லேப்டாப்பிலும் செல்ஃபி!

மொபைல் மோகத்தைவிட மோசமானது, மொபைலில் செல்ஃபி எடுப்பது! அறிமுகமான வேகத்துடன் களேபரமாகப் பரவிய செல்ஃபி மோகத்தால், விதவிதமான துணைக்கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று, செல்ஃபி ஸ்டிக். மொபைல் போனை இந்த ஸ்டிக்கில் மாட்டிக்கொண்டு செல்ஃபி எடுக்கும்போது, சில சமயம் நல்லா வரும். சில சமயம் கேவலமாகவும் இருக்கும். ஏன் குட்டியூண்டு செல்போனை ஸ்டிக்குல மாட்டி எடுப்பானேன்... பிறகு, அவ்வளவா நல்லா இல்லைனு அழுவானேன்?அதற்காகவே ‘மேக்புக் ஸ்டிக்’ என்ற கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, பெரிய லேப்டாப்பையே ஸ்டிக்கில் மாட்டிக்கொண்டு செல்ஃபி எடுப்பது!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் ‘ஆர்ட்-404’ என்ற நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது. ஜான் யுவி, டாம் கேலி என்ற இருவரும் ‘மேக்புக் ஸ்டிக்’கை உருவாக்கிய கையுடன், நியூயார்க் நகர வீதிகளில் விதவிதமான செஃல்பிகளை எடுத்து அசத்தியிருக்கிறார்கள். ‘வாவ்... இதுல பொறுமையா, தெளிவா, அழகா, அம்சமா... பெரிய சைஸ் செல்ஃபி எடுக்கலாம்ல?’ என சிலாகிக்கிற பார்ட்டிகளைப் பிடித்து, சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்த ஜான்யுவி மற்றும் டாம் கேலியிடம் ‘எப்படி இந்த ஐடியா வந்துச்சு?’ என்று கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில்... ‘உங்களை மாதிரி செல்ஃபி பைத்தியங்களைத் திருத்த எங்களுக்கு வேற வழி தெரியலை!’’.

யெஸ்... இந்த மேக்புக் ஸ்டிக்குகள் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டவை அல்ல. சமூகத்தில் ‘செல்ஃபி’ மீது இருக்கும் மோகத்தைக் கிண்டல் செய்வதற்காக மட்டுமே!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick