நான் அந்த மகாதேவன் இல்லை!

‘பை’ பிபின் குமார். ‘ஜில் ஜங் ஜக்’ படம் முழுவதும் ஹரஹர மகாதேவக்கி எஃபெக்டிலேயே பேசி தியேட்டருக்குள் காமெடிப் பட்டாசு கொளுத்தியவர். ‘என்னஹ்டா தலையில உஹ்ஜாலாவைக் கொட்டி வெச்சிருக்ஹ?’ என பிபின் குமார் ‘ஹ்’ போட்டு பேசும் அத்தனை இடங்களிலும் அப்ளாஸ் அலறியது. ஒரு வேளை பிபின்தான் ஹரஹர மகாதேவக்கி ஆடியோ வெளியிடுபவரோ என சந்தேகமே கிளம்ப, பிபினை சாட்டிங்கில் பிடித்து ஒரு காபி ஷாப்பில் மீட்டிங்கைப் போட்டேன்.

‘‘என் பெயர் பிபின் குமார். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தரமணியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். ஆறு மாசம்தான் ஹோட்டலில் வேலை பார்த்தேன். அப்புறம் ஆடை ஏற்றுமதி கம்பெனியின் துணைத் தலைவரா சில வருஷம் வேலை பார்த்து இப்போ நண்பரோடு சேர்ந்து சோர்ஸிங் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திட்டு வர்றேன். ‘பாஸ்தா பார்வெனன்டோ’னு மூன்று இடங்களில் காபி ஷாப்பும் வெச்சுருக்கேன்’’ என வித்தியாசமான வாய்ஸில் ஆரம்பித்தார். ஆமாம், படத்துல பேசினது டப்பிங் ஆர்ட்டிஸ்டாம்.

‘‘பிசினஸ் மேக்னட்டான நீங்க எப்படி சினிமாவில்?’’

‘‘நான் காலேஜ் முடிச்ச சமயம் தியேட்டர் ஆர்ட்டிஸ்டா கொஞ்ச நாள் நடிச்சுட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தொழிலைப் பார்க்கிறதுலேயே நேரம் போய்விட்டதால் தியேட்டர் பக்கம் மறுபடியும் கால் வைக்க முடியலை. ஆனால், ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா, ‘ஜில் ஜங் ஜக்’ படத்தோட எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூஸர் மிலிந்த் என சினிமாத் துறையைச் சேர்ந்த சில நண்பர்கள் எனக்கு இருக்காங்க. மிலிந்த் ராவ் இயக்கிய ‘காதல் டூ கல்யாணம்’ங்கிற படத்தில் பரோட்டா மாஸ்டர் ரோல் பண்ணேன். என்ன பிரச்னைனு தெரியலை. படம் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லை. சுதாவின் முதல் படமான ‘துரோகி’யில் கவுன்சிலராக ஒரு சீன் நடிச்சேன். சுதா ‘இறுதிச்சுற்று’ கதை எழுதிட்டு இருக்கும்போது, ‘படத்துல ஒரு கேரக்டர் நீங்க பண்றீங்களா?’னு கேட்டாங்க. நான் கொஞ்சம் பிஸியான பிசினஸ் மேக்னட்டுங்கிறதாலே (உண்மையைத்தான் பாஸ் சொல்றேன்!) நேரம் மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணிவிடுங்கனு கேட்டேன். அவங்களும் பக்காவா பிளான் பண்ண, நானும் தமிழ்நாட்டு கோச்சா நடிச்சுக் கொடுத்தேன். மிலிந்த் ஒருநாள் ‘புதுப் பசங்க ஒரு படம் பண்றாங்க. உன்னை மாதிரி ஒரு ஆளைத்தான் ஒரு கேரக்டருக்காக ரொம்பநாள் தேடிட்டு இருக்காங்க. நீ போய் ஆடிஷனில் கலந்துக்கோ’னு சொன்னர். நானும் போய்க் கலந்துக்கிட்டு நடிச்சு காமிக்க, அது அவங்களுக்கு பிடிச்சும் போக படத்துல நடிச்சுட்டேன்.’’

‘‘உங்களுக்கு ஹரஹர மகாதேவக்கி வாய்ஸ் கொடுக்கப் போறாங்கனு முதலிலேயே தெரியுமா?’’

‘‘இல்லை, உங்களுக்கு வித்தியாசமான வாய்ஸ் கொடுக்கப் போறோம்னு சொன்னாங்க. அவ்ளோதான். அது முழுக்க முழுக்க இயக்குநர் தீரஜுடைய ஐடியாதான். பக்காவாக பிளான் பண்ணித்தான் பசங்க வெச்சு செஞ்சுருக்காங்க. ஆனால், நானும் ஹரஹர மகாதேவக்கி ஆடியோ கேட்டிருக்கேன். பசங்கதான் ‘உங்களுக்கு எப்படி சார் ஹரஹர மகாதேவக்கி தெரியும்?’னு அதிர்ச்சியாவாங்க. ‘நான் உங்களைவிட சின்னப் பையன்டா’னு சொல்லி கலாய்ச்சு விட்டேன். என் வீட்லேயும் இதை ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. ஏன்னா, நான் ரொம்ப ஜாலியான ஆளுப்பா. சித்தார்த், தீரஜ் எல்லோரும் ‘நான் வர்ற சீனுக்கு அப்ளாஸ் அள்ளுது’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் எனக்கு யார் டப்பிங் பேசினாங்கனு தீரஜ் சொல்ல மாட்டேங்குறான்.’’

‘‘அடுத்த ப்ராஜெக்ட்?’’

‘‘இப்போதைக்கு ஒண்ணும் இல்லை. எனக்கு ஆயிரம் படம் நடிக்கணும்னு எல்லாம் ஆசையில்லை. ஆனால், நான் நடிச்ச குழுவோடு அடுத்த படமும் பண்னணும்ங்கிற ஆசை இருக்கு. தீரஜ்கிட்ட ‘அடுத்த படத்தில் நான் இல்லைனா  அவ்ளோதான்’னு சொல்லி வெச்சுருக்கேன்.’’

ரொம்ப்ஹ நன்றி...நான் வர்ஹேன் சார்... தனனானா...தனானானாணா...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick