கவுன்சிலர் பதவிகூட வேண்டாம்!

சினிமா, டி.வி பிரபலங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளின் பக்கம் சென்றுகொண்டிருக்க திடீரென கருணாநிதியைச் சந்தித்து தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கும் இமான் அண்ணாச்சியிடம் பேசினேன்.

‘‘திடீரென தி.மு.க-வில் சேர்ந்தது ஏன்?’’

‘‘சின்னவயசுல இருந்தே கலைஞரையும், தி.மு.க-வையும் ரொம்பப் பிடிக்கும். என் குடும்பத்தில் இருப்பவங்க எல்லோரும் தி.மு.கழகத்தின் உறுப்பினர்கள். நான் மட்டும்தான் இப்போ அடிப்படை உறுப்பினரா சேர்ந்து இருக்கிறேன். கலைஞரை நேர்ல சந்திக்கணும் என்பது நீண்டநாள் கனவு. டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் அப்பா தயாரிப்பாளர் அழகப்பன் சாரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்தான் என்னை கலைஞரிடம் அழைச்சுட்டுப் போனார்.’’

‘‘தேர்தல் பிரசாரத்துக்கு செல்வீர்களா, என்ன பேசுவீர்கள்?’’

‘‘இப்போது ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், பிரபுசாலமன் இயக்கும் படங்களின் படப்பிடிப்பில் கலந்துட்டு இருக்கேன். தேர்தல் சமயத்துல தி.மு.க தலைமை என்னைப் பிரசாரம் செய்யச் சொல்லிக் கூப்பிட்டா, கண்டிப்பாகப் போவேன். கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச்சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பேன். மறுபடியும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்னென்ன சாதனை செய்யும் என்பதையும் எடுத்துச்  சொல்வேன். தனிப்பட்ட முறையில் யாரையும் கடுமையாகத் திட்ட மாட்டேன். ஆனால் என் பேச்சில் நிச்சயமாக நக்கல், நையாண்டி இருக்கும். என்னோட பிரசாரம் யாரும் முகம் சுளிக்காத வண்ணம் இருக்கும்.’’

‘‘நீங்கள்  நடத்தும் ‘சொல்லுங்கண்ணே... சொல்லுங்க...’, ‘குட்டிச்சுட்டீஸ்’ நிகழ்ச்சிகள் பிரபலம். உங்கள் அரசியல் ஈடுபாடு, நிகழ்ச்சிகளைப் பாதிக்குமா?’’ 

‘‘நானும் அதுபற்றிதான் யோசித்துக்கொண்டு இருக்கேன்.  நான் தி.மு.க-வுல சேர்ந்துட்டேன்னு கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு ஏகப்பட்ட போன்கள் வந்தபடியே இருக்கின்றன.  இதுவரை எனக்குத் தெரியாத, அறிமுகம் இல்லாத புதுப்புது நம்பர்களில் இருந்து விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள். எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி  ‘என்ன அண்ணாச்சி இப்படி பண்ணிட்டீங்களே...’  னுதான் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாக் கட்சியிலும் எனது ரசிகர்கள் இருக்கிறார்கள். சரி சேர்ந்தாச்சு. இனிமே என்ன பண்றது?’’

‘‘தி.மு.க-வில் எம்.எல்.ஏ சீட் கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா?’’

‘‘நான் பதவிக்கு ஆசைப்பட்டு தி.மு.க-வில் சேரவில்லை. எனக்கு எம்.எல்.ஏ சீட் வேண்டாம், ஏன் கவுன்சிலர் சீட் கொடுத்தால்கூட வேண்டாம். தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும்போது சேரவில்லை. இதிலிருந்தே நான் ஆதாயத்துக்காக சேரவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.’’

‘‘தி.மு.க மீது அப்படி என்ன ஓர் ஈர்ப்பு?’’

‘‘ஒரு காலத்துல எல்லோரும் பெரிய நடிகர்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுவாங்க. அப்போ எனக்கு ஜெய்சங்கரை ரொம்பப் பிடிக்கும். அதுபோல ரஜினியை சிலருக்குப் பிடிக்கும், கமலை சில பேருக்குப் பிடிக்கும். அது மாதிரி காலகட்டத்துல எனக்கு விஜயகாந்தை ரொம்பப் பிடிக்கும். அதுபோல  அரசியல் சூழ்நிலையில் எம்.ஜி.ஆரா, கலைஞரானு போட்டி வந்தப்போ, எனக்கு கலைஞரைப் பிடிக்கும்.  இதுக்கெல்லாம் என்ன காரணம்னு பூதக்கண்ணாடி வைத்து யோசிச்சு சொல்ல முடியாது.’’

அப்படி சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

- எம்.குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick