பார்ட் பார்ட்டா பார்க்கலாமா?

ஜினியும் கமலும் இரண்டாம் பாக சினிமாக்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘அப்போ நாங்க மட்டும் தொக்கா?’ என சில சமீபத்திய படங்கள் கேட்கின்றன. இதோ டைம் பாஸின் இரண்டாம் பாக சினிமா சாய்ஸ்:

ஆம்பள-2: விஷால் இந்தப் படத்தில் லாஜிக்கலாக விமானத்தின் றெக்கையில் உட்கார்ந்து இன்ட்ரோ கொடுப்பார். பிரிந்து வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்துவரும் சித்தி, சித்தப்பா, சின்ன மாமியார் குடும்பங்களை வடுகப்பட்டியில் இருக்கும் பெரியம்மா பொண்ணு வயசுக்கு வந்த விழாவுக்கு வரவழைத்து சேர்த்துவைப்பதும் இடையில் பங்காளிக் குடும்ப வில்லன் பிரகஷ்ராஜைப் போட்டுப் பொளப்பதும்தான் கதை.

இசை-2: எஸ்.ஜே.சூர்யா கண்டது எல்லாமே கனவு என முதல் பாதியில் சொன்னார் அல்லவா? அதுவே ஒரு கனவுதான் என்பதோடு இதில் படம் தொடங்குகிறது. மற்றபடி எஸ்.ஜே.சூர்யா மிகப்பெரிய இசையமைப்பாளர். சத்யராஜ் அவருக்கு இசையோடு கொஞ்சம் துயரத்தையும் கற்றுக் கொடுத்தவர் என்பதும் இதிலும் தொடர்கிறது.

என்னை அறிந்தால்-2: ‘விக்டர்’ அருண் விஜய் இறந்ததும் அஜித், த்ரிஷாவின் மகள் இஷாவைத் தன் மகளாக பேரன்போடு வளர்த்து நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ‘விக்டர்’ அருண் விஜய்க்கு கூடுவாஞ்சேரியில் டேஞ்சர் டேனியல் என்ற தம்பி இருக்கும் விஷயம் தெரியாமல் போகிறது. இந்த நிலையில் தன்னால் காப்பாற்றப்பட்ட அனுஷ்காவுக்கு அஜித் மீது காதல் வருகிறது. அனுஷ்காவுக்கு அல்ரெடி கல்யாணம் ஆகி கணவரைப் பிரிந்து இருக்கும் விஷயமும் லேட்டாக அஜித்துக்குத் தெரிய வருகிறது. ‘கௌதம் மேனன் படத்துல கல்யாணம் ஆன பொண்ணைத்தான் காதல் செய்வோம்’ என்ற டயலாக்கைச் சொல்லி அஜித்தும் காதலிக்கிறார். டேஞ்சர் டேனியல் ஸ்கெட்ச் போட்டு அனுஷ்காவைத் தூக்குகிறார். பாண்டிச்சேரி ஹார்பர் பக்கத்தில் டேனியலோடு கொலவெறி ஃபைட் முடிந்து சில்-அவுட்டில் நடந்து போகிறார் அஜித். அதோடு பார்ட்-3 தொடரும் என கௌதம் மேனன் வாய்ஸோடு படம் முடியும்.

தங்க மகன் 2: தனுஷ்-சமந்தா குடும்பத்தில் தினசரி நடக்கும் மாமியார்-மருமகள்-மாமனார், ஈகோ சண்டைகளைத் தொடர்ந்து சீரியல் ஸ்டைலில் படமாக்கி அதை எடிட் செய்து போட்டுவிட்டால் போதும். பார்ட் 3 ஓவர். இடையில் அங்கங்கே ‘தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழ்ப் படம் நடிக்கலாம், தெலுங்குப் படம் நடிக்கலாம். இந்திப் படம் நடிக்கலாம்...அவ்வளவு ஏன் ஹாலிவுட் படம்கூட நடிக்கலாம்’ என தனுஷ் பேசப் பேச க்ளாப்ஸ் மட்டும் அள்ளும்.

காக்கி சட்டை-2: கான்ஸ்டபிள் சினாகானா டபுள் புரோமோஷனில் நார்காடிக்ஸ் டிஎஸ்பியாக பதவி உயர்த்தப்படுகிறார். மலேசியாவுக்கு கடத்தப்படும் போதை நெட்வொர்க் கும்பலோடும் நடுவில் அவரை ஒன் சைடாகக் காதலிக்கும் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷோடு ட்ரீம் சாங்கோடும் குஜாலாக இருக்கிறார். க்ளைமாக்ஸில் ‘ஹார்ட் ஒர்க் பண்ணித்தானேடா நான் டிஎஸ்பி ஆனேன். ஆனா, லக்குனு ஏன்டா சொல்றீங்க. இங்கே பாருங்கடா, மலேசியா ரௌடிங்களோட நான் போட்ட ஃபைட்ல வந்த காயங்களை’னு தழும்புகளைக் காட்ட க்ளைமாக்ஸில் நெகிழ வைக்கிறார் சினாகானா.

கொம்பன் 2: மாமனார் ராஜ்கிரணோட கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்-அவுட் ஆகும், கொம்பன் கார்த்திக்கும் அவர் மனைவி லட்சுமி மேனனுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கமுதி ஊர்த்திருவிழா பாட்டில் வளர்ந்து பெரிய கார்த்தியாகிறது. ஊதாரியாகத் திரியும் அப்பா கார்த்தியைக் கன்னாபின்னாவென கலாய்த்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறது. மனசுக்குள் வெதும்பும் அப்பா கார்த்தி நல்லவர்தான் என்பதை தாத்தா ராஜ்கிரண் சாகும்போது பேரன் கார்த்திக்குப் புரிய வைத்துவிட்டு மண்டையைப் போடுகிறார். டபுள் கார்த்திகளும் சேர்ந்து தங்கள் பொது எதிரியான தடித்தாண்டவராயன் குடும்பத்தைப் பழிக்குப் பழி வாங்குவதோடு படம் முடிவடைகிறது.

மாஸ்-2: அப்பா சூர்யா கனடா ரிட்டர்ன் ஆனதும் மகன் சூர்யா அப்பாவைத் தேடி டொராண்டோ போகிறார். அங்கே ஒரு கும்பலோடு உரசல். மகன் சூர்யாவைப் போட்டுவிடுகிறது அந்தக் கும்பல். பிறகென்ன ரெண்டு பேய் சூர்யாக்களும் எக்ஸ்ட்ரா பற்கள் வைத்துக்கொண்டு அந்தக் கும்பலுக்கு இன்டெர்நேஷனல் லெவலில் தண்ணி காட்டி சாவடிக்கிறார்கள். நடுநடுவே கலகலப்புப் பேயாக மொக்கை ஜோக்ஸ் அள்ளிவிடுகிறார் பிரேம்ஜி பேய்! படம் முடிவடையும்போது ‘எ வெங்கட் பிரபு டெவில்’னு எண்ட் கார்டு போடலாம்.

இன்னும் வேதாளம் 2, புலி 2, வாலு 2-லாம் இருக்கு பாஸ்... தெறிச்சு ஓடலாமா?

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick