அம்மா நான் நல்லா இருக்கேன்!

ம்மாக்களுக்கு அவர்களது குழந்தைகள் முக்குக்கடைக்கு தேங்காய் பத்தை வாங்கச் சென்றாலே ‘சாலையில் பத்திரமாகப் போயிட்டு வந்துடுவாங்களா’ என மனதுக்குள் அப்படி பயப்படுவார்கள். நாம் வீடு திரும்ப பத்து நிமிடம் தாமதமானாலே நம் அம்மாக்களுக்கு ‘பக்பக்’ என இதயம் பதறும். நாம்  வந்ததும் ‘லேட் ஆச்சுனா ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா?’ என பருப்பு கடையும் மத்தைத் தூக்குவார்கள். உலகம் முழுக்கவே அம்மாக்கள்னா இப்படித்தான் இருப்பாங்க போல.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் க்யூனோனஸ் என்பவர், தான் செய்துகொண்டிருந்த மாடலிங் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு உலகம் சுற்றக் கிளம்பிவிட்டார். ஆனால், மனுஷனுக்கு ‘பக்கத்துத் தெருவுக்குப் போறேன்னு சொன்னாலே பயப்படும் அம்மா, உலகத்தையே ரவுண்டு அடிக்கப் போறேன்னு சொன்னால் எந்த அளவிற்குப் பயப்படுவாங்க’ என்பதை நன்கு புரிந்துவைத்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மாம், ஐ யம் ஃபைன் (அம்மா நான் நல்லாருக்கேன்) என்று எழுதப்பட்ட காகிதத்தோடு புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றி வருகிறார். தாய்ப்பாசத்துல நம்மளை மிஞ்சிடுவார் போல என அந்தப் புகைப்படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்தால், அனைத்துமே நக்கல் ரகம். கடலுக்கடியில் நின்று கொண்டு, ஸ்கை டைவிங் செய்துகொண்டு, பிகினி பெண்களோடு நின்றுகொண்டு ‘அம்மா, நான் நல்லாருக்கேன்’ என பேப்பரைத் தூக்கிக் காட்டி அட்டகாசம் செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘என் அம்மா இன்னமும் என்னை நினைச்சு பயந்துட்டுதான் இருக்காங்க. ஆனால், என் வாழ்க்கையும் நான் வாழணும்கிறதையும் இப்போ புரிஞ்சுகிட்டாங்க” என்கிறார். இதே மாதிரி மோடிஜியும் ‘நான் அடுத்து இந்த நாட்டிற்குச் செல்ல உள்ளேன்’னு பேப்பர்ல எழுதி போட்டோ எடுத்து போட்டார்னா, மனுஷன் எங்கே இருக்கார், எங்கே போகப் போறார்?னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வசதியா இருக்கும்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick