ஆஸ்கர் இவருக்கு அல்வா மாதிரி!

ஸ்கரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விருதினைத் தட்டிச்சென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் இம்மானுவேல் லுபெஸ்கி என்ற ஒளிப்பதிவாளர். 2013-ல் ‘கிராவிட்டி’ படம், 2014-ல் ‘பேர்ட்மேன்’, 2015-க்காக ‘தி ரெவனென்ட்’ என இந்த வெற்றியை ருசித்திருக்கிறார் லுபெஸ்கி.

மெக்ஸிகோ நாட்டுக்காரரான லுபெஸ்கி ஆரம்பத்தில் நம் ஊர் ஸ்டைலில் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துதான் பெரிய திரைக்கு வந்தார். 1993-ல் ‘ட்வெண்டி பக்ஸ்’ என்ற மாற்று சினிமாதான் அவருக்கு ஆரம்பப் புள்ளி. அங்கிருந்து இவர் எடுத்தது விஸ்வரூபம். ‘எ லிட்டில் பிரின்சஸ்’, ‘ஸ்லீப்பி ஹாலோ’, ‘தி நியூ வேர்ல்டு’ , ‘சில்ட்ரன் ஆஃப் மென்’, ‘தி ட்ரீ ஆஃப் லைஃப்’, ‘கிராவிட்டி’, ‘பேர்ட்மேன்’ என கிட்டத்தட்ட ரோலர் கோஸ்டர் சவாரி இவர் படங்கள்.

ஐந்து முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. ஆகமொத்தம் அவர் கணக்கில் எட்டு ஆண்டுகளாக அமெரிக்காவை மட்டுமல்ல, உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் லுபெஸ்கி. மிக சிக்கலான கதை சொல்லி டைரக்டரான டெர்ரென்ஸ் மாலிக் என்ற இயக்குநரின் படங்களில் இவர் ஒளிப்பதிவு உலகத்தரம். ‘த ட்ரீ ஆஃப் லைஃப்’ படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். 52-வது வயதில் உலக ஒளிப்பதிவாளர்கள் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையைப் படைத்த லுபெஸ்கி என்ன சொல்கிறார் தெரியுமா?

‘‘இந்த வெற்றிக்குக் காரணம் ‘ரெவனென்ட்’ படத்தின் இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரிட்டு தான். இந்தப் படத்துக்காக ஸ்டுடியோ வேண்டாம் என நாங்கள் ஆரம்பத்திலேயே முடிவெடுத்தோம். 10,000 மைல்கள் மனித சஞ்சாரமற்ற பிரதேசங்களைத் தேடித் தேடி இயற்கை ஒளியில் படமாக்கினோம். அதிகாலை, மாலை மங்கும் நேரம் என நாங்கள் கதை நடக்கும் 1823-க்கே கிட்டத்தட்ட போய் வந்தோம். இந்தப் படத்துக்காக என்னென்ன வகையில் டைரக்டருக்கு உறுதுணையாக இருக்க முடியும் என என்னை வடிவமைத்துக்கொண்டேன். படத்தின் புரொடக்‌ஷன் டிசைனரும், படத்தில் நடித்த லியோனர்டோ உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்களிப்பை 200 சதவிகிதம் தந்திட மெனக்கெட்டார்கள்.

கதை மாந்தர்கள் வாழும் வாழ்க்கைக்குள் பார்வையாளனும் பயணம் செய்ய வேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒளிப்பதிவைத் தர வேண்டியது என் கடமை என்பதை ஒவ்வொரு காட்சி பதிவாக்கத்திலும் மனதில் ஏற்றிக்கொண்டேன். படத்தில் ஒளிக்காக, திமிங்கல எண்ணெய் விளக்குகளையே ஒளிப்பதிவுக்குப் பயன்படுத்தினோம். பார்வையாளனையும் சினிமாவையும் மனசுக்கு நெருக்கமாக்க பனிமலை, காடு, ஆறுகள் என அலைந்து கடுங்குளிரில் படமாக்கினோம். படத்துக்காக ஸ்டோரி போர்டு எதையும் நாங்கள் உருவாக்கவே இல்லை. ஒரு காட்சியில் கரடி, லியோவைக் கடிக்கும் காட்சியைக்கூட ஒரு நிஜக்கரடியின் வீடியோ ரெஃபரென்ஸுக்காக கிடைத்ததை வைத்து கிராஃபிக்ஸில் உருவாக்கினோம். காரணம் பார்வையாளனை எந்த இடத்திலும் சோர்வடைய வைக்கக் கூடாது என்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது. நிறைய சிங்கிள் ஷாட் காட்சிகளை ‘மேஜிக்கல் ஹவர்ஸ்’ என அழைக்கப்படும் மீண்டும் நினைத்தாலும் படமாக்க முடியாத பொழுதுகளில் ஒரே டேக்கில் படமாக்கினோம். எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு கூட்டு முயற்சி. ‘ரெவனென்ட்’ என்னை மிகவும் பக்குவமான மனிதனாக மாற்றி இருக்கிறது’’ என்கிறார்.

சல்யூட் லெஜென்ட்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick