கழுவிக் கழுவி ஊத்துறார்!

கே.ஆர்.கே-யை நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆனால், பாலிவுட்டில் இந்தப் பெயர் படா பிரபலம். யூ டியூபில், ட்விட்டரில் சினிமா விமர்சனம் எழுதினார் என்றால் ரத்தக்காவு வாங்காமல் விட மாட்டார். இதனாலேயே ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் எக்கச்சக்க ஃபாலோயர்கள். முழுப்பெயர் கமால் ரஷீத் கான். பட விநியோகம், அப்படியே தயாரிப்பாளர், நடிகர் எனப் பரிமாணம் அடைந்தவர் இப்போது துபாயில் வசிக்கிறார். ட்விட்டரிலும் யூ டியூபிலும் ஏன் இவ்வளவு கோபமாக எல்லாப் பிரபலங்களையும் வான்ட்டடாக வண்டியில் ஏறிக் கழுவி ஊற்றுகிறார் எனக் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் ஓட்டிப்பார்த்தால் ஒரு ஸ்டோரி இருக்கிறது.

முதல் சினிமா ஹீரோ என்ட்ரி ‘தேஷ்ரோஹி’ படம் 2008-ல்.  படத்தின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, எல்லாம் இவரே! ‘தேஷ்ரோஹி’ படத்தில் நவ்நிர்மாண் சேனாவை மறைமுகமாகத் தாக்கி பல காட்சிகளை வைத்து பட்டாசு கொளுத்தி இருந்தார். மோசமான மேக்கிங்கிலும் படத்தை எதிர்த்துக் காவிகள் போராட்டம் நடத்தி சில காட்சிகள் ஓடவைத்த சம்பவமும் நடந்தது. படத்துக்கு மகாராஷ்டிரா மாநில அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து ஜெயித்து படத்தை சக்சஸ்ஃபுல்லாக ரிலீஸ் செய்து அசத்தினார் கமால். ஆனால், படத்தின் மேக்கிங் செம மொக்கை. அதனால் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட், படம் வெறும் ஒரு கோடிக்குள் வசூல் செய்து பெட்டிக்குள் சுருண்டுகொண்டது. இதுதான் அவர் சூடுபட்ட கதை. சினிமாவுக்கு முழுக்குப்போட்டுவிட்டு முழுநேர விமர்சக அவதாரம் எடுத்தார். தன்னைக் கழுவி ஊற்றியவர்களை கழுவில் ஏற்ற முடிவெடுத்தார்.

மொக்கை, சூர மொக்கை, குப்பை, அடாசு என வார்த்தைகளில் பிரபலங்களைக் கோத்துவிட்டு ட்விட்டரில் தெறிக்க விடுகிறார். உச்சபட்சமாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்த தனுஷைக் கலாய்த்து சாதி ரீதியாக விமர்சனம் பண்ண, தகவல் தொழில்நுட்பக் குற்றம் 66 ஏ பிரிவு சட்டம் பாய்ந்தது. கானை முற்றிலும் இணையத்தில் இயங்கவிடாமல் தடை விதிக்க வேண்டும் எனப் பல தலித் அமைப்புகள் போராட்டத்தை அறிவித்து வழக்கு தொடுத்தன. கொஞ்சநாள் சைலன்ட் மோடுக்குப் போனவர் தனுஷின் மாமனார் மூலமாக மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். மே 23, 2014-ல் ‘கோச்சடையான்’ என்ற மொக்கைப் படத்தைப் பார்க்க மாட்டேன் என எழுதி ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். சரி இவரின் ஆக்டோபஸ் ட்வீட்டுகள் சினிமாப் பிரபலங்களோடுதான் என்று நினைத்தால், அப்படி எல்லாம் இல்லை. மோடி ஜியைக் கலாய்த்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ‘மோடி ஜெயிச்சா நாட்டைவிட்டுப் போயிடுறேன்’ என ட்வீட்டி பரபரப்புத் திரி கொளுத்தி இருந்தார். ஆனால், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துத் தன் பெயருக்குப் பதில் ஷாரூக் கான் பெயரைப் போட்டதுதான் இவர் பண்ணிய பெரிய தப்பு. ஷாரூக் கானை எல்லோரும் தாளித்து எடுக்க, யாரோ ஒரு நல்ல மனிதர் இவரது சுயரூபத்தைக் காட்ட சைலன்டாய் இவரின் ஒரிஜினலை எடுத்துப்போட ட்வீட் அக்கவுன்டை முடக்கிவிட்டு துபாய்க்கே பறந்துவிட்டார். அப்புறம் ஸாரி கேட்டது வேறு நடந்தது.

‘‘நான் நல்லவன்தான். என்னைக் கண்டு சினிமாப் பிரபலங்கள் பயப்பட வேண்டாம். மனதில் உள்ளதை விமர்சனமாகப் பேசி விடுகிறேன். இது தப்பா?’’ எனக் கேட்கிறார் கே. ஆர். கே.

நீ ரொம்பக் கெட்டவன்யா!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick