கிராமம் மாறிப்போச்சு!

சின்ன வயசுல பார்த்த கிராமத்தை எதிர்பார்த்துப்போய் சமீபத்துல நான் வாங்கிய பல்பை டைம்பாஸ் வாசகர்கள்கிட்ட ஷேர் பண்ணாட்டி எப்படி?

பாதிப்பேர் வீட்டில் ஹோண்டா ஷைன் வெளில நிற்குது. நாலஞ்சு பேரு ராயல் என்ஃபீல்டு வெச்சுருக்காங்க. அதுல ஒண்ணு 500 சிசி!

பஞ்சாயத்து டி.வி-லாம் இல்லை. 80 சதவிகித வீட்டுல டிஷ் இருக்கு. சோனி மேக்ஸ்ல ‘சக் தே இண்டியா’ பார்த்து விசிலடிக்கிறானுக சில்வாண்டுகள். டெக் எடுத்து கேசட்ல ‘வைகாசி பொறந்தாச்சு’ பார்த்த ஊரா இது?

ஆண்ட்ராய்டு போன் இல்லாத வீடே இல்லை. அப்படி இருந்துச்சுனா அங்கே ஆப்பிள் ஐ போன் இருக்கு. எலே சாஃப்ட்வேர் டௌன்லோடு ஆவ மாட்டீக்கு... பார்த்துக்கொடேன்!

பக்கத்து டவுனையே தன்னோட 9-ம் வகுப்பு வரை பார்க்காத பாலசுப்ரமணி-ஜெகதீசனுக்கு அப்போ நான்தான் ஹீரோ. டவுன் பற்றி பெருமை பீத்தி அவர்கள் காதில் புகை வர வைப்பேன். அந்தச் சகோதரர்கள் இப்போ டெல்லி குர்கவானில் வேலை பார்க்கிறார்கள்.

ஊரைச்சுற்றி நிறைய வயல்காடுகளைக் காணவில்லை. ‘ராமநாதபுரத்துக்கு அருகில் வீட்டு மனைகள்’ என ஏதோ ஒரு பில்டர்ஸ் விளம்பரப் பலகையும் கலர் கலரான கற்களும் ஊன்றப்பட்டிருந்தது தகதகத்தது.

டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் போல மூன்று வேளைகள் மட்டும் வரும் பஸ்களைக் காணவில்லை. அதற்கு பதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஊருக்குள் மினி பஸ்கள் புழுதி பறக்கப் பறந்துகொண்டிருந்தன.

கள்ளிப் பலகைகள் போட்டு பூட்டுப்போடும் குட்டிக் கடைகளும் அதில் கிடைக்கும் கருப்பு கலர், ஜிஞ்சர் சோடா எதுவும் இல்லை. ஆனால், டிஜிட்டல் பேனரோடு மளிகை வியாபாரக் கடை முளைத்திருந்தது. கடையில் பெப்ஸி, கோக், மிராண்டாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஊருக்குள் புதுசாய் கார் வந்தால் டவுசரைப் பிடித்துக்கொண்டு ஓடும் சிறுவர் கூட்டம் எதுவுமே பகலில் இல்லை. எல்லாக் குட்டீஸ்களும் டவுனுக்கு வேனில் போய்விட்டார்கள். அல்லது சோட்டா பீம், நிஞ்சா கட்டோரி, மோட்டு பட்லு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

முக்கால்வாசி யூத்துகள் ஃப்ரெஞ்ச் பியர்டு வைத்திருக்கிறார்கள். சிலர், ஸ்பைக் கட்டிங் செய்து தலையில் காரக்குழம்பைக் கொட்டி வைத்து தெறிக்க விடுகிறார்கள். ‘ஆலுமா டோலுமா’, ‘புலி புலி’ என தங்கள் தலைவனின் பாடல்களை ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick