நமக்கு மட்டும் ஏன் இப்படி?

மக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுனு சில நேரம் தோணுமே... அதுதான் பாஸ் இது.

கல்யாணப் பந்தியில் முதல் ஆளா போய் உட்கார்ந்திருப்போம். ஊர்ப் பெரிய மனுஷன் யாராவது வந்தா, ‘தம்பி அடுத்த பந்தியில சாப்பிட்டுக்கலாம் எழுந்திரிப்பா’னு நம்மளை எழுப்பி அவரை உட்கார வைப்பாய்ங்க. அப்படி இப்படி குரங்கு பல்டி அடிச்சாவது கடைசிப் பந்தியில ஓர் இலையைப் பிடிப்போம். நமக்கு பக்கத்து இலையில் இருக்கிறவன்வரை கறிக்குருமா ஊத்துறவங்க நம்ம இலை வரும்போது திடீர்னு ரசம் ஊத்துவாங்க. என்னடான்னு விசாரிச்சா, ‘கறிக்குழம்பு முடிஞ்சு போச்சு. சப்ளை பண்ணுன எனக்கே இல்லைன்னா பாரேன்’னு ஃபீலிங் காட்டுவாய்ங்க.

நம்ம ஊர் லோக்கல் சலூன் கடைகளிலேயே சம்மர் கட்,  ஜான் சீனா கட்னு எல்லா கட்டும் வந்திருச்சு.  தியேட்டரில் என்ன படம் ஓடுதுனு பேப்பரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே சுவற்றில் இருக்கும் கட்டிங் போட்டோவையும் பார்த்து வைப்போம். நம்ம மண்டையையும் இப்படித்தான் அழகா மாத்துவாங்கனு நம்பி ரோலிங் சேரில் ஏறுவோம். வெட்டி முடிஞ்சதும் ‘ராஜா ராணி’ ஆர்யா மாதிரி இருக்கும்னு பார்த்தா அது ‘அவன் இவன்’ ஆர்யா மாதிரி  நமக்கே நம்மளை அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும்.

ஒரு முக்கியமான வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும்போது கஸ்டமர் கேர்ல இருந்து கால் வரும். க்ரெடிட் கார்ட், இன்ஷுரன்ஸ்னு, கண்டதையும் வாங்கச் சொல்லி வம்பு பண்ணுவாங்க. ஒரு கட்டத்துக்கு மேல இந்தக் குரலைக் கேட்டாலே நமக்கு செம காண்டாக ஆரம்பிச்சிடும். அதே சமயம் பக் கோட் வேணும், மொபைல் காணாமப் போச்சு, ஆஃபர் தெரிஞ்சுக்கணும்னு அவசரத்துக்கு என்னைக்காவது நாம கால் பண்ணினா, உங்கள் கால் ஹோல்டில் உள்ளதுனு கம்ப்யூட்டர் வாய்ஸ் சொல்லும். 3,8,9 ன்னு ஒவ்வொரு நம்பரா அமுக்கி பேசுரதுக்குள்ள விடிஞ்சிடும்; முடிஞ்சிடும்.

தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டுறவன், ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறவன், லைசன்ஸ் ஆர்.சி.புக்னு எதுவுமே இல்லாம வண்டி ஓட்டுறவனையெல்லாம்  நம்ம ஊர் ட்ராஃபிக் போலீஸ் விட்ருவாங்க. நாம போகும்போது மட்டும் எங்கேர்ந்தாவது பாய்ஞ்சு வந்து ‘ஏய்ய்ய்... நிறுத்து நிறுத்து’னு மடக்குவாங்க. ஊதிக்காட்டு, லைசென்ஸ் எடுன்னு நமக்கு மட்டும் எல்லா சோதனையும் நடக்கும்.

மொபைல்ல சார்ஜ் இல்லாதப்போ, அவசரத்துக்கு சார்ஜ் போட யார்கிட்டேயாவது ஓசியில சார்ஜர் வாங்குவோம். பத்து நிமிஷம் ஏத்திட்டுக் குடுத்திடலாம்னு நினைச்சு சார்ஜ் போடுவோம். அது கனெக்ட் ஆகவே ஆகாது. இத்தனைக்கும் அதே சாம்சங் சப்பட்டை பின் சார்ஜரா இருக்கும். அதே சார்ஜரை வேற யார் போனுக்கு கனெக்ட் பண்ணினாலும் ஏறும். நமக்கு மட்டும் ஏறாது. கொடுமையான மூவ்மென்ட் பாஸ் அது.

வகுப்பில் நம்மளைத் தவிர அத்தனை பேரும் காப்பி அடிப்பானுங்க. கடைசியா நமக்கு ஒரு 35 மார்க்கூட தேறாதோங்கிற நிலைமை வரும்போது ரெண்டு மார்க் கேள்விக்கான பதிலையும் நாலஞ்சு ஒன்வேர்டும் பார்த்து எழுதுவோம். பறக்கும்படை டீச்சர் பறந்து வந்து மத்த எல்லாரையும் விட்டுட்டு நம்மளை மட்டும் பொறி வெச்சுப் புடிப்பாங்க. அதே மாதிரி அடுத்தவன் ரேங்க் கார்டுல அவங்க அம்மா மாதிரி கையழுத்து போடும்போது மாட்டாத நாம, நம்மைப் பெத்த அம்மா மாதிரி கையழுத்து போடும்போது மாட்டிப்போம். இதுவும் நமக்கு மட்டும் ஏன்? மூவ்மென்ட்தான் பாஸ்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick