அப்போ அதிருப்தி...இப்போ அம்போ!

ருகிற சட்டமன்றத் தேர்தல் பல கட்சிகளுக்கும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக இருப்பதால், கூச்சலும் குழப்பமும் அதிகமாக உள்ளன. வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில்தான் அதிகமான கூட்டணிகளும், அளவுக்கதிகமான முதல்வர் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். வெற்றியோ, தோல்வியோ பல பேர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், சில அரசியல்வாதிகளின் நிலை பரிதாபகரமானது. ஐந்து வருடங்கள் சொகுசாக எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டு எந்தக் கட்சியில் மறுபடி சீட் வாங்குவதென்பது தெரியாமலும், தனியாகப் போட்டி போட வழி இல்லாமலும் குழப்பத்தில் இருக்கிறார்கள். கேப்டனிடம் கோபித்துக்கொண்டு போன சுந்தர்ராஜன், மாஃபா பாண்டியராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழ் அழகன், சுரேஷ்குமார், அருண் சுப்பிரமணியன், சாந்தி ஆகிய எட்டு எம்.எல்.ஏ-க்கள்தான் அவர்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் அ.தி.மு.க ஆதரவு நிலையை இவர்கள் எடுத்தார்கள். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பதுபோல் அந்த நேரத்தில் விஜயகாந்துக்கு எதிராக அவருக்குக் கடுப்பேற்றும் விதமாக அறிக்கைவிட்டு, தொகுதி வளர்ச்சிக்காக ஜெயலலிதாவைப் பார்த்துக் கோரிக்கைகளை(!) வைத்தார்கள். அவரும் தாயுள்ளத்தோடு அவர்களை அந்த நேரத்தில் அரவணைத்துக்கொண்டார். கொஞ்சநாள் மீடியாக்களில் வலம் வந்தார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர்களை யாரும் சீண்டவே இல்லை. தே.மு.தி.க-வினர் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரும்தான்.

பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். ஆனால், இந்த எட்டு பேருக்கும் அந்தத் தைரியம் இல்லை. கேப்டனே ரோஷப்பட்டு கட்சியை விட்டு நீக்கினால், இவர்களுடைய பதவிக்கு ஆபத்து இல்லை. அதற்கு முன் இவர்களாக அ.தி.மு.க-வில் இணைய முடியாது, அப்படிப்போனால் பதவி போய்விடும். அதனால் அதிருப்தி தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களாக இப்போதும் இருக்கிறார்கள். இருந்தும் என்ன செய்ய? ஒவ்வொருவரும் அவரவர் வட்டாரங்களில் அ.தி.மு.க நிர்வாகிகளால் படுகின்ற பாடுகள், அவமானங்கள் சொல்லி மாளாது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு வட்டச்செயலாளர் வண்டுமுருகன் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அ.தி.மு.க மேடைகளில் விஜயகாந்தை விமர்சித்துப் பேச, ‘இதோ அவரிடம் படாதபட்டு நம்மிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கும் சுந்தர்ராஜன் பேசுவார், மைக்கேல் ராயப்பன் பேசுவார்’ என்று அறிவிப்பார்கள். பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். நாளாக நாளாக அந்த வாய்ப்பு போனது, முன் வரிசையில் அமர வைக்கப்பட்டவர்கள், இப்போது மேடையில் கடைசி சீட்டுக்குத் தள்ளப்பட்டார்கள். சில நேரம் கூட்டத்தோடு கூட்டமாக கால் கடுக்க நிற்கவும் வைக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜன் விஜயகாந்தின் பால்யகால நண்பர். கட்சியின் பொருளாளராக இருந்தார். ஒரு சொத்து விவகாரத்தில் இருவருக்கும் பகை வந்தது. அதை வெளியில் சொல்லவும் முடியவில்லை. உடனே அ.தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார். தொகுதிக்குப் பெரிய அளவில் எதுவுமே செய்யவில்லை என்று ஒரே புகார். எம்.எல்.ஏ நிதியில் என்ன செய்தார் என்பதுகூட மக்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் மதுரையில் அவ்வப்போது நடக்கும் அ.தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு யாரும் அழைப்பதில்லை. இவராகக் கேள்விப்பட்டு வெட்கத்தைவிட்டு அங்கு சென்றாலும் உட்கார இடம் தர மறுக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் இவர் காதுபடவே, ‘வளர்த்துவிட்ட விஜயகாந்துக்கு துரோகம் பண்ணிட்டு இங்கே வந்த ஆளுதானே நீங்க’ என்று கிண்டலடிக்கிறார்களாம். அவசரப்பட்டுட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.

பல தொழில் முனைவோர்களை உருவாக்கியும், பல பெரிய நிறுவனங் களுக்குத் தேவையான திறமையானவர்களை அனுப்பி வைக்கும் கார்ப்பரேட் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான மாஃபா பாண்டியராஜனை எம்.எல்.ஏ-வாக ஆக்கியவர் விஜயகாந்த். அங்கு சுதந்திரம் இல்லை, பேச்சுரிமை இல்லை, ஆலோசனை சொல்ல முடியவில்லை என்று அ.தி.மு.க-விற்கு வந்தார். இங்கே இவரை ஊடகப் பேச்சாளராக்கி விட்டார்கள். சொற்சிக்கனத்தோடு பேசக்கூடியவர், மூச்சுக்கு முன்னூறு தடவை மாண்புமிகு அம்மா என்று  உச்சரிக்க, மற்றவரின் பார்வைக்கு மாஃபா, பாபாவைப்போல் பார்க்கப்பட்டார். இவர் வெற்றி பெற்ற விருதுநகர், இப்போதும் புழுதிநகராக காட்சியளிக்கிறது. சொந்தத் தொகுதிக்குள் வர முடியாத அளவுக்கு மக்களிடம் ‘நன்மதிப்பை’ப் பெற்றிருக்கிறார். அடுத்த தடவை ஊராட்சி வார்டு மெம்பருக்குக்கூட இவர் போட்டியிட முடியாது என்கிறார்கள்.

அருண்பாண்டியன் தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நின்று வெற்றி பெற்றார். கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் எவ்வளவோ பேர் அங்கிருக்க நண்பர் என்ற பாசத்தில் விஜயகாந்த் இவருக்கு சீட் கொடுத்தார். கடைசியில் விஜயகாந்துக்கு மட்டுமல்ல, பேராவூரணி மக்களுக்கும் பெரிய நாமத்தைப் போட்டார். தேர்தலின்போதுதான் இவரை மக்கள் பார்த்தார்கள். அதற்குப் பின் அ.தி.மு.க-வில் சேர்ந்த செய்தியை டி.வி-யில் பார்த்தார்கள். இவரைக் காணவில்லை என்று அடிக்கடி போஸ்டர் ஒட்டப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர். ஆட்சிக்குக் கெட்டபெயர் வந்துவிடக் கூடாது என்பதால், இந்தத் தொகுதியையும் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்கிறார் அமைச்சர் வைத்திலிங்கம். ஒருமுறை அருண்பாண்டியனை சட்டசபைக்குச் சென்று தொகுதிக்காரர்கள் சிலர் எப்படியோ பிடித்து விட்டார்கள். அவர்களிடம் ‘கவலைப்படாதீர்கள், உங்கள் பிரச்னைகளை எனக்கு மெயிலில் அனுப்புங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போ அடுத்தமுறை மெயிலிலேயே உங்களுக்கு ஓட்டு போடுறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

ராதாபுரத்தில் அப்பாவு எம்.எல்.ஏ-வாக இருந்தபோது ஏதாவது செய்துகொண்டிருப்பார். மைக்கேல் ராயப்பன் வெற்றி பெற்ற பிறகு சென்னையில் செட்டிலானதோடு சரி, அவருடைய சினிமா கம்பெனிக்குப் பிரச்னை வந்ததும் அப்படியே அ.தி.மு.க-வில் செட்டிலானார். தொகுதிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அ.தி.மு.க கூட்டங்களிலும் தலையைக் காட்டுவதில்லை. இவரை நெல்லை மாவட்ட அ.தி.மு.க காரர்களும் கண்டுகொள்வதில்லை. ‘நாடோடிகள்’னு படம் தயாரிச்சார்.  அதுக்காக இவரே ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஓடிப்போயிட்டாரே என்று கிண்டல் செய்கிறார்கள்.

இவர்களைப்போல் திருத்தணி எல்.எல்.ஏ அருண்சுப்ரமணியம், செங்கம் எம்.எல்.ஏ சுரேஷ்குமார், திட்டக்குடி தமிழழகன், சேந்தமங்கலம் சாந்தி ஆகியோர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுக்குள் உட்காந்து மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வினர் இவர்களை ஒண்டவந்த பிடாரியாகப் பார்க்கிறார்கள். அதுவும் தேர்தல் காலம் என்பதால் மறுபடியும் வாய்ப்பு கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் இவர்களைக் கண்டுகொள்வதில்லை.

குண்டக்க மண்டக்க கேப்டன் பேசினாலும் அடித்தாலும் துப்பினாலும் தே.மு.தி.க-வில் இருந்தபோது ஒரு மரியாதையாவது இருந்தது. ஆனால், வந்து சேர்ந்த அ.தி.மு.க-வில் எதுவுமே இல்லை. இனி நம் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதானா என்று புலம்பி வருகிறார்கள்!

-செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick