வெச்ச குறி தப்பாது!

கொரியாவைச் சேர்ந்த லீ ஜங் அக் ஒரு பேப்பர் ராக்கெட் சாம்பியன். பேப்பர் ராக்கெட்டைப் பல விதங்களில் பறக்கவிடுவதாகட்டும், இலக்கை குறிவெச்சு அடிப்பதாகட்டும்... லீ கில்லி.

உலகமெங்கும் நடக்கும் சீரியஸான விளையாட்டுகளுக்கு நடுவே ஜாலியாக சில விளையாட்டுக்களும் நடக்கத்தான் செய்கின்றன. நம் ஊர் பள்ளிகளில் வகுப்பு நேரங்களில் நோட்டின் கடைசிப் பக்கத்தை கிழித்து ராக்கெட்விட்டு விளையாடுவது வழக்கம். சில நேரங்களில் டீச்சர் மேலேயும் விடுவோம். இதே விளையாட்டை சீரியஸாக விளையாடக்கூடிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உலக அளவில் பேப்பர் ராக்கெட் விட்டு விளையாடும் திறமைசாலிகளை ஒன்றாக இணைத்து ரெட்புல் நிறுவனம் வருடா வருடம் போட்டிகளை நடத்துகிறது. அந்த ராக்கெட் எவ்வளவு நேரம்  பறக்கிறது, எவ்வளவு தூரம் பறக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு  ஜெயிப்பவருக்கு பேப்பர் ராக்கெட் வேர்ல்ட் சாம்பியன் ஷிப் பட்டமும் கொடுக்கிறது.

அப்படிப்பட்ட ஒருவர்தான் கொரியாவின் லீ ஜங். இரண்டு விதங்களில் நடக்கும் இந்தப் போட்டியில் ஏ 4 ஷீட்டை நான்காக மடித்து களத்தில் இறங்கும் லீ ராக்கெட் விட்டால் அவ்வளவு சீக்கிரம் அது கீழே விழாது. இவர் குறிவைத்து எறிந்தால் எதிரில் இருக்கும் எதுவும் மிஸ்ஸாகாது. காற்றின் திசையைக் கச்சிதமாகக் கணித்து மாயாஜால வித்தைகளை நிகழ்த்திக் காட்டக்கூடியவர். ராக்கெட்டை பலூன்கள் மீது வீசி உடைத்திருக்கிறார். தர்ப்பூசணிப் பழம், ஆப்பிள் பழங்களின் மீதும் வீசியிருக்கிறார். இதில் ஆப்பிள் பழத்தின் மீது ஒரு நிமிடத்தில் 12 ராக்கெட்களை விட்டது கின்னஸ் ரெக்கார்ட்.

இனிமேல் பேப்பர் ராக்கெட்டை சாதாரணமா நினைப்பீங்க..?

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick