எறும்பை வைத்து ஒரு கலை!

நிலத்தின் வெளிப்புறத்தில் குவிக்கப்பட்ட மணல்களாகக் காணப்படும் எறும்புகளின் புற்றுகள், நிலத்திற்குக் கீழே அவ்வளவு அழகான அமைப்பாக இருக்குமாம். எப்படித் தேன்கூடும், கரையான்புற்றுகளும் கட்டட அமைப்பின் அதிசயங்களாகக் கருதப்படுகின்றனவோ, அதே போல எறும்புகளின் புற்றுகளையும் அழகான அமைப்பு என ரசிக்கிறார்கள். எறும்புகளின் இந்த அழகான உழைப்பை அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் என்ற மனிதனின் சிந்தனைதான் ‘ஆன்ட்ஹில் ஆர்ட்’ எனப்படும் கலை. அதாவது, அழகை அபகரிக்கும் கோரமான சிந்தனை!

மியூசியங்களில் அடுக்கிவைக்க, வீடுகளில் அழகுப்பொருட்களாகப் பயன்படுத்த, பரிசுப் பொருளாக மற்றவர்களுக்குக் கொடுக்க என விதவிதமான பயன்பாடுகளுக்காக கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக எறும்புகளின் புற்றுகள் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ‘ஆன்ட்ஹில் ஆர்ட்’ நிறுவனம் இதைத் தீவிரமாகவே செய்துகொண்டிருக்கிறது. எப்படி?

பழுக்கக் காய்ச்சிய அலுமினியத்தை எறும்புகளின் புற்றுகளில் ஊற்றினால், ‘ஆன்ட்ஹில் சிலை’ ரெடி! அலுமினியமானது, எறும்புகளின் அறைகளையோ, பாதைகளையோ பாதிக்காத வண்ணம் அதன் பரப்புகளில் தேங்கும். புற்று முழுவதும் அலுமினியத்தால் நிரம்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு, எறும்புப்புற்றைச் சுற்றியுள்ள மண்ணை அகற்றுகிறார்கள். அவ்வளவுதான். எறும்புப்புற்றின் மொத்த அமைப்பும் வேரில் இருந்து உச்சிவரை கொண்ட ‘மர’ அமைப்பாகக் கிடைக்கிறது. பயன்படுத்திய அலுமினியத்தின் எடையைப் பொறுத்தும், எறும்புப்புற்றின் அழகைப் பொறுத்தும் இதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிலர் தங்கம் போன்ற வேறு உலோகங்களை ஊற்றியும் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

சிறிய எறும்புகளின் புற்று, கட்டெறும்புகளின் புற்றுகள் என விதவிதமான புற்றுகளில் அலுமினியத்தை ஊற்றி அச்செடுத்தவர்கள், இப்போது கரையான் புற்றுகளுக்கும் குறி வைத்திருக்கிறார்கள்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick