வருண் என்றால் வைரல்!

ருண் ப்ருதி!  வித்தியாசமான வைரலில் வெற்றிநடை போடும் வீடியோக்கள் இவருடையவை.

பாலிவுட் நடிகரான இவருக்கு நடிப்போடு சேர்த்து டான்ஸ், டைரக்‌ஷன், எடிட்டிங்கும் அத்துபடி. இத்தனை திறமைகள் வைத்திருந்தும் அவ்வளவாகப் பிரபலமாகாத இவரை சோஷியல் மீடியாதான் வெளியே கொண்டு வந்தது. ரொம்ப சீரியஸான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கே போய் வீடியோ எடுத்து அதை வைத்து விழிப்பு உணர்வு உண்டாக்குவதுதான் வருண் ஸ்டைல். வாரத்துக்கு ஒண்ணு என்று வெளியாகும் வருணின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல்.

கண் தெரியாத ஒருவர் மார்க்கெட் ஃப்ளாட்பார்மில் கடை போட்டு துணிகளை விற்றுக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும் வருண், தான் ஒரு ஹீரோங்கிற பந்தா இல்லாமல் அந்த ஃப்ளாட்பார்மில் அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து சகஜமாகப் பேச்சுக்கொடுத்து ஃப்ரெண்ட் பிடிக்கிறார். அந்தக் கடையில் இருக்கும் மொத்தத் துணிகளையும் விலை கொடுத்து வாங்கி திடீரென அவருக்கு அதிர்ச்சி தருகிறார். இதனால் கண்கலங்கிய கடைக்காரர் நன்றி சொல்ல வருண் கரைந்தே போய் விடுகிறார். சந்தோசமாகத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு காலி பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்புகிறார் தாத்தா.

திடீரென ஒருநாள் கவர்ன்மென்ட் ஸ்கூலில் நுழையும் வருண் மொத்தமாக 200 பசங்களையும் வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜாலியாக ஊரைச் சுற்றிக்காட்டுகிறார். வெளியுலகமே தெரியாத அந்தப் பசங்களை ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிப்போய் அவர்கள் இதுவரை பார்த்திராத உணவுகளை வாங்கிக்கொடுத்து சந்தோசப்படுத்துகிறார். பிரியும்போது ஒவ்வொரு குழந்தையும் தேங்க்யூ பையான்னு சொல்ல வாய்ஸ் ஓவரில் ‘நாம் ஒவ்வொருவரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது நம்முடைய கடமை’ என மெஸேஜோடு அந்த வீடியோவை முடிக்கிறார்.

இவர் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் களத்தில் இறங்கியிருக்கிறார். பஸ் ஸ்டாண்ட் மாதிரி கூட்டமான இடங்களில் மந்திரவாதி கெட்டப் போட்டு என்ட்ரி கொடுக்கிறார். தன்னுடைய நண்பரையே செட்டப் செய்து அவரை செத்துப்போக வைத்து சுற்றி நிற்பவர்களை சிதறி ஓட வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் செத்தவருக்கு திரும்ப உயிர் கொடுக்கிறார். இப்படியே செத்து செத்து விளையாடிவிட்டு திடீரென மந்திரவாதி கெட்டப்பைக் கலைக்க, அட இது நம்ம நடிகர் வருண்பா என கூட்டம் அவரை மொய்க்கிறது. ‘மந்திரமும் கிடையாது ஒண்ணும் கிடையாது. அதை உங்களுக்கு புரியவைக்கத்தான் இந்தச் சின்ன கேம்’ என்று காரில் ஏறி ஜூட் விடுகிறார் வருண்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick