பிகினி ஏர்லைன்ஸ்!

தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம், ‘வியட்ஜெட்’ என்ற விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆனால், சமீபத்தில் அவர் செய்த வினோத வியாபார தந்திரத்தால் உலகின் கவனத்தைக் கவர்ந்திருப்பதோடு பலத்த விவாதத்தையும் கிளப்பி உள்ளார்.

உலகின் முதல் ‘பிகினி கேர்ள்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விமானப் பணிப்பெண்களுக்கு டூ பீஸ் பிகினி உடைகளை அதிகாரப்பூர்வ ஆடையாக்கி விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். ‘வியட் ஜெட்’ நிறுவனம்தான் அந்த நாட்டின் முதல் தனியார் விமானச் சேவை நிறுவனம் என்பதும் வியட்நாம் அரசே இப்போது அந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அரசுடைமையாக்க கோடான கோடிகளில் டீலிங் பேசிக்கொண்டிருக்கிறது என்பதும் ஆச்சரியம்.

‘‘பிகினி ஏர்ஹோஸ்டஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு 30 சதவிகிதம் அதிகமாக இண்டஸ்ட்ரி மார்க்கெட்டை எட்டிப் பிடித்துள்ளோம். அரசின் ‘வியட்நாம் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை விரைவில் எட்டிப்பிடித்து விடுவோம். இன்னும் அதிக அளவில் பிகினி விமானச் சேவையினை வழங்கத் திட்டமிட்டு இருக்கிறோம். பிகினி இமேஜோடு மக்கள் இதைத் தவறாகக் குழப்பிக்கொள்ள மாட்டார்கள். மக்களை வித்தியாசமாகக் கவரவே இந்தத் திட்டம். பிகினி என்பதை ஆபாசமான ஒன்றாகக் கருதாமல், மாறிவிட்ட கலாசாரச் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். 40-க்கும் மேற்பட்ட முக்கியமான பீச் லொகேஷன்களுக்குச் செல்லும் விமானச் சேவைகள் எல்லாமே இப்போது பிகினிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிகினி என்பதை பெண் சுதந்திரத்துக்கான முதல் படிநிலையாக நீங்கள் பார்க்க வேண்டும். பிகினி ஆடையை சுதந்திரத்துக்கான குறியீடாக நினைக்கும் பெண்கள் மிக ஆர்வமாகப் பணிப்பெண்களாக சேர்ந்திருக்கிறார்கள்’’ புன்முறுவலோடு சொல்கிறார் க்யோன் தி ப்யோங் தாவ்.

இவர் இப்படிச் சொன்னாலும், ‘சோஷலிச நாட்டில் பெண்களின் ஆடையைக் குறைத்துத் தந்திரமாக வியாபாரத்தைப் பெருக்குவது என்பது பெண்களையே இழிவுபடுத்தும் செயல். அதில் வேலை செய்யும் பணிப்பெண்கள் எல்லோருமே கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்’ எனச் சில ஊடகங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. ட்விட்டர் தளத்திலும் பல உள்ளூர் மற்றும் சர்வதேசப் பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்கள். அதற்கும் பொறுமையாகப் பதில் சொல்லி இருக்கிறார் ப்யோங் தாவ்!

‘‘ஒரு நிறுவனத்தின் அதிபராய் நான் என் நிறுவன ஊழியர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்து பணம் ஈட்டித் தருவது முதன்மைக் கடமை. இதை வியாபாரத் தந்திரமாகக் கருதத் தேவை இல்லை. உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் என்று வேண்டுமானால் விமர்சிக்கட்டும்’’ என்கிறார். இப்படி பிகினி ஆடையில் பணிப்பெண்கள் இருப்பது இது முதன்முறை இல்லை. அயர்லாந்து நாட்டின் ‘ரியான் ஏர்’ நிறுவனம் 2008-ல் தங்கள் நிறுவனத்தின் காலண்டர்களில் பணிப்பெண்களை பிகினி ஆடைகளில் போஸ் கொடுக்கச் செய்தது அந்நாட்டில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. கடைசி நேரத்தில் காலண்டரோடு நிறுத்திவிட்டு பிகினித் திட்டத்தையே ரத்து செய்தது ரியான் ஏர் நிறுவனம்.

அவ்வளவு ஏன்... இதே ‘வியட் ஜெட்’ நிறுவனம் 2012-ல் தங்கள் பணிப்பெண்களுக்கு நடுவானில் விமானத்தில் ‘அழகிப் போட்டி’ நடத்தியதற்காக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. இப்போது விமானப் பணிப்பெண்களையே பிகினியில் நடமாட வைத்து அந்நாட்டு அரசுக்கே விக்கல் வரவழைத்துள்ளார் அந்த லேடி கில்லி பொயோங் தாவ்!

சரி அதெல்லாம் இருக்கட்டும் மக்களே... வியட்நாமுக்கு ஒரு ட்ரிப் போகலாமா?

வியட்நாம் - சில சுவாரஸ்யத் தகவல்கள்...

டிங் டாங்: ஆமாம் பாஸ். அந்த ஊரின் நாணயத்தின் பெயர் ‘டாங்’. நம் ஊர் மதிப்பில் ஒரு ரூபாய்க்கு அங்கு  340 டாங் கிடைக்கும். அப்புறமென்ன டிங் டாங்... நாம வியட்நாமுக்குப் பறப்போம். டிங் டாங்... நாம கை நிறைய சம்பாதிப்போம்

கம்யூனிஸப் பின்னணி: இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மட்டுமல்ல, வியட்நாமும் அதிகப் பாதிப்புக்கு உள்ளானது. 1955 முதல் 1975 வரை அமெரிக்காவின் தலையீட்டால் உள்நாட்டுப்போர், நாட்டையே கலவர பூமியாக்கிக் கடும் வீழ்ச்சியில் தள்ளியது. 1954-ல் ஹோ சி மின் தலைமையில், கம்யூனிஸ்ட்கள் பதவிக்கு வந்தார்கள். ஐ.நா. ஒப்பந்தப்படி வடக்கு வியட்நாம்-தெற்கு வியட்நாம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடபகுதி கம்யூனிஸ்ட்களிடமும், தென்பகுதி அமெரிக்க ஆதரவாளர்களிடம் இருந்தது. இரு பகுதியினருக்கும் 1955-ல் கடும்போர் நடைபெற்றது. கம்யூனிஸ்ட்களின் கொரில்லாப் போரைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியது. அமெரிக்கா பின் வாங்கியதால், யுத்த பூமியில் அமைதி வந்தது. வியட்நாம் சோஷலிசக் குடியரசு (Socialistic Republic of Vietnam) என்னும் தனியொரு நாடு பிறந்தது. ஜப்பானைப் போலவே வியட்நாமும் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கிறது!

கலாசாரப் பின்னணி: வியட்நாமுக்கும் இந்தியாவுக்கும் கலாசார ரீதியாகப் பல ஒற்றுமைகள் உள்ளன. அங்கிருக்கும் டாணாங் நகரின் சம்பா அருங்காட்சியகத்தில் தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலில் இருப்பதைப்போல பிரமாண்ட சிவலிங்கம் உள்ளது. பஞ்சகச்ச வேட்டியும், தலைப்பாகையும் அணிந்த சம்பா இனத்தவர்களின் வழிபாட்டுக் கோயில் சிலைகள் தமிழர்களைப் போலவே இருக்கின்றன!

எதிர்ப்பின் பின்னணி:
‘தன் வரலாறு தெரியாதவன் பிணத்துக்கு சமம்’ என்று கூறி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியவர் வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின். ‘பிகினி ஆடை என்பது இப்போது அமெரிக்காவின் கலாசார படையெடுப்பு’ என்ற குரல் பரவலாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் வரையப்படும் குட்டைப்பாவாடை மற்றும் பாப் கட்டிங் சிகையலங்காரப் பெண் உருவங்களுக்கு அங்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், இப்போது பாரம்பர்ய ஆடைகளைத் தாங்கிய படங்கள் பாடப்புத்தகங்களில் மாற்றி வரையப்பட்டுள்ளன!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick