சக்தி கொடு!

‘குட்டீஸ்களின் ஹீரோவான சோட்டா பீமுக்கு லட்டு சாப்பிட்டால் சக்தி கிடைக்கும். லட்டு சாப்பிட்டுவிட்டு எதிரிகளைப் பந்தாடுவார். அடையார் ஆனந்த பவனில் லட்டு சாப்பிட்டுவிட்டு ‘டிஷ்யூம்’ சொல்லும் சோட்டா பீம் குழந்தைகளும் உண்டு. ‘மோட்டு’வுக்கு சமோசா சாப்பிட்டால் எனர்ஜி கிடைக்குமாம். ‘பாப்பாயி’க்கு கீரை சாப்பிட்டால் பவர் கிடைக்குமாம். ‘கம்மி-பியர்’ ஜூஸ் குடிக்கும். ‘பக்ஸ் பன்னி - முயல்’, கேரட் சாப்பிட்டு வலு ஏற்றிக்கொள்ளும். இதே மாதிரி, சூப்பர் ஹீரோக்களும் சக்தி கிடைப்பதற்கு என்னவெல்லாம் சாப்பிடுவார்கள் என வெறித்தனமாக யோசித்ததில்...

ஸ்பைடர்மேனின் முழு நேர உணவு கீரைகளும், இலை, தழைகளும்தான். பின்னே, திருப்பூர் காட்டன் மில்களைவிட ஸ்ட்ராங்காக நூல் தயாரித்துப் பறப்பதற்கு சிலந்தி சாப்பிடும் இலைகளைத்தானே சாப்பிட வேண்டும்.

கத்தியை வைத்துக்கொண்டு நம்ம ஊர் டி.எஸ்.பி-யைப் போல் ஹை-பிட்ச்சில் கத்திக்கொண்டே சண்டை போடும் ‘ஹீ-மேன்’ டேபிளில் இருக்கும் எல்லா வெரைட்டி உணவுகளையும் பாரபட்சமின்றி வெளுத்து வாங்குவார். தொண்டைக் கட்டிக்கொள்ளாமல் இருக்க பாலில் பனங்கற்கண்டு கலந்து ஒரு ட்ரம் குடிப்பார்.

ஒரு கையால் ஒரு ஹெலிகாப்டரையே தூக்கிச் சுழற்றும் ‘ஹல்க்’கிடம் ‘எந்தக் கடையில ராசா நீ அரிசி வாங்குற..?’  எனக் கேட்க வேண்டும். ஆள் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்தால் ஒரு புளியமரத்தையே வேரோடு பிடுங்கித் தின்பார் போல...

டேங்கர் லாரி ஆகாயத்தில் பறப்பது போல ஆங்காங்கே கியர் போட்டு, ஸ்டியரிங்கைத் திருப்பியபடி கட்டடங்களில் புகுந்து பறக்கும் ‘சூப்பர் மேன்’ பேரல் பேரலாக பெட்ரோலைக் குடிப்பாராக இருக்கும்.

முகத்தை ரொம்ப உக்கிரமாக வைத்திருக்கும் ‘பேட் மேன்’ வவ்வாலைப் போல பழங்களையும், சிறு பூச்சிகளையும் சாப்பிட்டால் அவர் உடலுக்கு சேராது. எனவே, பெரிய பறவைகளாகப் பிடித்து அமுக்குவார். கடைசியில் ஜீரணமாவதற்கு இஞ்சி தின்பார் போல. மூஞ்சியைப் பார்த்தா, அப்படிதான் தெரியுது.

அமெரிக்காவில் பாலம் கட்ட வைத்திருக்கும் ராட்சத இரும்புக்கம்பிகளை எல்லாம் ஆட்டையைப் போட்டு குச்சி சிப்ஸ் போல ஒவ்வொன்றாக உருவித் தின்பார் ‘அயர்ன் மேன்’. திருட்டைக் கண்டுபிடித்த ரா அதிகாரிகளையும் அடித்துத் துவம்சம் செய்து ‘இரும்புடா..!’ எனக் கத்திக்கொண்டே எஸ்கேப் ஆவார்.  

தேர்தலுக்கு முன்னாடி கருணாநிதி ‘எனக்கு சக்தி கொடுங்கள்’னு கேட்டது ஏன்னு இங்கே கேட்கப்படாது.

ஆமா !

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick