நீங்களும் கத்தரி தூக்கலாம்!

திரைப்படங்களைப் பரிசீலிக்கும் சென்ஸார் போர்டு சமீபகாலமாக, ஏராளமான சர்ச்சைகளை சந்தித்து வருவதால் திரைப்பட தணிக்கை வாரியத்தை சீரமைக்க இருக்கிறது மத்திய அரசு. முதல் முயற்சியாக சென்ஸார் போர்டின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இயக்குநர் ஷ்யாம் பெனகல் தலைமையிலான குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களது பரிந்துரையின் பெயரில், தணிக்கைக் குழுவில் நடிகர் கமல்ஹாசன், மலையாள இயக்குநர் ஷாஜி கரூண், பெங்காலி திரைப்பட இயக்குநர் கவுதம் கோஷ் போன்றவர்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், சாதாரண சினிமா ரசிகர்களையும் ‘சென்ஸார் போர்டு’ சீரமைப்பில் பங்கேற்க வைப்பதற்காக, ‘சேவ் அவர் சினிமா’ என்ற இணையதளத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

இந்த இணையதளத்தின் சாராம்சம் இதுதான். ஆபாச வார்த்தையாகவே இருந்தாலும், கதைக்கு முக்கியமான அழுத்தம் கொடுக்கும் வசனங்களில் ‘பீப்’ ஒலியை ஒலிக்கச் செய்வது, வார்த்தைகளை ‘மியூட்’ செய்வது, காட்சிகளை வெட்டியெறிவது என சென்ஸார் போர்டின் செயல்பாடுகளால், ஒரு பிரயோஜனமும் கிடையாது. தவிர, ‘மியூட்’ செய்யப்படும் வசனங்களி்ன் மீதுதான் ரசிகர்களுக்கு அதிக கவனமும் வருகிறது. அதே சமயம் ஆபாசக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் என்ற பொதுவான அர்த்தத்தில் வெட்டப்படும் சில காட்சிகளால், திரைப்படத்தின் முழு நோக்கமும் ரசிகர்களுக்குச் சேராமல் போய்விடுகிறது. இப்படி விதவிதமான பிரச்னைகளைச் சீரமைக்க முனைகிறது ‘சேவ் அவர் சினிமா’ இணையதளம். இதில் பதிவிடும் கருத்துகளை, சாதாரண ரசிகர்களிடமும் ‘சென்ஸார் போர்டு’ எப்படி இயங்க வேண்டும்?’ என்ற கருத்தைக் கேட்கவிருக்கும் ஷ்யாம் பெனகல் தலைமையிலான குழுவுக்கு அனுப்புவார்களாம். சினிமாவில் ஆபாசமான காட்சிகள், வசனங்கள், முத்தக்காட்சிகள், வன்முறைக் காட்சிகளுக்கான வரையறை என நீங்கள் விரும்பும் எந்த ஒரு மாற்றத்தையும் பரிந்துரைக்கலாம். திரைப்படத்தில் மட்டுமல்லாமல், திரைப்படத்திற்கு முன்பு அரசால் அறிவிக்கப்படும் புகையிலைத் தடுப்பு விளம்பரங்கள் மீதான உங்கள் கருத்துகளையும் பதிவிடலாம்.

தவிர, இப்போதைய டெக்னாலஜி உலகில் தியேட்டரில் வெளியாகாத, தடைசெய்யப்பட்ட, குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்ட படங்களும் முழுமையாகக் கிடைத்துவிடும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டதால், யு, ஏ, யு/ஏ போன்ற சென்ஸார் சான்றிதழ்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பலாம்.

கருத்து சொல்றதுக்கு யாருக்குதான் பிடிக்காது? அடிச்சு விடுங்க!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick