9 சின்ன வேலைகள்!

‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் “ஒரு பெரிய வேலைய முழுசா முடிக்கணும்னா ஒன்பது சின்ன வேலைகளை முடிக்கறதுக்கு யோசிக்கக் கூடாது” என பன்ச் பேசுவார் சித்தார்த். அது எந்த அளவுக்கு உண்மைனா, உதாரணத்துக்கு ஸ்கூல், காலேஜ்ல ரெக்கார்டு நோட் முடிக்கிறதை விட பெரிய வேலை கிடையவே கிடையாது. ஆனால், அதை முடிச்சு கையெழுத்து வாங்க ஒன்பது சின்ன வேலைகளை முடிக்கணும்.

நம்மகூட படிக்கிற புள்ளையை எவ்ளோ கஷ்டப்பட்டாவது நம்ம ரெக்கார்டு நோட்டை எழுத சம்மதிக்க வைக்கணும். நம்ம கையெழுத்து பென்குயின் கிறுக்கின மாதிரி இருக்கும்ல, அதுக்குதான்...

க்ளாஸ்லேயே நல்லா படம் வரையற பையன் ஒருத்தன் இருப்பான். அவனுக்கு பப்ஸ் வாங்கிக் கொடுத்துப் படம் வரைய வைக்கணும்.

பக்கத்துல இருக்கிறவன் கலர் பேனாவை அவர் மூச்சா போற நேரம் பார்த்து ஆட்டையைப் போட்டு, எல்லாத் தலைப்புக்கும் அடிக்கோடு போடணும்.

ஒவ்வொரு பக்கத்துக்கும் நம்ம அம்மாகிட்ட கொடுத்து பக்கம் எண் போடச் சொல்லணும். அதற்குக் கைமாறாக அன்னைக்கு வீட்ல பாத்திரம் கழுவணும்.

எப்படியும் எவனாவது முதல் ஆளாக முடிச்சு வெச்சுருப்பான். அதைப் பார்த்து மற்ற விஷயங்களை காப்பி செய்துகொள்ள சின்ன அடிதடியைச் சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும்.

எவனாவது முழு பிரவுன் சீட் வாங்கி இரண்டு பாதியாய்க் கிழிச்சு ஒரு பாதியைத் தன் ரெக்கார்டு நோட்டுக்கு போட்டுட்டு இருப்பான். அவனை மைண்ட்வாஷ் பண்ணி மிச்ச பாதி பிரவுன் சீட்டை வாங்கணும்.

அந்த பிரவுன் சீட்டையும் நமக்குப் போட வராது (அப்புறம் என்னதான் வரும்னு கேட்கிறது புரியுது). அதையும் எவனுக்காவது மாங்கா பத்தை வாங்கி கொடுத்து ஓ.கே பண்ணணும்.

அப்புறம் அந்த பிரவுன் சீட்டை ஒட்ட, பசைக்கோ, சோற்றுப் பருக்கைக்கோ யார்கிட்டயேனும் பவ்யமா நின்னு பல் இளிக்க வேண்டிய நிலைமை வரும். செய்யணும். அப்புறம் லேபிள் ஒட்டணும்.

நோட்டில் கையெழுத்துப் போடும்போது பக்கத்தை உற்றுப் பார்த்தால்தான் தப்பு கண்டுபிடிப்பார்கள். அதனால், ஆசிரியர் அருகில் நின்றுகொண்டு பக்கத்தை வேகவேகமாக புரட்ட வேண்டும்.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick