“அரசியலுக்கு வந்தாலும் வேட்டி கட்ட மாட்டேன்!”

யக்குநர், நடிகர் ரவிமரியா இப்போது ‘நாம் தமிழர்’ கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர்! ‘‘இதுக்கு முன்னாடி எந்தக் கட்சியிலேயும் நான் இருந்ததில்லை. ‘மாயாண்டி குடும்பத்தார்’ பட ஷூட்டிங்ல நானும், அண்ணன் சீமானும் நண்பர்கள் ஆனோம். அப்புறம் சில பட்டிமன்றத்துல நான் பேசினதை ரசிச்சுப் பாராட்டினார். பிறகு, அவரோட கட்சிக் கொள்கையில எனக்கு ஈர்ப்பு வரவே, போன வருடம் ‘நாம் தமிழர்’ கட்சியில சேர்ந்தேன். கன்னி முயற்சியிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரா அறிமுகமானது சந்தோஷம்!’’ என்றபடி அமர்ந்த ரவிமரியா, 2016 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

‘‘வேட்பாளரா அறிமுகப்படுத்தினப்போ, உங்க ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?”

‘‘ஷாக்கும் ஆகலை. சந்தோஷமும் படலை. அண்ணன் சீமான் ‘வென்று எடுக்கணும்டா தம்பி’னு சொன்னார். ‘கண்டிப்பா வென்றெடுப்போம்ணே’னு பதில் சொன்னேன். சினிமாவுல அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் இருக்கணும்னு வசனம் எழுதியிருக்கோம். சீன்ஸ் உருவாக்கியிருக்கோம். அதையெல்லாம் ஓர் அரசியல்வாதியாகவே செஞ்சு காமிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன். தேர்தல்ல நிற்கிறதைப் பற்றி என் மனைவி என்ன சொல்லப் போறாங்களோனு ஒரு பயம் இருந்தது. நான் என்ன செஞ்சாலும் ஓகே சொல்றவங்க, இந்த விஷயத்துக்கு டபுள் ஓகே சொன்னாங்க!’’

‘‘என்ன பண்ணப் போறீங்க?”

‘‘நான் சினிமா இயக்குநர். சினிமாவுல பார்த்தீங்கனா, ஒவ்வொரு சீனும் நல்லா இருக்கணும். ஏற்கெனவே காட்டினதையே காட்டிக்கிட்டு இருந்தா, படம் ஓடாது. அது மாதிரி, மற்ற கட்சிகளைப் பற்றி குறை சொல்லிக்கிட்டு இருக்காம, இதுவரை திராவிடக் கட்சிகள் எதுவும் பண்ணலை. நாங்க இதெல்லாம் பண்ணுவோம்னு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். விருதுநகர் எனக்குப் பூர்வீகம். அம்மாவோட ஊர் அருப்புக்கோட்டை. அதனால, சென்டிமென்ட்டா இந்தத் தொகுதியில நிற்கிறேன். தவிர, எம்.ஏ., சோஷியல் சர்வீஸ் படிச்சுருக்கேன். அருப்புக்கோட்டை மட்டுமில்லாம, அதைச் சுற்றி இருக்கிற ஏரியாவிலும் என்னென்ன பிரச்னைகள் இருக்குனு 20 வருடமாவே எனக்குத் தெரியும்!’’

‘‘உங்க கட்சிக்கு வாக்கு வங்கி எவ்வளவு இருக்குனு தெரியுமா?”

‘‘ஆக்சுவலா, எல்லாக் கட்சியுமே எங்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்குனு தெரிஞ்சுக்கத்தான் தனித்துப் போட்டியிடுறதா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, எங்க நோக்கமே 234 தொகுதிகளையும் மொத்தமா ஜெயிக்கணும். அதுக்கு நாங்க உருவாக்கிக்கிட்டு இருக்கிற தேர்தல் அறிக்கை பக்கபலமா இருக்கும்னு நம்புறேன். ஏன்னா, அதுல இளம் தலைமுறை வாக்காளர்களைக் கவர, அத்தனை விஷயம் இருக்கு!’’

‘‘நோக்கம் சரிதான். அத்தனை தொகுதியிலேயும் ஜெயிச்சுடுவீங்களா?”

‘‘மக்கள் தெளிவா இருக்காங்க. ‘ரோடு ஏன் இப்படி இருக்கு? நம்ம தெருவுக்குத் தண்ணி ஏன் விட மாட்டேங்கிறாங்க?’னு எங்க அம்மாகிட்ட கேட்கும்போது எனக்கு 25 வயசு. ஆனா, இந்தக் கேள்வியை என் பத்து வயசு மகன் கேட்கிறான். இப்போ இருக்கிற ஜெனரேஷன் எவ்வளவு ஸ்பீடா இருக்காங்கனு புரியுதா? இதுதான் எங்க வெற்றிக்கு இருக்கிற நம்பிக்கை. ஏன்னா, இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு ‘ரெண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செஞ்சிருக்காங்க. ஒரு மாற்றமும் வரலையே?’னு சலிப்பு வந்திருச்சு. அந்தச் சலிப்புதான் எங்களோட பலம்!’’

‘‘பிரசாரத்துக்கு எப்படித் தயாராகியிருக்கீங்க?”

‘‘நாகரீமான அரசியல்வாதியா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதனால, வழக்கமான அரசியல்வாதிகள் மாதிரி வெள்ளை வேட்டி, சட்டையில நிற்க மாட்டேன். பேன்ட்தான் மாட்டிக்குவேன். முக்கியமா மக்கள்கிட்ட ஒரு நடிகனா என்னை முன்னிறுத்திக்க மாட்டேன். அண்ணன் சீமான் மற்ற கட்சிகளை விமர்சனம் பண்ணிப் பேசுவார். அது அவரோட பாணி. ‘நாம் தமிழர்’ கட்சி ஒரு குடும்பம். ஒவ்வொருத்தருக்கும் கோபம் இருக்கும். அதை வெவ்வேறு விதமா வெளிப்படுத்துவாங்க. ஆனா, எல்லோருடைய நோக்கமும் ஒண்ணுதான். அது, தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றணும்!’’

‘‘சினிமா?”

‘‘ ‘பீச்சாங்கை’ படத்துல அரசியல்வாதியா நடிக்கிறேன். எழில் இயக்குற ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துல காமெடி வில்லனா நடிச்சிருக்கேன். சுந்தர்.சி இயக்கப்போற ‘முத்துன கத்தரிக்கா’ படத்துல நடிக்கிறேன். இது தவிர இன்னும் சில படங்கள் இருக்கு. கடைசியா ‘சதுரங்க வேட்டை’ நட்டியை வெச்சு ‘மிளகா’ படத்தை இயக்கியிருந்தேன். இப்போ மறுபடியும் அவரோட சேர்ந்து ஒரு காமெடிப் படம் இயக்குற முயற்சியில இருக்கேன். அரசியலுக்குப் போனாலும், சினிமாவை விட்டுவிட மாட்டேன். எனக்கு சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்!’’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick