அசைன்மென்ட்ஸ் அலெர்ட்!

ல்பெர்ட் ஐன்ஸ்டீன், டார்வின் எல்லாம் இந்தக் காலத்துல குழந்தைகளா இருந்திருந்தா, அசைன்மென்ட் பண்ணியே லூசாகி இருப்பாங்க. குழந்தைகளுக்கு தர்ற அசைன்மென்ட் எல்லாமே அவங்க அப்பா, அம்மாதான் செய்வாங்க. குழந்தை ஜாலியா கார்ட்டூன் பார்க்க, அதை ஸ்கூல்ல சேர்த்த பாவத்துக்கு நாம உட்காந்து ராத்திரி பூரா கண் விழிச்சி செய்யும் பள்ளிகள் தரும் சில வினோத அசைன்மென்ட்ஸ்.

கார் மாடல் ஒன்னு செய்யணும். ஆனா, அது பேட்டரி, எரிபொருள்னு எதுவும் இல்லாம ஓடணும். 3-ம் வகுப்பு பிள்ளைக்கு இப்படி ஒரு அசைன்மென்ட். அந்தக் குழந்தையோட அப்பா ரொம்ப நேரம் யோசிச்சுட்டு தான் வாங்கின மெக்கானிக்கல் இன்ஜினீயர் பட்டத்தை எரித்ததுதான் மிச்சம்!

பூமி, சூரியன், நிலா எல்லாம் இருக்கிற மாதிரி ஒரு மாடல் செய்யணும். இரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு நிலா எது, பூமி எதுன்னு சொல்லிப் புரியவைக்கவே ரெண்டு நாள் ஆகும். அதுலேயும் இதையெல்லாம் வெச்சா பத்தாதாம். சூரியனை பூமி சுத்துற மாதிரி பொம்மைகள் தானாவே சுத்தணுமாம்!

‘பட்டாம்பூச்சி வரைந்து வருக’னு ஒரு நாள் அசைன்மென்ட் கொடுத்து இருந்தாங்க. ரொம்ப சுலபமா இருக்கே, நம்ம நாதஸ் நெசமாலுமே திருந்திட்டானோனு ஷாக் ஆகிட்டேன். அப்புறம்தான் அடுத்த வரியைப் படித்தேன். கையை வைத்து அச்சுப் பிரதி எடுத்து பட்டாம்பூச்சி வரையணுமாம். நம்ம கையை வைக்கவே ரெண்டு பேப்பர் தேவைப்படும். நம்ம குழந்தை கை வைக்கிற அழகுல மயில், ஆந்தை, அவ்வளவு ஏன் டைனோசர்கூட வரும். ஆனா பட்டாம்பூச்சி மட்டும்; ம்ஹும்!

மளிகைக் கடையில வாங்கின எல்லாப் பொருள்லேயும் ஏதாவதொரு அசைன்மென்ட் கொடுப்பாங்க. மிளகை ஒரு பேப்பர்ல ஒட்டி, டைட்டானிக் கப்பல் செஞ்சு எடுத்துட்டு வரணுமாம். எப்படியும் ஒரு கிலோவாவது வரும். வகுப்புல இருக்கிற 40 பேர் கொண்டு வந்தா, எப்படியும் சேதாரம் போக 35 கிலோ மீதம் இருக்கும். நாமளும் மறுபடியும் அந்த பேப்பரைப் போய் கேட்க முடியாது. விற்கிற விலைவாசிக்கு இவங்களே மளிகைக் கடையில வித்துடுவாங்களோ?

இது பத்தாதுனு ரெண்டு மாசம் லீவு விட்டுட்டு, ஆறு மாசத்துக்கு ஹோம்வொர்க் கொடுப்பாங்க பாருங்க. நம்ம ஊர்ல இருக்கிறதெல்லாம் ஸ்கூலா இல்லை நாமக்கல் கோழிப்பண்ணையானு டவுட்டு கண்டிப்பா வருது!

இதெல்லாம் பண்ணினா குழந்தைக்கு அறிவு வளருதோ இல்லையோ, நமக்கு நல்லா வளருது. அடுத்த குழந்தை பிறக்கிறப்போ, இந்த ஸ்கூல்ல கண்டிப்பா சேர்க்கக் கூடாதுனு யோசிக்கிற அளவுக்கு அறிவு வளர்ந்துடுது!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick