தப்பா நினைச்சாத் தப்பா?

சின்ன வயசுல ஆரம்பிச்சு இப்போவரை சில விஷயங்களை டக்குனு தப்பா நினைச்சது நான் மட்டும்தானா?

சத்யராஜோட முடி ஒரிஜினல்னு ரொம்ப நாளா நம்பினேன்.

விஜயகாந்த் போலீஸ் வேலையை ராஜினாமா பண்ணிட்டுதான் நடிக்க வந்தார்னு நினைச்சிட்டு இருந்தேன்.

‘விக்ரம்’ படத்தின் பாடலைக் கேட்டு இளையராஜா என்பவர் ஜாஹிர் உசேன் கணக்கா தலைமுடி காற்றில் பறக்க மியூஸிக் போட்டுருக்கார்னு ரொம்ப நம்பி ஏமாந்தேன். 

மேஜர் சுந்தர்ராஜனை ரொம்ப நாளா அவர் பேசுறதை வெச்சு ராணுவத்துல விஆர்எஸ் வாங்கிட்டு வந்தவர்னு உறுதியா நம்பினேன்.

பழைய கருப்பு வெள்ளை காலத்து நடிகர் ஏவிஎம் ராஜன் தான் பிரபல சினிமா கம்பெனியான ஏவிஎம் ஸ்டூடியோவின் ஓனர் என நினைத்தேன்.

விஜயகாந்த், அர்ஜூன் படங்களைப் பார்த்து வாசிம்கான்தான் இருக்கிறதுலேயே கொடூரமான பாகிஸ்தான் தீவிரவாதினு உறுதியா நம்பினேன்.

ரஜினி பறந்து பறந்து சண்டை போடுறதுக்குக் காரணமே அவர் ஸ்பிரிங் வெச்ச ஷூ போட்டிருக்கார் என்பதுதான்! 

பூஸ்ட் விளம்பரத்துல வர்றதைப் பார்த்து கபில்தேவும் சச்சினும் அண்ணன் தம்பினு ரொம்ப நாளா நம்பினது!

மூக்கைப் பார்த்து சுதந்திர இந்தியா காலத்து நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் பேத்தியின் மகளாக இருக்குமோ ரம்யாநம்பீசன் என நினைச்சேன்.

ஷேக் சின்ன மௌலானா என்ற நாதஸ்வர வித்வானுக்கு ஷேக் பெரிய மௌலானா என்ற அண்ணன் இருப்பதாய் நம்பினேன்.

‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் க்ளைமாக்ஸில் ‘ஜனவரி மாதம்...’ என்ற பாடலில் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் வந்து ஆடுவார். டக்குனு பார்த்துட்டு அட நம்ம காமெடி நடிகர் மயில்சாமினு நினைச்சேன். அவர் ஏன் இப்படி ஒரு சேஞ்ச் ஓவருக்குப் போனார்னு ரொம்ப கன்ஃபியூஸாகிட்டேன்.

மனோரமா இயர் புக் படிக்கிறப்போ அது நடிகை மனோரமாவோட கம்பெனினு நினைச்சிருக்கேன். 

புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்ங்கிறது லேடீஸ் யூஸ் பண்ணுறதைப்போல இருக்கும்னு டீனேஜ்ல நினைச்சிருக்கேன்.

இன்னும் நிறைய தப்புத்தப்பா நினைச்சிருக்கேன்...அது சென்ஸார்டு!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick