உஷாரா இருந்துக்கங்க!

ன்லைன்ல பொருள் வாங்கி உடைஞ்சாக்கூட பரவாயில்லை பாஸ். காதலிக்க ஆசைப்பட்டு ஆஸ்பத்திரியில போய்தான் பல ஆன்லைன் காதல்கள் முடியுது. அப்படிப்பட்ட சில ஆன்லைன்ல ஆப்பான காதல்கள் இவை.

அமெரிக்காவின் ப்ராட்டும் சீனாவில் இருக்கும் ஒரு பெண்ணும் ஆன்லைனிலேயே டேட்டியிருக்கிறார்கள். 18 வயதான ப்ராட் ஒரு ஆர்வத்தில் 7,000 மைல்கள் பயணித்து இந்தப் பெண்ணைப் பார்க்க வந்திருக்கிறார். வந்தவுடன் டயல் செய்தால் ஸ்விட்ச் ஆஃப். சீனாவில் தேவதாஸாக, பாட்டிலும் தாடியுமாக அலைந்த மனிதர், கடைசியில் தற்கொலை முடிவு வரை சென்றுவிட்டாராம். எப்படியோ இவரைக் காப்பாற்றிய போலீஸ், அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்த போலீஸிடம் அந்தப் பெண்ணோ, ‘சாகக்கிடக்கிறார் என்பதற்காகவெல்லாம் பார்க்க முடியாது’ என அதட்டல் பதில் வேறு தந்திருக்கிறார். இரக்கமே இல்லையா?

அமெரிக்காவைச் சேர்ந்த சாரா என்ற பெண் ஆப்பிரிக்காவில் இருக்கும் கிறிஸ் ஆல்சனை இணைய வழியாகவே டேட்டியிருக்கிறார். ஆல்சனும் சொல்லுடா ராணி, தேன்ன்ன்ன் அடை எனச் செல்ல மழை பொழிய, கரென்ஸிகளை வாரி இரைத்திருக்கிறார் சாரா. சுமார் 1 மில்லியன் டாலர்  வரை ஏமாந்தும் ஆல்சன் திரும்பி வருவார் என நம்பி இருக்கிறார் சாரா. பின்னர், அமெரிக்காவின் சொல்வதெல்லாம் உண்மை மாதிரியானதொரு நிகழ்ச்சியில் சாராவுக்கு வேப்பிலை அடித்து அனுப்பியிருக்கிறார்கள். சுமார் ஏழு கோடி ரூபாயை சும்மா கொடுத்து இருக்கீங்க சாரா. இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

நியூஸிலாந்தில் வாழும் 33 வயதான நடாலியா பர்கெஸ் வேற லெவல். அழகான பெண்களின் புகைப்படங்களை வைத்து பல அக்கௌன்ட்டுகள் ஆரம்பித்து இருக்கிறார். நடாலியாவின் அதிகபட்ச சுரண்டல் எல்லாம், மொபைல் ரீ சார்ஜ் மட்டும்தான். ஆனால் சில நாட்களில், அந்த ஐடியில் இருக்கும் பெண் இறந்துவிட்டார் என ஸ்டேட்டஸ் போடுவாராம். ரொம்ப சின்னத் திருடர்.

கடந்த ஆண்டு மட்டும் ஆஸ்திரேலியாவில் சுமார் 16 மில்லியன் டாலரை ஆன்லைன் துணையை நம்பி ஏமாந்து இருக்கிறார்கள். 2620 பேர் போலீஸில் புகார் அளித்து இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் மட்டும் பாஸ். நம்ம நாட்டுல எல்லாம் ஏமாந்தாலும், வெளியே சொன்னா வெட்கக்கேடு என்பது போல், சிரிச்ச மேனிக்கு முகத்தை வைத்துக்கொள்வார்கள்.

என்னதான் ஆன்லைன் காதல்ல ஏமாந்தாலும், சில நல்ல காதல்கள் ஆன்லைன் மூலமா கிடைத்துதான் பலர் வாழ்க்கையில குத்துவிளக்கே ஏத்தியிருக்காங்க. ஆனால், எல்லோருக்கும் ‘காதல் கோட்டை’ தேவயானியும், அஜித்தும் வந்து சிக்கு வதில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு...

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick