பரீட்சைக்கு நேரமாச்சு!

து எக்ஸாம் சீஸன்கிறதாலே... மாணவச்செல்வங்களின் பொதுநலன் கருதி அதிக மதிப்பெண்கள் பெற டிப்ஸ். இதை ஃபாலோ பண்ணி ‘ஸ்டேட் ஃபர்ஸ்ட்’ வாங்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை...

பரீட்சைக்கு முதல் நாள் எல்லாப் பாடத்தையும் ஆதி முதல் அந்தம் வரை வாசிச்சுடணும். அந்தப் பாடத்திலிருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் வாசிச்சது எதெல்லாம் நினைவில் இருக்கோ, எல்லாத்தையும் எழுதிடணும்.

நைட்டு கடுங்காபி போட்டுக் குடிச்செல்லாம் படிக்கக் கூடாது, அப்படி படிச்சா, மறுநாள் பரீட்சை ஹாலில் பதில் வராது, குறட்டைதான் வரும்.

கையெழுத்து நல்லா இருக்கோ இல்லையோ, கடனை உடனை வாங்கி கலர் பேனாக்கள் வாங்கி வெச்சுக்கணும். எல்லாத் தலைப்பையும் கலர் பேனாவில்தான் எழுதணும்.

அந்தக் கேள்விக்குத் தொடர்பான வார்த்தைகளை எழுதும்போது மட்டும் கொஞ்சம் அழுத்தி எழுதணும். அப்படி எழுதும்போது நாம சம்பந்தமில்லாமல் எழுதி வெச்சிருக்கிற சொந்தக்கதை, சோகக்கதையை அது மூடி மறைச்சிடும்.

எந்த பதில் எழுதுறதா இருந்தாலும் கேள்வியை பதிலின் ஆரம்பத்திலும் கடைசியிலும் எழுதணும். உதாரணமா, ‘உன் பெயர் என்ன?’ என்ற கேள்விக்கு ‘என் பெயர் என்னவென்றால் சூரியராஜ். இதுதான் எனது பெயர்’னு பதிலை ஜவ்வா இழுக்கணும்.

‘ஐந்து வரிகளுக்கு மிகாமல் விடை எழுது’னு சொல்லியிருந்தா, இன்னும் ஐந்து வரி சேர்த்து பத்து வரியில் பதில் எழுதணும். பத்து வரிகளில் விடையளினு கேட்டிருந்தால் இருபது வரியில் விடை எழுதணும்.

தலையைப் படிய வாரி, பவுடர் அடிச்சு பரீட்சைக்கு பவ்யமா கிளம்பிப் போகணும். சில நேரங்களில் சில டீச்சர்கள் நமக்குப் பதில் தெரியலைனா நம்ம மூஞ்சியைப் பார்த்து பாவப்பட்டு சொல்லித்தரவும் வாய்ப்பிருக்கு.

சாத்துக்குடி, பேரீச்சம்பழம், கொடுக்காபுளி போன்ற சத்தான பழங்களைச் சாப்பிடணும். அது பரீட்சையில் நாம் நல்ல மதிப்பெண் வாங்க வகை செய்யும்.

படிச்சதைக்கூட மறந்துடலாம். ஆனால், பரீட்சை ஹால் டிக்கெட்டை மட்டும் மறந்துடுவே கூடாது. அது அந்த நேரத்தில் பல டென்ஷன்களை உண்டு பண்ணும். அப்புறம் நாம குதர்க்கமா யோசிப்போம், ஊர் தாங்காது.

எல்லாத்துக்கும் மேல இந்த மாதிரி டிப்ஸ் சொல்றேன்னு யாராச்சும் சொல்லிட்டு இருந்தால் கேட்டுட்டு இருக்கக் கூடாது, படிச்சாதான் பரீட்சையில் மார்க் வாங்க முடியும். பேரீச்சம்பழம் ஜூஸ் சாப்பிட்டா கிடையாது!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick