இப்படியும் லவ் பண்ணலாம்!

ன்னமும் காதலிக்க ஐடியா வேண்டி ஐடியா மணிக்காகக் காத்து இருக்கும் நபர்களா நீங்க? சமூக வலைதளங்கள், மொபைல் அப்ளிகேஷன் வருகைக்குப் பின் பசங்க இப்போவெல்லாம் வேற லெவலில் ரொமான்ஸில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

ட்விட்டர்: பூ, இயற்கை காட்சி, சினிமாக் கதாநாயகிகள் என வைத்திருக்கும் ஐ.டி-களை நம்பாமல், உண்மையான புகைப்படம் வைத்திருக்கும் ஐ.டி-களை நம்ப வேண்டும். இதைத்தான் தூரத்தில் இருக்கும் பலாக்காயைவிட கிட்டத்தில் இருக்கும் கலாக்காயே சிறந்தது என முன்னோர்கள் வாட்ஸ் அப்பில் கூறியிருக்கிறார்கள். தினமும் நீங்கள் குளிக்கிறீர்களோ இல்லையோ, அந்த ஐ.டி எப்போதெல்லாம் ட்விட் செய்கிறது என்ற கால அட்டவணையையாவது மனப்பாடம் செய்திருக்க வேண்டும். ஏதேனும் உதவி எனத் தன் டைம்லைனில் தெரிவித்தால், அவ்வப்போது மட்டுமே உதவி செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால், வீட்டுல ஒட்டடை எடுக்கணும் ரீதியில் உதவிகள் செய்ய நேரிடலாம். டைம்லைனில் பேசுவதை, தனி சாட்டிற்குக் கொண்டு செல்வது உங்கள் திறமையில் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம்:
அட, இது இந்த ஃபோட்டோ பதிவு பண்ற அப்ளிகேஷன்தானே என்கிறீர்களா?. அதேதான் பாஸ். ஆனால், இதிலும் காதலில் கைகூடி வெற்றிக்கொடி நாட்டிய பலர் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஒருவர் அப்லோடும் புகைப்படத்திற்கு லைக் போடுவது என்பது அவர் நடக்கும்போது வணக்கம் சொல்வதைப் போன்றது. ஆனால், அதுவே நீங்கள் லைக் போட்டுவிட்டு, கமென்ட் போடுவது என்பது அவரை நிறுத்தி, கை குலுக்கிச் செல்வதைப் போன்றது. இப்போ சொல்லுங்க லைக் பெருசா, கமென்ட் பெருசா...?

பிறகு நீங்கள், உங்கள் அறிவின் மூலமாகவோ(அதற்கு வாய்ப்பே இல்லை என அறியும் பட்சத்தில்) நண்பர் அறிவின் மூலமாகவோ, ‘அட பி.சி.ராம் தோற்றார் போ’ என்கிற ரீதியில் லைட் எஃபெக்ட்டில் ஒரு புகைப்படம் அப்லோட வேண்டும். இதுக்குப் பெயர்தான் கவனம் ஈர்த்தல். ‘அட, இது எப்படிப் பண்ணினீங்க?’ என்ற கேள்வியைக் கேட்க வைத்துவிட்டால், உங்களுக்கு நீங்களே பின்னணியில் இளையராஜா பாடலை ஓட வைத்துக்கொள்ளலாம்.

ஸ்மூல்:
என்ன பேருடா இது என யோசிக்கிறீர்களா? இதுதான் பாடும் அப்ளிகேஷன். ஒரு பாடலின் கரோக்கி எனப்படும் பின்னணி இசை இந்த அப்ளிகேஷனில் இருக்கும். டூயட் பாடல் என்றால், ஏற்கெனவே ஒருவர் ஒரு குரலை மட்டும் பாடிவிட்டு, ஒரு பாடலை அப்லோடி இருப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அதில் போய் உங்கள் குரலில் பாடலைப் பாடி, அந்தப் பாடலை டூயட் பாடல் ஆக்க வேண்டியது மட்டும்தான். நம்ம குரல்தான் நல்லா இருக்காதேடா என எண்ணுபவர்கள், கேவலமாகப் பாடியிருக்கும் ஒரு குரலை குரல் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுதல் நலம்.

இதில் எதிலாவது வெற்றி அடைந்தால் மறக்காமல் சொல்லவும். நாங்களும் சிங்கிள்தான்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick