அண்ணி பிரேமலதாவுக்கு அரிய யோசனைகள்!

கேப்டனை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், சில முத்தான யோசனைகள் டைம்பாஸ் சார்பாக பிரேமலதாவுக்கு வழங்கலாமே ஃப்ரெண்ட்ச்...

கேப்டன் பிரஸ்மீட் போகும்போதெல்லாம் கையில் எப்போதும் அரை கிலோ திராட்சையைக் கொண்டு போய் அவருக்கு சாப்பிடக் கொடுக்கலாம். ‘தூ’ என அவர் துப்பும்போது ‘கேப்டன் திராட்சையைத் துப்பினார். அவர் துப்பும் விதைகள்தான் நாளை தமிழக அரசியலில் பெரும் விருட்சம் ஆகும்’ என அண்ணியார் சொன்னால் நம்பாமலா இருப்பார்கள்?
 
கண்ணுல தண்ணி அருவியா கொட்டும்போது பிரேமலதாவே எழுந்து, ‘பாருங்கள் உங்கள் கேப்டனின் கன்ணீரை, தமிழக மக்களின் நிலையை நினைத்தாலே அவருக்கு கண்ணீர் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. நா தழுதழுக்கிறது. இந்தக் கண்ணீருக்காகவாவது நீங்கள் தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றி அமைக்க வேண்டும். செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா?’ எனக் கேட்கச் சொல்லலாம். மக்கள் கண்டிப்பாக செஞ்சிடுவாங்க.
 
மேடையில் இருக்கும்போது பத்திரிகையாளர்களையோ கட்சிக்காரர்களையோ பார்த்து அவர் அபிநயம் பிடிப்பதைப்போல கையை அங்கும் இங்கும் ஆட்டுவார். முகத்தில் விதவிதமான ரியாக்‌ஷன்கள் கொடுப்பார். ‘கேப்டன் குறியீடாகப் பல விஷயங்களை நம் முன் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா? தமிழ் மக்களுக்காகத்தான் எல்லா வேலைகளையும் ஓரங்கட்டிவிட்டு இங்கு வந்திருக்கிறேன் என்கிறார்; அடுத்த ஆட்சியில் வீட்டுக்கே வந்து ரேஷன் கொடுக்கும் திட்டத்தைத்தான் சைகையால் காட்டிக்கொண்டிருக்கிறார்’ என குந்தாங்கூறாய் விளக்கம் சொல்லி விளக்கேற்றலாம். முடியவில்லை என்றால் ‘உங்கள் பாசத்துக்குரிய கேப்டன் இப்போது அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் போன்றோர்களின் ஆவிகளோடு சைகை மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார்’ எனச் சொல்லி திகில் கூட்டலாம்.
  
பிரசாரத்தின்போது தே.மு.தி.க கட்சி வேட்பாளர்கள் தலையில் முதுகில் முரசு சின்னத்தை நினைவு படுத்தும்விதமாக நிஜ முரசுகளைக் கட்டிவிட்டால் பக்கத்திலேயே கோபமாக நிற்கும் கேப்டன் அடித்தாலும் ‘முரசடித்து ஓட்டு கேட்க வந்திருக்கும் உங்கள் கேப்டனுக்கே உங்கள் வாக்குகள் விழட்டும்’ என அண்ணியார் பேசினால் செமையாய் இருக்கும்.

கேப்டனுக்கு டப்ஸ்மாஷ் பேச அவரைப்போலவே மிமிக்ரி செய்யும் ஒருவரை மேடையில் ஓரமாக மைக்கும் கையுமாக உட்கார வைத்துவிட வேண்டும். கேப்டனின் மைக்கை ஆஃப் செய்துவிட வேண்டும். கேப்டன் ‘எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?’ என்ற டைப்பில் எகிடு தகிடாகப் பேசும்போது ஸின்க் ஆகும்படி ‘எவ்வளவு பெரிய பெருமை தெரியுமா?’ என மாற்றிவிடலாம். ‘தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க’ போன்ற கோபமான டயலாக்குகளுக்கு ‘உனக்கு சேவை செய்வேன் பார்த்துக்க’ என மாற்றிப் பேசி சமாளிக்கலாம்.

‘சென்னைக்குப் போய் என் முடிவைச் சொல்றேன்’ என சென்னை ஏர்போர்ட்டில் சொல்லும் சூழல் வந்தால், ‘என்னடா கேப்டன் குழப்புறார்னுதானே பார்க்கிறீங்க. அவர் ஆளப்போகும் தமிழ்நாட்டின் தலைநகராம் நாளைய சென்னையைத்தான் அப்படிச் சொல்கிறார்’ என சமாளிஃபிகேஷன் தட்டலாம்.

கடைசியா ஒரு மேட்டர். எவ்வளவுதான் உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்ற தத்துவத்தைச் சொல்லிக்கொண்டு...ஜூட்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick