யோகா ஆடு!

ஸ்வீடனைச் சேர்ந்த ரேச்சல் ப்ராத்தன் ஒரு பிரபலமான யோகா ஆசிரியை. ‘யோகா கேர்ள்’ என அழைக்கப்படும் ரேச்சலை 1.8 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகிறார்கள்.  இவர் தற்போது அருபா தீவில் கணவன், குழந்தை மற்றும் சில செல்லப் பிராணிகளோடு வசித்து வருகிறார். அந்தச் செல்லப் பிராணிகளில் ‘பென்னி’ என்ற ஆட்டுக்குட்டியும் ஒன்று.

இந்த ஆட்டுக்குட்டியை ரேச்சலுக்கு அவரது கணவர் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்தார். ஆனால், அந்த ஆட்டுக்குட்டியோ போஸ்டரைக் கிழித்து உண்ணாமல், சுவற்றை உரசிக்கொண்டு நடக்காமல் ரேச்சலோடு சேர்ந்து யோகா செய்து உலகப் பிரபலம் ஆகிவிட்டது. ரேச்சலோடு சேர்ந்து ஆட்டுக்குட்டி யோகா செய்யும் வீடியோவை யூ டியூபிலும் காணலாம். இந்த ஆட்டுக்குட்டிக்கும் ‘பென்னி தி கோட்’ என இன்ஸ்டாகிராம் அக்கெளன்ட் ஓப்பன் செய்து அந்த ஆட்டுக்குட்டியின் படங்களை மட்டுமே ரேச்சல் பதிவேற்ற, அந்த அக்கெளன்ட்டையும் 40,000 மக்கள் ஃபாலோ செய்கிறார்கள். பலரும் ரேச்சல் தன் செல்லப் பிராணிகள் மீது காட்டும் அன்பைச் சிலாகித்து வருகிறார்கள்.

சிலரோ ‘எப்படி பென்னி ரேச்சலோடு சேர்ந்து யோகா செய்கிறதோ, அதேபோல் பென்னியோடு சேர்ந்து ரேச்சல் இலை கடிக்கப் போகிறார்’ என கலாய்த்தும் வருகிறார்கள். எது எப்படியோ இதுவே பென்னி நம்ம ஊர்ல இருந்திருந்தால் ரம்ஜானுக்கோ, காதுகுத்துக்கோ கறிக்குழம்பில் மிதந்திருக்கும்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick