“ரஜினியே பாராட்டினார்!”

‘மீன் குழம்பும் மண் பானையும்’ எனக் கிராமத்து வாசனையோடு வித்தியாசமான பெயரில் ஒரு சினிமா. ஆர்வம் மேலிட, அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் அமுதேஷ்வரோடு பேசினேன்.

‘‘உங்களைப் பற்றி?’’

‘‘சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கத்தில் ஏரியூர் என்னும் கிராமம்தான் நான் பிறந்தது வளர்ந்தது. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து 20 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு. சுசீந்திரன் சார் இயக்கத்தில் வெளிவந்த ‘பாயும் புலி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்றினேன். சினிமாத் துறையிலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டுத் தற்போது இயக்குநராக இது என் முதல் படம்.’’

‘‘ ‘மீன் குழம்பும் மண் பானையும்’ டைட்டில் சிக்கியது எப்படி?’’

‘‘கதையோடு தொடர்புடைய தலைப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர தனியாக டைட்டிலுக்கென எந்த மெனக்கெடலும் இல்லை. அது மட்டுமல்லாமல் கதை நடப்பது கிராமத்தில் அல்ல. எனினும், கதைக்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது என்பதை படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வீர்கள். ரஜினிகாந்த் இந்தப் படத்தின் தலைப்பைக் கேள்விப்பட்டு சிலாகித்துப் பாராட்டியதும் பெருமையாக இருந்தது.’’

‘‘இளைய திலகம் பிரபு, நடிகர் ஜெயராமின் மகன் என எதிர்பார்க்க வைக்கும் டீம் எப்படி அமைந்தது?’’

‘‘பிரபு சாரிடம் கதை சொன்னதும் பிடித்துப்போய் நாம பண்ணலாம் என்றார். பிரபு சார் மூலமாக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமிடம் பேசி ஓகே வாங்கினோம். காளிதாஸ், நடனத்திலும் கலக்குகிறார். இளைஞரென்பதால், இளம்பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தைக் கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றவராதலால் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

கதாநாயகியாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் சந்தானத்தோடு நடித்த ஆஷ்னா சவேரி நடிக்கிறார். நடிகை பூஜா குமார் மலேசியாவில் வசிக்கும் ‘லேடி டான்’ ஆக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரைத் தவிர, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், இளவரசு, சந்தானபாரதி என ஒரு நடிகர் பட்டாளமே இருக்கிறது.’’

‘‘நடிகர் பிரபு என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? கதை எந்த மாதிரி?’’

‘‘பிரபு சார், காரைக்குடி அண்ணாமலை செட்டியார் எனும் ரோலில் மலேசியாவில் ஹோட்டல் நடத்துபவராக நடித்திருக்கிறார். அவரது மகனாக காளிதாஸ் ஜெயராம். நெருக்கமான இருவருக்கும் இடையேயான சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத சங்கடத்துடன் கூடிய உரசல் மனநிலையை எங்கள் ஊர்ப்பக்கம் ‘மனத்தாங்கல்’ எனச் சொல்வார்கள். அதுதான் கதை. நாற்பதைக் கடந்த தம்பதிகள் இடையேயான, தந்தைக்கும் மகனுக்குமான, இளம் ஜோடிகளுக்கு இடையேயான மனத்தாங்கல்களை இந்தப் படம் உணர்வுபூர்வமாகச் சொல்லும்.’’

‘‘உலக நாயகன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாமே? உண்மையா?’’

‘‘ஆமாம். கமல் சார் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். பிரபு மூலமாகப் பேசியதும், சிவாஜி சாரின் மீதான அபிமானத்தால் நடிப்பதாகச் சம்மதித்தவர் மேக்கப்போடு ரெடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார். என்ன வேடம் என்பதெல்லாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஸ்கிரீன்ல பாருங்க’’ என முடிக்கிறார்.

குழம்பு மணக்க வாழ்த்துகள் ஜி!

- விக்கி, படம் : பா.அபிரக் ஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick