டாப் 10 காரணங்கள்!

வ்வொரு நாளும் தூங்கி எழுந்திரிக்கும்போது ‘இன்னைக்கு ஆபீஸ் லீவு’னு சொன்னா எப்படி இருக்கும்?!

நமக்கு மட்டுமில்ல பாஸ். உலகம் பூராவும் ஆபீஸ் வேலைக்குப் போறவங்க, இதே நினைப்பாதான் திரியறாங்களாம். சரி... அப்படி லீவு எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா, என்னென்ன காரணங்களைச் சொல்றாங்கனு பார்த்தா, பயபுள்ளைக எல்லோருமே சேம் பிஞ்ச்! இதோ, உலகம் முழுக்க லீவு எடுக்கறதுக்காக சொல்ற டாப் 10 காரணங்களைப் பாருங்களேன்.

10. ‘சொந்தக்காரங்களுக்குக் கல்யாணம்’. அதிலும், ‘அத்தைப் பொண்ணுக்கு நடந்த கல்யாணத்துக்குப் போக முடியலை. இன்னைக்கு திடீர்னு கிளம்பிவந்து என் வீட்டுல நிற்கிறாங்க!’ என்ற நம்பும்படியான வசனத்தைச் சேர்த்துக்கொண்டு லீவு கேட்பது அதிகமாம்!

9. ‘பல் வலிக்குதுனு பல நாளா சொல்லிக்கிட்டு இருந்தேனே பாஸ்... இன்னைக்குதான் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கார். போயிட்டு, நாளைக்கு வந்துடுறேனே?’ எனக் கன்னத்தில் கை வைத்துக்கொண்டே லீவு கேட்கும் முறை ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

8. ‘கண் வலி’தான் லீவு போடுவதற்குச் சிறந்த காரணமாம். தொற்றுநோயான இது, அருகில் இருப்பவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதால், ‘கண் சிவப்பா இருக்கு’னு லீவு கேட்க ஆரம்பிக்கும்போதே, அலறியடித்துக்கொண்டு விடுமுறை கொடுத்துவிடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட சீஸனில் மட்டுமே பரவும் நோய் என்பதால், அடிக்கடி இதைக் காரணமாகச் சொல்ல முடியாது.

7. ‘ஃப்ரெண்டுக்கு ஆக்ஸிடென்ட்!’ இதுதான் அடுத்த இடத்தில் இருக்கும் காரணம். ‘ஸோ சிம்பிள்’ காரணம் என்றாலும், பாஸுக்கு போனைப் போட்டு சென்டிமென்ட், எமோஷன், ஃபீலிங் எனக் கலந்துகட்டி நடிக்க வேண்டும். எங்கே விபத்து நடந்தது, எப்படி நடந்தது, எந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்? என எழும் கேள்விகளை, இடைவெளி இல்லாமல் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

6. சொந்தக்காரங்க இறந்துட்டாங்கனு சொன்னா, உடனே கிடைக்கும் லீவு. அதுக்காக ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ‘பாட்டி’யையே சாகடிச்சுக்கிட்டு இருக்காம, ஒண்ணுவிட்ட மாமா, ரெண்டுவிட்ட சித்தப்பானு கலந்துகட்டி அடிக்கணும். சில பேர் ‘போனவாரம்கூட வேலையெல்லாம் எப்படிப் போய்கிட்டு இருக்குனு போன்ல கேட்டாரு சார்’னு ஒரே போடா போட்டு, லீவு எடுத்துக்கிறாங்களாம்.

5. பைக், கார் ரிப்பேர், டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன்... இவைதான் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ‘லீவு எடுக்கும் காரணம்!’. இதுக்காகவே பைக், கார் வாங்கி வெச்சுக்கணும்ங்கிறது பல பேரோட எண்ணமாம்!

4. ‘பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்!’னு சொன்னா, லீவு கொடுக்காமலா இருப்பாங்க? ஆனா, மறுநாள் ஆபீஸ் போகும்போது மாவுக்கட்டோ, மருந்து தடவிய பேண்டேஜோ ரொம்ப முக்கியம். அதை மறந்தீங்க... வாழ்க்கையே வழுக்கி விழவும் வாய்ப்பிருக்கு!

3. ஆபீஸுக்கு வந்துட்டு திடுதிப்புனு பாஸைப் பார்த்து, ‘சார்... அம்மாவுக்கு உடம்பு முடியலை. டாக்டருக்கு போனைப் போட்டேன். உடனே வரச்சொல்லிட்டார்!’னு காரணம் சொல்லி, லீவு எடுக்கிறவங்க அதிகம். அதனாலதான், இந்த பாயின்டுக்கு மூணாவது இடம்.

2. அம்மா, அப்பாவுக்குப் பதில் ‘குழந்தைக்கு முடியலை!’னு சொன்னா, உடனடியா கிடைக்கும் லீவு. ‘வீட்டுல இருந்து கிளம்பும்போதே காய்ச்சலாதான் சார் இருந்துச்சு. இப்போ ரொம்ப கொதிக்குதாம்!’னு ஆஃப்பாயில் ரியாக்‌ஷன் காட்டுறவங்களுக்கு, மறுநாள்கூட லீவு கிடைக்க வாய்ப்பு இருக்கு என்கிறது ஆராய்ச்சி.

1. நம்பர் ஒன் இடத்தைக் கொடுத்து அங்கீகரிச்சது ஏன்னா, இருக்கிறதுலேயே ரொம்ப ரொம்ப சுலபமான காரணம் இது. அப்படியென்ன காரணம்? பாஸுக்கு போனைப் போட்டு, ‘காலையில இருந்து வாமிட்டா வந்துக்கிட்டு இருக்கு சார். ஒரு இடத்துல நிற்க முடியலை!’

சரி... உலகெங்கும் லீவு எடுக்கிறதுக்குச் சொல்ற காரணங்களை அடுக்கியாச்சு. இதைத்தாண்டி வேற ஏதாவது வித்தியாசமா யோசிச்சா, உங்களுக்கு நல்லது!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick