நான் எம்.ஜி.ஆர் பேரன்!

லைஞரின் பேரன்கள் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வந்துகொண்டிருக்க, ‘எம்.ஜி.ஆர் பேரன்’ என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாகிறார் ராமச்சந்திரன்.

‘‘எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவோட தம்பி பொண்ணுதான், எங்க அம்மா சுதா. சின்ன வயசுல இருந்தே எங்க அம்மாவை வளர்த்தது எம்.ஜி.ஆர் தாத்தாதான்! அவர் சாகுறதுக்கு ஒரு வருடம் முன்னாடி நான் பொறந்தேன். என்னைக் கையில தூக்கி வெச்சுக்கிட்டு, எனக்குப் பேரு வெச்சதே எம்.ஜி.ஆர்தான். பொதுவா, அவர்கிட்ட பெயர் வைக்கச் சொல்லி கொடுக்கிற குழந்தைகளுக்கு, புலவர்களோட பெயரைத்தான் வைப்பாராம். ஆனா, எங்கம்மா சுதா ‘சேச்சா... உங்களை மாதிரி இவனும் பெரிய உயரத்தைத் தொடணும்’னு கேட்டுக்கிட்டதனால, ‘ராமச்சந்திரன்’னு அவரோட பெயரையே எனக்கு வெச்சிட்டார். தவிர, நான் பொறந்தப்போ அவர் கைப்பட எனக்கு வாழ்த்துக் கடிதமும் எழுதியிருக்கார். எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். இதெல்லாம் எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் தெரியுமா?’’ என்று தொடங்குகிறார் ராமச்சந்திரன்.

‘‘பத்தாவது படிச்சிக்கிட்டு இருக்கும்போதே ‘வெந்து தணிந்த காடுகள்’, ‘மால்குடி டேஸ்’னு ரெண்டு சீரியல்ல நடிச்சிருக்கேன். அப்பவே நடிப்புலதான் என் ஆர்வமே! ஆனா, படிச்சே ஆகணும்னு அம்மா கட்டாயப்படுத்தினதால, இன்ஜினீயரிங் முடிச்சேன். சில விளம்பரப்படங்கள், குறும்படங்கள்ல தலை காட்டினேன். சினிமா வாய்ப்புகள் பெருசா கிடைக்காத காரணத்தினால, மேல்படிப்புக்கு ஆஸ்திரேலியா போயிட்டேன். மனசு முழுக்க நடிப்பு, சினிமானு வெச்சுக்கிட்டு வேலை பார்க்க முடியுமா? திரும்ப சென்னைக்கு வந்து பல கம்பெனிகள் ஏறி இறங்கினேன். அப்போவெல்லாம் கிடைக்காத வாய்ப்பு, எங்க தாத்தா எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்னைக்குக் கிடைச்சது!’’ என்று ட்விஸ்ட் கொடுத்தவர், தொடர்ந்தார்.

‘‘எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்னைக்கு வீட்டுக்குப் பக்கத்துல அன்னதானம் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்போ, என்னைப் பார்த்த ‘கபாலி தோட்டம்’ இயக்குநர் பாஸ்கர் சாருக்கு, ‘இந்தப் பையன் நம்ம கதைக்கு செட் ஆவான்’னு தோணவே, நேரா வீட்டுக்கு வந்துட்டார். நான் எம்.ஜி.ஆரோட பேரன்ங்கிற விஷயம் அவருக்கு அப்புறம்தான் தெரியும். கதை சொன்னார். ரொம்ப நல்லா இருந்தது. மயிலாப்பூர் பக்கத்துல இருக்கிற கபாலி தோட்டம் ஏரியாதான் கதைக்களம். ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கிற நாலு பசங்களோட வாழ்க்கையில, அவங்களுக்குச் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களால பாதிக்கப்படுறாங்க. அதுல இருந்து அவங்க மீண்டு வர்றதுதான் கதை! இதுல, நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்கேன். ஏன்னா, இந்தக் கதைக்கு ரொம்ப வெயிட்டான ஸ்கோப் இருந்தது வில்லன் கேரக்டர்தான்!’’ என்றவரிடம்...

‘‘எம்.ஜி.ஆர் ஹீரோவா ஜெயிச்சவர். நீங்க வில்லனா ஜெயிக்கணும்னு ஆசைப்படுறீங்களே?”

“வில்லனோ, ஹீரோவோ தனுஷ், விஜய்சேதுபதி மாதிரி நல்ல நடிகர்னு பெயர் வாங்கினா போதும். ஏன்னா, ஆரம்பத்துல இருந்தே இவங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். ரெண்டு பேருமே எங்க அம்மா நடத்திக்கிட்டு இருக்கிற ஸ்கூல்ல படிச்சவங்க. தனுஷ் அண்ணனுக்கு எங்க அம்மாதான் பிரின்ஸ்பால். தவிர, ‘சுந்தரபாண்டியன்’ செளந்தர ராஜாவும் நல்ல நண்பன். இந்த மூணு பேரும்தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில முக்கியமான புள்ளிங்கனு சொல்லலாம். விஜய்சேதுபதி அவர் நடிக்கிற படங்களோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி, அவர் நடிக்கிறதைப் பார்த்து பயிற்சி எடுத்துக்கச் சொல்வார். செளந்தர ராஜா குண்டா இருக்கிற என் உடம்பு இளைக்கணும்னு, நான் வாங்கின சிக்கன் பீஸைத் தட்டிப் பறிப்பான். இப்படித்தான் நான் சினிமாவுக்குள்ள போகணும்னு ஆசைப்பட்டேன். ஏன்னா, எம்.ஜி.ஆர் பேரன்னு கெத்து காட்டி சான்ஸ் கேட்க எனக்குப் பிடிக்கலை. இந்தப் படத்துக்கே ‘எம்.ஜி.ஆர் பேரன்’ங்கிற அடையாளம் வேணாம்னுதான் சொன்னேன். சில பத்திரிகை நண்பர்கள் மூலமா பரவிடுச்சு!’’

‘‘மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்டது உங்க வீடுதான். அதை, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்ககூட கண்டுக்கலைனு சொல்றாங்க?”

‘‘எம்.ஜி.ஆர் இருந்தது, இறந்தது எல்லாமே நாங்க இருக்கிற வீட்டுலதான். மழை வெள்ளத்துல வீடு பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனா, வெள்ளம் வடிஞ்சதும் எல்லாத்தையும் சீரமைச்சது ஜெயலலிதா அம்மாதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும், கட்சிக்காரங்க எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க, பேசுவாங்க. என் கல்யாணத்தை நடத்தி வெச்சதே ஜெயலலிதா அம்மாதான்! நாங்க அவங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா, உடனே அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். எம்.ஜி.ஆர் வீட்டை வந்து பாருங்க... முன்ன இருந்ததை விட ஜெகஜோதியா ஜொலிக்கும்!’’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick