சொல்வதெல்லாம் பொய்!

னக்கு பிரதமர் ஆவதே கனவு எனக் கூறிய சரத்குமாரைப் பார்த்து பயந்து போயிருக்கிறார் மோடி. தமிழகத் தலைவர்களோடு கலந்து ஆலோசித்து, 234 தொகுதிகளிலும் ச.ம.க வேட்பாளர்களே நிற்கட்டும் என மோடி கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 9000 கோடி ரூபாய், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் ஒதுக்கியிருக் கிறார்கள். அதேபோல், இனி எப்படியெல்லாம் பெயர் வைக்கலாம் என ஆலோசனை சொல்வதற்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கி வேலைக்கு ஆட்கள் எடுக்கப்போவதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் தேசியப் பற்றை அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெல்லும் போட்டிகளை விமரிசையாகக் கொண்டாட 8000 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்.

தேர்தல் விழிப்பு உணர்விற்காக நயன்தாரா, அஷ்வின் போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதேபோல், ரஜினியை வைத்தும் ‘சூரியன் உதிக்க இலை விரியும்’, ‘பம்பரம் விளையாடிக்கொண்டே மாம்பழம் சாப்பிடலாம்’ போன்றதொரு விளம்பரத்தையும் எடுக்கப்போகிறார்களாம்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்காமல் இருக்கும் இந்தியர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அமித் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘மோடியைவிட எனக்கு தேசப்பற்று அதிகம்’ என கெஜ்ரிவால் சொன்னதோடு நிற்காமல், அ.தி.மு.க எம்.எல்.ஏ போல், டெல்லியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் தேசியக்கொடியை வாயில் கவ்வியபடி, மூன்று மணி நேரம் ஜலபிரதட்சணம் செய்யப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

கேரள அரசு ‘பிரேமம்’ படத்துக்கு விருது வழங்காததை அடுத்து, தமிழக அரசாவது, படத்துக்குக் குறைந்தது 10 விருதுகள் தர வேண்டும், இல்லையேல் இந்தத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என ‘பிரேமம்’ தமிழ் ரசிகர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது!

- சத்யராணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick