டப்ஸ்மாஷ் பண்ணுங்க, நடிங்க!

கோடம்பாக்கத்தில் வாய்ப்புக்காக பலர் எப்படி எப்படியோ அலைந்து கொண்டிருக்க, சூப்பர்ஸ்டார் ரஜினி உருவத்தில் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். ஆச்சர்யமாகி யாரென்று விசாரித்தால்...

‘‘என் பெயர் ராஜ்குமார். நீலகிரி சொந்த ஊர். இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சதும் நடிப்பு ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஒரு கம்பெனியில் வாய்ப்பு கேட்டேன். எடுத்தவுடனே ஓகே தம்பி உங்களை ஹீரோவா வெச்சு படம் பண்றோம்னு சொல்லிட்டாங்க. கடைசியிலதான் தெரிஞ்சுது அது உப்புமா கம்பெனின்னு. இப்படி ஏகப்பட்ட உப்புமா கம்பெனிகள்ல இதுவரை ஏறி இறங்கிட்டேன். காலேஜ் படிக்கும்போது என்னைப் பார்த்து ரஜினி மாதிரி இருக்கேன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. ஆமான்னு எனக்கே தோணுச்சு. பாலச்சந்தர் சார் உயிரோடு இருக்கும்போது அவர் வீட்டுக்குப் போனேன். ‘மாயக்கண்ணாடி’ படத்துல சேரன் ரஜினியை காப்பியடித்ததைப் போல நானும் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு பிடித்தேன். கே.பி சார் கண்ணில் பட்டு நாமளும் சூப்பர் ஸ்டார் ஆகிட மாட்டோமானு ஒரு ஆசைதான். ஆனா பார்க்க முடியலை. 

கொஞ்ச நாள் போச்சு. கோடம்பாக்கத்தில் சில பேர் பழக்கமானாங்க. அவங்க மூலமா டெலிஃபிலிம் வாய்ப்பு வந்துச்சு. ‘முட்டுசந்து’ங்கிற படத்தில் நடிச்சேன். அந்தப் படம் ஒருமணி நேரம்தான் ஓடும். ஏ.வி.எம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணினோம். படம் நல்ல பெயர் வாங்கித் தந்துச்சு. நிறைய இயக்குநர்கள் பாராட்டினாங்க. இதைத் திரைப்படமா எடுக்கலாமேனு ஒரு இயக்குநர் முன் வர ‘முட்டுசந்து’ டீம் பயங்கர ஹேப்பி. திடீர்னு ஒருநாள் தயாரிப்பாளரோட சொந்தக்காரங்க வீட்டில் துக்கம்னு படப்பிடிப்பை நிறுத்த  எங்க முட்டுச் சந்தும் முடங்கிப்போச்சு.

சோகமான அந்த நேரத்தில் டப்ஸ்மாஷ் ஆப்ஸ் வர ரஜினி சார் மாதிரி நான் சில வீடியோக்களை விட்டேன். அதுவரை என் ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு பத்து பதினைஞ்சி லைக்ஸ்தான் வரும். ஆனா தலைவர் டப்ஸ்மாஷ் போட ஆரம்பிச்சதுல இருந்து முன்னூறு நானூறு வந்துச்சு. எல்லாரும் அந்த வீடியோக்களை ஷேர் பண்ண பி. வாசு சார் மகன் ஷக்தி சார் வரைக்கும் போயிடுச்சு. அவர் பார்த்துட்டு போன் பண்ணிப் பாராட்டினார். அடுத்து அவர் வீட்டுக்கே வரவெச்சு நான் இதுவரை யாரையும் வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டினது கிடையாதுனு சொல்லி அவர் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். இப்போ நிறைய சினிமா நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. விரைவில் என்னை வெள்ளித்திரையில் பார்க்கலாம்’’ என்றவர்...
 

‘‘நடிப்பு ஆசையில் ஊரைவிட்டு வந்து சினிமா கம்பெனிகளின் வாசலில் காலை ஆறு மணிக்கே போய் காத்துக் கிடக்கிறது, அவங்க கூப்பிடும்போது போய் நடிச்சுக் காட்டுறது, முக்கியமா எடுபுடியா இருக்கிறது அதெல்லாம் பழைய காலம் பாஸ். இப்போ இருந்த இடத்திலேயே டப்ஸ்மாஷ் செஞ்சு திறமையைக் காட்டி அதன் மூலம் வாய்ப்பு தேடுறதுதான் புதுசு. என்னை மாதிரி கோடம்பாக்கத்தில் பல பேர் அலையறாங்க. அவங்களுக்கெல்லாம் இந்த டப்ஸ்மாஷ் பெரிய வரப்பிரசாதம்’’ என்றார்.

ரஜினிக்காக ஷாரூக்கான் லுங்கி டான்ஸ் சமர்ப்பித்ததைப் போல ராஜ், ரஜினியின் பல படங்களைக் கலந்து கட்டி ஒரு டப்ஸ்மாஷ் சமர்ப்பித்திருக்கிறார்! 

https://www.youtube.com/watch?v=N17LYX1LWiw

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick