ஆவலுடன் எதிர்பார்க்கும்...

னிமேஷன் படங்கள் எப்போதுமே வேற லெவல். படம் பார்ப்பவர்களின் மனநிலையைக் குழந்தை மனநிலைக்கு இறக்கி, அப்படியே குதூகலப்படுத்துவதில் அனிமேஷன் படங்கள் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றவை. இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சில அனிமேஷன் படங்கள்!

ஜூடோபியா

உலகம் இப்போது இருக்கும் நிலையில், மனிதர்களை மட்டும் அகற்றிவிட்டு எல்லாத் துறைகளிலும் மிருகங்களே இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஜூடோபியா’ திரைப்படம். இந்த மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் ஏற்கெனவே சில நாடுகளில் வெளியாகிவிட்டது. படமும் தெறி ஹிட். போலீஸ் வேலையில் சேர்கிறது வேகமாக ஓடும் முயல். தொலைந்துபோன ஒருவரைக் கண்டுபிடிக்க, அங்கு இருக்கும் வட்டார அலுவலகத்திற்கு வண்டி எண்ணை எடுத்துக்கொண்டு ஓடுகிறது. ஆனால், அங்கு வேலை செய்பவர்களோ உலகிலேயே மெதுவாக நகரும் ஸ்லாத்துகள். படத்தில் வரும் வசனங்கள்தான் செம. அவற்றில் ஒன்று, ‘நாம யாரா இருந்தாலும், ஆழ் மனசுல நாம எல்லோரும் மிருகங்கள் தான’.

தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி

டச் ஸ்கிரீன் மொபைல் வைத்திருக்கும் பலருக்கு பரிட்சயமான ஒரு கேம் ஆங்கிரி பேர்ட்ஸ். தெரியாது என்பவர்கள் ஃபேஸ்புக்கிலாவது இதை விளையாடி இருப்பார்கள் (அப்படியும் தெரியாது என்பவர்கள் அடுத்த படத்தைப் பார்க்கவும்). பறக்க முடியாத ஆங்கிரி பறவைகள் எல்லாம் ஒரு இடத்தில் வாழ்ந்துவர, புதிதாக அங்கு வருகிறார்கள் பச்சை நிற பன்றிகள். புது விருந்தாளியை விரும்பாத பறவைகள் காண்டாகி முறைப்பதுதான் ஒன்லைன். இத்தனை ஆண்டுகளாக ஆங்கிரி பேர்ட்ஸ் கேம்கள் விளையாடுபவர்கள், வரும் மே மாதம் திரையரங்கில் ஏன் இந்த அழகான பறவைகள் ஆங்கிரியானார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஃபைண்டிங் டோரி

12 ஆண்டுகளுக்குப் பின் மெகாஹிட் அடித்த ‘ஃபைண்டிங் நீமோ’வின் சீக்குவல் ‘ஃபைண்டிங் டோரி’ திரைப்படம் இந்த ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. முதல் பாகமான ‘ஃபைண்டிங் நீமோ’வில் நீமோவின் தந்தை மர்லினும், டோரியும் நீமோவைத் தேடுவார்கள். முதல் பாகத்தில் டோரிக்கு ‘கஜினி’ சூர்யாவைப் போல் ஷாட் டெர்ம் மெமரி லாஸ் இருக்கும். இந்தப் பாகத்திலோ டோரிக்கு தூக்கத்திலேயே நீந்தும் வியாதி. தூக்கத்தில் உளறவும் செய்கிறது நீல மீன் டோரி. டோரி எப்படித் தன் தொலைந்த உறவுகளோடு சேர்கிறது என்ற படம்தான் ‘ஃபைண்டிங் டோரி’. ‘ஃபைண்டிங் நீமோ’ படம் பார்த்தவர்கள் மட்டும் இந்தப் படத்திற்கு வந்தாலே படத்தின் வசூல் அதிகரித்துவிடும்.

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

வீட்டில் செல்லப் பிராணி என்ற பெயரில் எத்தனையோ மிருகங்களைப் பலர் கொடுமைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டில் அந்தப் பிராணிகளை விட்டுச்சென்றதும், அவற்றின் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதுதான் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’ திரைப்படம். புதிதாக வரும் செல்லப்பிராணியால், ஏற்கெனவே இருக்கும் நாய் தன் செல்வாக்கை இழக்கிறது. மற்றொரு பக்கம், செல்லப்பிராணிகளாய் இருந்து தற்போது அநாதையாய் இருக்கும் பிராணிகள் எல்லாம் சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்குகின்றன. அவை எல்லாம் சேர்ந்து தற்போது செல்லப்பிராணிகளாய் இருப்பவர்களையும், அதன் ஓனர்களையும் பழிவாங்கக் களம் இறங்குகின்றன. ஆக்‌ஷன், காமெடி என கலந்துகட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளிவர இருக்கிறது.

இவற்றைத் தவிர மற்ற அனிமேஷன் படங்கள் ஏதேனும் வெளிவந்தால், ஆண்டின் இறுதியில் தனிப் பதிவாக எழுதுகிறேன் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick