போதையேறிப் போச்சு!

காலையில ‘எப்படா திறப்பாங்க?’னு காத்திருந்து, ராத்திரி ‘மூடிடப் போறாங்கடா சீக்கிரம்’னு விரட்டிப் போய்க் குடிக்கிறதுக்கு ‘டாஸ்மாக்’ இருக்கு. மனுஷங்களுக்கு ஓகே... விலங்குகள் சரக்கு அடிக்குமானு கூகுள்ல தட்டினேன். போதை ஏத்திக்கிறதுக்கு ஸ்பெஷலா ஒரு மரமே இருக்காம் பாஸ்!

ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் மரூலா என்ற மரம்தான், காட்டு விலங்குகளுக்கான டாஸ்மாக்! நாம சாப்பிடுற ஆரஞ்சுப் பழத் தோற்றம், புளிப்புச் சுவை, வைட்டமின் சி நிறைந்தது இப்படிப் பல சிறப்புகள் மரூலா பழத்துக்கு இருந்தாலும் 7முதல் 12 சதவிகித அளவுக்கு ஆல்கஹால் நிறைந்திருப்பதுதான், அத்தனை விலங்குகளும் இந்த மரத்தைச் சுற்றுவதற்கான முக்கியக் காரணம். யானைகளை ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருந்த ஒருத்தர், மரூலா மரங்களை யானைகள் அதிகம் லைக் பண்றதுக்கான காரணம் என்னனு ஆராய்ச்சி செஞ்சுருக்கார். யானை மட்டுமல்ல, ஒட்டகச் சிவிங்கி, காட்டுப்பன்றி, குரங்குகள் என மற்ற விலங்குகளோடு நெருப்புக் கோழி வரை... பல வகையான உயிரினங்களுக்கு ‘மரூலா’தான் குவாட்டர், கட்டிங், ஃபுல்... எல்லாமே!

மரூலா மரங்களின் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, விதவிதமான விலங்குகள் போதையில் தள்ளாடிக்கொண்டே நகரும் அட்ராசிட்டி வீடியோக்கள் இணையதளங்களில் இருக்கின்றன. எவ்வளவு பழங்களைச் சாப்பிட்டாலும், மற்ற விலங்குகளைப் போல மட்டையாகாமல், பெரும்பாலான யானைகள் கெத்தாக நிற்கின்றன. இதற்காகவே ‘மரூலா’விற்கு யானை மரம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அப்படினா, காடுகளில் வாழும் விலங்குகளும் கெட்டுப்போச்சானு யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில், டிசம்பர் முதல் மார்ச் வரை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே ‘மரூலா’ பழங்களைத் தரும். தவிர, இந்தப் பழங்களை உட்கொள்வதன் மூலம் பல சத்துகளும் கிடைப்பதால், இது விலங்குகளுக்கு பெருமளவில் தீங்கு விளைவிக்காது. ஆனா, நாம சும்மா விடுவோமா?

மரூலா பழங்களில் இருந்து உருவான மது வகைகளுக்கு ‘அமரூலா’ என்று பெயரிட்டு குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரேசிலில் பிரபலமான மது வகையான இது விரைவில் நம் ஊர் ‘டாஸ்மாக்’கிலும் கிடைக்கலாம்!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick