“22 தடவை முயற்சி பண்ணியும் ஸ்டாலினைப் பார்க்க முடியலை!”

டைம்பாஸ் வாசகர் ராமநாதபுரம் தவராம்குமாரின் வழிகாட்டுதலோடு, ‘அகில இந்திய எம்.ஜி.ஆர் நல முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி கண்ணில் பட்டது. விடுவோமா? கட்சியின் நிறுவனர், அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.முத்து முகம்மது என்பவரிடம் பேசினேன். ‘‘சமீபத்துல எனக்கு ‘முகவை பாபா’னு பட்டம் கொடுத்திருக்காங்க!’’ என்றபடி ஆட்டத்தைத் தொடங்கினார் முத்து முகம்மது.

‘‘எம்.ஜி.ஆர் காலத்துல அவர் மேல இருந்த மதிப்பு, மரியாதையினால அ.தி.மு.க-வுல இருந்தேன். அவரோட மறைவுக்குப் பிறகு, அதே அபிமானத்தை ஜெயலலிதாகிட்ட காட்டினேன். ஆனா, கட்சிக்குப் பொதுச்செயலாளரான பிறகு ஜெயலலிதா போக்கு எனக்குப் பிடிக்கலை. ஆனா, எம்.ஜி.ஆர் மேல இருக்கிற பாசத்தை என்ன பண்றது? அதான் தம்பி... அகில இந்திய எம்.ஜி.ஆர் நல முன்னேற்றக் கழகம்னு பேரு வெச்சு, 1992-ல கட்சியை ஆரம்பிச்சுட்டேன். மக்களுக்கு சேவை செய்யணும், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வரணும் இதுதான் எங்க நோக்கமா இருந்தது. கட்சி ஆரம்பிச்சப்போ, ராமநாதபுரத்துல போட்டியிட்டேன். அதுக்குப் பிறகு தி.மு.க, காங்கிரஸுக்கு மாறி, மாறி ஆதரவு(?!) கொடுத்துக்கிட்டு இருக்கோமே தவிர, தேர்தல்ல போட்டியிடலை. ஆனா, நம்ம கட்சிக்கு ஒரு பாரம்பரியம் இருக்கு தம்பி!’’ என்று ஆரம்பித்தார் பாபா.

‘‘கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை... 17,000 பேர் உறுப்பினரா இருக்காங்க. டெல்லியிலகூட நிர்வாகிகளை நியமிச்சிருக்கோம். இதோ, போனவாரம் வரை ‘இந்தத் தேர்தல்ல யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்’னு யோசிக்கிறதுக்காக, 20 மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் போயிட்டு வந்தேன். ஏன்னா, அங்கே மக்களோட வாழ்க்கை எப்படி இருக்கு, அரசியல் நிர்வாகம் எப்படி இருக்கு?னு தெரிஞ்சுக்கிட்டாதானே, தமிழ்நாட்டு மக்களோட நிலைமையை கம்பேர் பண்ணிப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்ததுல, தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைனு எனக்குத் தோணுது. ‘கிளீன் இந்தியா’னு மோடி சொல்றாரு. ஆனா, தலைநகர் டெல்லியிலேயே சுகாதாரம் மோசமா இருக்கு. அதையெல்லாம் போட்டோ எடுத்து வெச்சிருக்கேன். பிரதமரோட வாட்ஸ்-அப் நம்பரை வாங்கி, அவருக்கு அனுப்பி வைக்கணும்!’’ என்றார் சீரியஸாக.

‘‘டெல்லியில நிர்வாகிகள் இருந்தா போதுமா? இத்தனை வருடமா 17,000 பேரை மட்டுமே சேர்த்திருக்கீங்க. இப்படி இருந்தா கட்சி எப்படி வளரும்?”

‘‘வளராதுதான்! அதுக்கு என்ன பண்றது? எங்க கட்சிக்காரங்க விளம்பரத்தை விரும்ப மாட்டாங்க. தோரணம், ஃப்ளெக்ஸ்னு பணத்தை வீணாக்க மாட்டாங்க. கூலி கொடுத்து கூட்டத்தைக் கூட்டவும் தெரியாது! அட, ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும்ங்கிற நிலைமை இருக்கிறதனாலதான், தேர்தல்லேயே நிற்காம இருக்கோம். முன்னாடி சென்னையில கட்சி ஆபீஸ் இருந்துச்சு தம்பி. வாடகை கட்டுப்படி ஆகலைனு ராமநாதபுரத்துக்கே மாத்திட்டேன். ஆனா, என் தொண்டர்கள் உண்மையானவங்க. இதோ, டெல்லியில இருந்து டிரெயின்ல வந்திறங்கும்போது 400, 500 பேர் வரவேற்க வந்துட்டாங்க. இப்போகூட, ‘அடுத்து என்ன பண்ணப்போறோம் தலைவரே?’னு 500 பேர் விசாரிச்சுட்டுப் போறாங்க. இவங்களுக்காகத்தான் கட்சியே நடத்துறோம். இந்த மாதிரி தொண்டர்கள் இருக்கிறவரை, எங்க கட்சிக்கு உயிர் இருக்கும்!’’ எனப் பொளந்து கட்டுகிறார்.

‘‘கட்சியில நான் எடுக்கிற முடிவுதான் எல்லாமே. காங்கிரஸ் கட்சியோட தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் என்னோட நண்பர். ‘உங்க ஆதரவை எங்களுக்குக் கொடுங்கண்ணே’னு சொன்னார். ஆனா, அவங்களே இப்போ தி.மு.க-வோட சேர்ந்துட்டதனால, தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு முடிவு பண்ணி, ஸ்டாலினைப் பார்க்கப் போனேன். ஒண்ணுல்ல, ரெண்டுல்ல... 22 தடவை ஸ்டாலினைப் பார்க்க முயற்சி செஞ்சேன் தம்பி. சந்திக்கவே முடியலை. அந்தக் கட்சி பாமரர்களை மதிக்காது, பெரிய பெரிய ஆளுங்களைத்தான் மதிக்கும்னு நினைச்சு விட்டுட்டேன். மற்ற மாநிலங்களைச் சுற்றிப் பார்த்தப்போ, தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைனு சொன்னேன்ல? அதனால, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்’’ என்றவரிடம், ‘‘இந்த விஷயம் அ.தி.மு.க-வுக்குத் தெரியுமா?” என்றேன்.

‘‘ஆதரவு கொடுக்கிறேன்னு லெட்டர் எழுதிக் கொண்டு போனேன். ஜெயலலிதாவின் பி.ஏ மூலமா ஃபேக்ஸ் அனுப்பச் சொல்லியிருக்காங்க. ஏன் ஆதரவு கொடுக்கிறேன்னா, அ.தி.மு.க ஆட்சியில மக்கள் பிரச்னை இல்லாம வாழுறாங்கனு எனக்குத் தோணுது. அதே சமயம் அவங்க ஸ்டிக்கர் ஒட்டுறதை என்னால ஏத்துக்க முடியலை! மத்தபடி, அ.தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் பண்றதுக்கு எங்ககிட்ட எக்கச்சக்கமான பேச்சாளர்கள் இருக்காங்க. அ.தி.மு.க-வுல சீட் கேட்க மாட்டோம். ஆனா, எங்க இராமநாதபுரம் மாவட்டத்துல கருவேல மரங்களை ஒழிக்கணும், சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தணும்னு கோரிக்கை வைப்போம்!’’ என்று முடித்தார், முத்து முகம்மது.

- கே.ஜி.மணிகண்டன், படங்கள்: உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick