இதுதான் பாஸ் இடைவெளி!

‘இலையை வெட்டி ஆட்டுக்குப் போடுவாங்க. அப்புறமா, ஆட்டை வெட்டி இலையில போடுவாங்க!’ இது நெட்டிசன்களின் ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ அட்ராசிட்டிகளில் ஒன்று. இதே மாதிரி, ‘ஜெனரேஷன் கேப்’ என்ற பெயரிலும் ஏராளமான பழமொழிகளையும் பன்ச் மொழிகளையும் தடதடவென தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதென்ன ‘ஜெனரேஷன் கேப்?’

ஆர்மோனியப் பெட்டிக்குப் பக்கத்துல உட்கார்ந்து கச்சேரி கேட்டவங்களுக்கும், சொந்தமாவே ஆண்ட்ராய்டு போன்ல ராப், பாப் மியூஸிக்ல பாடிப் பார்த்துக்கிறவங்களுக்கும் உள்ள இடைவெளிதான் ஜெனரேஷன் கேப்.

பேன்ட்டை நெஞ்சுக்கு ஏத்தி நடந்தவங்களுக்கும் அதே பேன்ட்டை இடுப்புக்குக் கீழே இறக்கிவிட்டு நடக்கிறவங்களுக்கும் உள்ள இடைவெளி இருக்கே... அதேதான்!

அப்பா 50 ரூபாயை மிச்சப்படுத்த 30 நிமிடம் நடந்ததுக்கும் நாம 30 நிமிடத்தை மிச்சப்படுத்த 50 ரூபாய் ஆட்டோவுக்கு செலவு பண்றதுக்கும் பெயர்தான் ஜெனரேஷன் கேப்.

காலேஜை கட் அடிக்கிறதுக்காக பிரின்சிபால் கண்ணுல மாட்டாம சுவற்றைத் தாவுனதுக்கும், இப்போ போறபோக்குல ‘போர் அடிக்குது போய்யா’னு கிளம்பிப் போறதுக்கும் இருக்கிற இடைவெளிதான் ஜெனரேஷன் கேப்.

பொண்ணுங்களுக்கு மீசை முளைக்காம இருக்கிற மஞ்சள் பூசுனதும் இப்போ முளைக்கிற மீசையைத் தடுத்து நிறுத்துறதுக்கு கிரீம் பூசிக்கிறதுக்கும் உள்ள இடைவெளி இருக்கே... இதுதான் ஜெனரேஷன் கேப்.

இந்தித் திணிப்புக்காகப் போராடினதுக்கும், மொபைல் ரீசார்ஜ் கடையில பத்து நம்பரைத் தமிழ்ல சொல்லத் திணறிக்கிட்டு இருக்கிறதுக்கும் உள்ள இடைவெளிதான் அது.

‘காப்பியில சீனி கம்மியா போடவா, அதிகமா போடவா?’னு பேசிக்கிட்டதுக்கும் ‘காப்பியில சக்கரை போடவா, வேணாமா?’னு பேசிக்கிறதுக்கும் உள்ள இடைவெளி இருக்கே, அதுதான் ஜெனரேஷன் கேப்.

எப்பவோ ரிலீஸான படத்தை டெண்டு கொட்டாயில உட்கார்ந்து பார்க்கிறதுக்கும் நாளைக்கு ரிலீஸாகப் போற படத்தை நைட்டே உட்கார்ந்து டவுன்லோடு பண்றதுக்குமான கேப்தான், ஜெனரேஷன் கேப்.

‘வீட்டுலேயே இரு, வந்து பேசிக்கிறேன்’னு சொன்னதுக்கும், ஆன்லைன்ல போய் ‘ஹாய் மச்சி’னு சொல்றதுக்கும் உள்ள இடைவெளி.

அவ்வளவு ஏன்? பொழுதுபோக்குக்காக எங்கெங்கோ போனதும் என்னென்னமோ செஞ்சதுக்கும், இப்போ உட்கார்ந்த இடத்திலேயே ‘டைம்பாஸ்’ படிக்கிறதுக்கும் உள்ள இடைவெளி இருக்கே... அதுகூட ஜெனரேஷன் கேப்தான் பாஸ்!

-கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick