அம்மா இலக்கியம்!

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

மிழக முதல்வர் துதி பாடி ஏற்கெனவே, அம்மா அந்தாதி, அற்புதத் தலைவி அம்மா, அம்மா சூடும் பொன்மாலைகள் ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன (நம்புங்க பாஸ்!). இனி பிற இலக்கிய நூல்களும் அம்மாவின் ஆணைப்படி வெளியானால் எப்படி இருக்கும்?

அம்மா குறவஞ்சி: அம்மா குறவஞ்சி, அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழகத்தின் முதல்வரான அம்மாவின் சிறப்பைப் புகழ்ந்தும், அவர் வாழும் ஊரான கொடநாட்டின் சிறப்பைப் புகழ்ந்தும் பாடப்பட்ட நூல்.

அம்மா 150: வரவிருக்கும் தேர்தலில் அம்மா கட்சியினர் எந்தெந்த 150 இடங்களில் வெல்வார்கள் என 2000 வருடங்களுக்கு முன்பே சூலாடி சித்தர் எழுதிய நூல் இது.

பரப்பன அக்ரஹாரபரணி
: கர்நாடகாவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த நாட்கள், அங்கு இருந்து வெளியே வந்த நிகழ்வுகள், அமைச்சர்கள் குனிந்தபடியே சென்னையில் இருந்து சிறைவாசல் வரை சென்றது, தீச்சட்டி தூக்கியது, மண்சோறு சாப்பிட்டது என அனைத்து தகவல்களையும் கொண்ட ஒரு நூல்.

இரட்டை இலை மாலை: இப்போது இருப்பவர்களில் உண்மையான இரட்டை இலை யார், குதிரை றெக்கை எப்படி இரட்டை இலை ஆனது? என்பது போன்ற பூடகமான செய்திகளைக்கொண்ட சிற்றிலக்கிய நூல் இரட்டை இலை மாலை.

பெருமகிழ்ச்சிமாலை: சிறையில் இருந்து மீண்டும் வெளிவந்தபோது, மக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து சாலைகளில் நின்று இருகரம் கூப்பி மகிழ்ந்துகொண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்துக்கூறும் நூல் பெருமகிழ்ச்சிமாலை.

அம்மா பாதம்: தரையோடு தரையாக ஊர்ந்து செல்லும் ரத்தத்தின் ரத்தங்கள் பற்றிய முழுத் தொகுப்பு இந்நூல். அதேபோல், ஃப்ளெக்ஸ், போஸ்டர், வீடியோ கான்ஃபரன்ஸ் என பொருளுக்கு ஏற்றார் போல் பாதம் பணிந்து வணங்குவது எப்படி? என்ற விதிகளைக் கொண்ட நூல்.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick