பேனரோ பேனர்! | Controversy Banner Bullet Parimalam - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2016)

பேனரோ பேனர்!

மிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் ஸ்டிக்கர் ஒட்டி ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து பட்டையைக் கிளப்புகிறார்கள். அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காஞ்சிபுரம் ‘புல்லட்’ பரிமளம் வைக்கும் பேனர்கள் தமிழக அளவில் பேசப்படும். ‘அம்மாவிற்காக பஸ்ஸை எரித்து சிறைசென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன்…’ என்று டெரராக ஃப்ளெக்ஸ் பேனர் வைத்து காஞ்சிபுரத்தைக் கதறவிட்டிருக்கிறார் ‘புல்லட்’ பரிமளம். விஷயம் வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவ, மேலிடத்தில் இருந்து ஃப்ளெக்ஸைக் கழட்டச் சொல்லிவிட்டார்கள். ‘இவர் இப்பத்தான் இப்படியா? எப்பவுமே இப்படித்தானா?’ என்ற சந்தேகத்தைப் பரிமளத்திடமே கேட்டேன்.

‘‘பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புநாள் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த தமிழகமே பதட்டத்தில் இருந்தது. அந்த நேரத்தில், ‘அம்மா வழக்கிலிருந்து விடுதலை. அம்மாவை நிரபராதி என்று நீதியரசர் தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை வைத்து காஞ்சிபுரத்தில் பரபரப்பைக் கிளப்பியது யாரு? நான்தான்! ஆனா, நான் சொல்லலை தம்பி. என்னோட கனவில் வந்த ஆதிகேசவப் பெருமாள் சொன்னது. கனவுல பெருமாள் சொன்னதை பேனராக ரெடி பண்ணி, ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல எல்லோருக்கும் தெரியற மாதிரி வெச்சேன். காலையில அஞ்சு மணிக்கே கட்-அவுட்டை வெச்சதால, விடிஞ்சதுமே பரபரப்பு பத்திக்கிச்சு. போலீஸ்காரங்க 10 மணிக்கு வந்து பேனரை எடுத்துட்டாங்க! ஆனா, தீர்ப்பு விஷயத்துல நான் சொன்னதுதானே நடந்துச்சு!’’ என்றவர், தொடர்ந்தார்.

‘‘அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வர்றதுக்கு முன்னாடியே காஞ்சிபுரம் அ.தி.மு.க வேட்பாளர் ‘1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்’னு ஃப்ளெக்ஸ் வெச்சேன். இதைப் பெருமாள் சொல்லலை... வெற்றி இப்படித்தான் இருக்கும்னு எனக்கு ஒரு நம்பிக்கை. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்துச்சு? என்னோட கணக்குல ஐந்தாயிரம் வாக்குகள்தான் வித்தியாசம். இந்த பேனர் வெச்ச பிறகு எல்லோரும் என்னைக் கட்சியில இருந்து தூக்கிடுவாங்கனு நினைச்சாங்க. ஆனா, நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில ‘மழைக்காக நடத்தப்பட்ட யாகத்திற்கு குடையோடு வந்தாராம்’னு பாராட்டுனாங்க!’’ என்று நெகிழ்ந்தவர், ‘அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறை சென்ற தொண்டன்’ கதைக்கு மட்டும் வரவேயில்லை.

‘‘நான் உண்மையைச் சொல்லியிருக்கேன், அவ்வளவுதான்! ஆனா, எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி கொடுத்து, விஷயத்தைப் பெருசாக்கக் கூடாதுனு தலைமை உத்தரவு. அதனால, ‘அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த தொண்டன்’ ஃப்ளெக்ஸைப் பத்தி எதுவும் பேச முடியாதுங்க. சங்கராச்சாரியார் கைது ஆனப்போ, அம்மாவுக்கு முன்னாடி சங்கராச்சாரியார் கையில் விலங்கோடு நிற்கிற மாதிரி நான் அடிச்ச ஃப்ளெக்ஸைப் பத்திச் சொல்லவா?’’ என ஆர்வமானார்.

நாங்க ஜூட்!

- பா.ஜெயவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close