாம் அது கமர்ஷியல் ஆகிடுச்சு. பணம் இருந்தா மட்டும்தான் மதிக்கிறாங்க. சினிமாவுக்கு வர்ற பசங்ககூட மணி மைண்ட்ல வர்றாங்க. ரொம்ப மெக்கானிஸமா இருக்காங்க. அதைப் பார்க்கிறப்போ இன்னும் வருத்தமா இருக்கு.’’

‘‘பிசினஸ் எப்படிப் போகுது?”

‘‘என் மனைவி ‘கிரீன் டிரெண்ட்ஸ்’ஸைக் கவனிச்சுக்கிறாங்க. நான் பண்ற பிசினஸால எனக்குப் பணமும் கிடைக்கணும். மத்தவங்களுக்குப் பயன்படுற மாதிரியும் இருக்கணும். அதனால, பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படுற ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் ஆரம்பிச்சுருக்கேன். சென்னை பிர்லா கோளரங்கத்துல, வானத்துல இருக்கிற கோள்களைப் பார்க்கிற வசதி இருக்குல்ல, அந்த மாதிரி. அனைத்துக் கோள்களையும் லைவ்வா பார்த்துத் தெரிஞ்சுக்க உதவுற சாஃப்ட்வேர் அது. பேரு, ‘சிம்ப்ளி சயின்ஸ்’.’’

‘‘சினிமாவுல நீங்க திருப்திப்பட்டுக்கிற விஷயம்?”

‘‘நேத்துகூட ஒருத்தர், ‘ஏரிக்கரை மேலிருந்து...’, ‘ஆத்தங்கரை மரமே...’, ‘கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி...’னு பல பாடல்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார். ‘எங்க கிராமத்துக்குப் போயிட்டு வந்த ஃபீல் கிடைக்கும்ங்கிறதால, இதையெல்லாம் அடிக்கடி கேட்பேன்’னு அவர் சொல்றப்போ, அவ்ளோ சந்தோஷம்.’’ 

‘‘அடுத்து?”

‘‘காஞ்சிபுரம் பக்கத்துல வருடா வருடம் கூத்து நடக்கும். நாசர், பசுபதி, சண்முகராஜானு பல நடிகர்கள் தரையில் உட்கார்ந்து அதை ரசிப்பாங்க. அவங்களும் கூத்து கட்டுவாங்க. அந்தக் கூத்தைப் பார்க்கும்போது, சாதாரண கூத்துக் கலைஞரா இருந்திருக்கலாம்னு நினைச்சுக்குவேன். நடிகரா ஜெயிக்கலைனாலும், கூத்துக் கலைஞரா எனக்குனு ஒரு இடத்தைக் கண்டிப்பா பிடிச்சிருப்பேன். சரி, அதெல்லாம் இப்போ பேசி பிரயோஜனம் இல்லை. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன். இந்த முறை நடிகரா மட்டுமில்லை. தயாரிப்பாளராகவும் மாறுவேன். விஷால், கார்த்தி எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள். அவங்களை வெச்சுப் படம் தயாரிப்பேன். முரட்டுத்தனமான வில்லன் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை. அதுக்குப் பல இயக்குநர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவேன். இது என்னோட செகண்ட் இன்னிங்ஸ்!’’

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick