சொல்வதெல்லாம் பொய்!

அ.தி.மு.க சார்பாகக் கட்சியினருக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. யார் அதிக நேரம் குனிந்து நிற்பார்கள் எனப் போட்டி நடந்ததாகவும், அதில் வெற்றி பெற்றவர்கள், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் எனவும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டணி அமையாவிட்டால், தனித்துப் போட்டியிடத் தயார் என பா.ஜ.க-வின் தமிழிசை தெரிவித்து உள்ளார். மேலும், தற்போது பா.ஜ.க-விற்கு இருக்கும் ஒரே போட்டி தமிழருவி மணியனின் கட்சிதான் என உளவுத்துறை தெரிவிப்பதால், தமிழருவியை வென்றுவிட்டால், தமிழிசைதான் முதல்வர் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

‘போக்கிரி ராஜா’ படம் பார்த்துக் கொட்டாவி விட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாம். அதனால், காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாகி, புவி வெப்பம் அடைவதற்கு ‘போக்கிரி ராஜா’ படம்தான் காரணம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

தெலுங்கில் மெகா ஹிட் அடித்ததாகச் சொல்லப்படும் ‘டெம்பர்’ படத்தை தமிழில் சிம்புவை வைத்து ரீமேக் செய்ய இருக்கிறார்கள். படத்தை 2020-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் பேட்டியளித்து இருக்கிறார்.

அறிவாலயத்தில் தி.மு.க-வினருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் கருணாநிதி, ஸ்டாலினிடம் தேர்தல் செலவுகளுக்கான தொகையை எப்படி செலவு செய்வார்? என்று கேட்டார். ஸ்டாலின் சரியாகப் பதில் சொல்லாததால், இந்தத் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட மாட்டார் என கருணாநிதி அறிவித்து இருக்கிறார்.

கடந்த வாரம், நடந்த ஆசிய கோப்பைத் தொடரில், பங்களாதேஷ் ரசிகர்கள் செய்த போட்டோஷாப் அட்ராசிட்டிகளால் பயந்து போயிருக்கிறது போட்டோஷாப் நிறுவனம். உலகக்கோப்பை தொடரின்போது, பங்களாதேஷில் போட்டோஷாப் மென்பொருள் வேலை செய்யாது என அறிவித்து இருக்கிறார்களாம்.

ஆர்.எஸ்.எஸ் குழுவினரால் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு மக்களிடையே நல்ல பெயர் உண்டாவதால், தன்னையும் திட்டும்படி மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான், தான் இதுவரையில் ஆங்கிலச் சொற்கள் பேசியதில்லை எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார். தான் பயன்படுத்திய லூசு என்ற வார்த்தைகூட தொல்காப்பியத்திலேயே இருக்கிறது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

-சத்யராணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick