பயணம்தான் என் மதம்!

ருவரின் மரணம் நமக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? உலகத்தையே சுற்றிச் சுழலச் சொல்லும் என்கிறார், டெல்லியைச் சேர்ந்த நகுல் சர்மா.

தனது தந்தை 2010-ல் மரணமடைந்தபோது, நகுலின் வயது 24. அப்பாவின் மரணம் தந்த வலியில் இருந்து மீள்வதற்காக, புகைப்படப் பயணத்திற்குக் கிளம்பிய நகுலுக்கு அதுவே பழக்கமாகிவிட்டதாம். பயணம் தந்த சந்தோஷமும், புகைப்படங்கள் மீதான காதலும் அப்பாவின் மரணத்தை மறக்கடித்து, முற்றிலும் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லவே, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொள்கையோடு, முழுநேர உலகம் சுற்றும் வாலிபன் ஆகிவிட்டார் நகுல். ‘தன்னுடைய புகைப்படங்கள், பயணத்தின் அவசியத்தையும், பயணிக்க வேண்டிய ஆர்வத்தையும் மற்றவர்களுக்கு உருவாக்க வேண்டும்!’ என்பது நகுலின் நோக்கம். பறவைகள், இயற்கை, பல்வேறு மனிதர்கள் என நகுலின் கேமரா க்ளிக்கிய அனைத்தும் ஆஸம் ரகம்! மலையேற்றம், கரடுமுரடான மலைப்பாதைகளில் பைக் ரைடிங் செய்வதும் நகுலின் ஹாபி.

ஏராளமான ‘தனி நபர் புகைப்படப் போட்டி’களில் பரிசுகள், விருதுகளைப் பெற்று பயணம், புகைப்படம் என இயங்கிக்கொண்டிருந்த நகுலுக்கு ‘தனி நபராக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணித்து, அந்த அனுபவங்களைப் புகைப்படங்களாக்க வேண்டும்’ என்பது லேட்டஸ்ட் ஆசை. அதுவும், இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி, கடந்த வாரம் வரை... 38 நாட்களில் வியட்நாம், கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் 34,000 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயணித்து, ஏறத்தாழ 5,000 புகைப்படங்களைக் ‘க்ளிக்’கியிருக்கிறார். தனது பயணத்தை, புகைப்படங்களை உடனுக்குடன் தன்னுடைய வலைதளத்தில், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார் நகுல். ‘என் பயணங்களும், புகைப்படங்களும் ஒவ்வொரு மனிதனையும் பயணத்தில் ஈர்க்க வேண்டும்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தும் நகுல் சர்மா, ‘பயணம்தான் என் மதம். புகைப்படங்கள்தான் என் மதநூல்!’ என்கிறார்.

இப்போது, அடுத்தடுத்த நாடுகளுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது நகுலின் இலக்கு!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick